முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » உனக்குள்ளே நிம்மதி
அர்த்தமுள்ள இந்துமதம் - உனக்குள்ளே நிம்மதி
`தேடுங்கள்; கண்டடைவீர்கள்’ என்பது ஏசுநாதர் வாக்கு.
`எங்கே நிம்மதி? அங்கே கிடைக்குமா? இங்கே கிடைக்குமா?’ என்று தேடினால் நீங்கள் காணமாட்டீர்கள்.
அது உங்கள் உள்ளத்துக்கு உள்ளேயே ஒளி மயமாக நிற்கிறது.
பாண்டவர்களும், வனவாசம் புரிந்தார்கள்; ராமனும் வனவாசம் சென்றான்; தேவர்களும் ஒளிந்து வாழ வேண்டியிருந்தது.
கேட்பவர்களுக்கெல்லாம் வரம் கொடுத்த சிவபெருமானுக்கும் நிம்மதியற்ற காலம் இருந்தது.
நிம்மதிக் குறைவு என்பது எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தீர்கிறது.
பணக்காரனாயினும், ஏழையாயினும் வாழ்க்கைப் பயணத்தில், ஏதோ ஒரு சக்கரத்தில் காலைக் கொடுத்து விடுகின்றான்; கொஞ்சக் காலம் அவனை வாட்டி எடுக்கிறது.
ஜீரணிக்கத் தெரிந்தவனுக்கு மலை கடுகளவு; அது தெரியாதவனுக்கு கடுகு மலையளவு.
கொஞ்சம் மெளனத்தைக் கடைப்பிடியுங்கள். அதில் ஒருவகை நிம்மதியுண்டு.
`மெளனம் கலக நாஸ்தி’ என்பார்கள்.
அளந்து பேசி, அளந்து வாழ்கிறவனுக்கு அதிகபட்ச ஆசை கிடையாது.
ஆசை குறையக் குறையத் துன்பமும் குறைந்து போகிறது.
வாழ்க்கை கட்டுக்குள் வந்தால், மனமும் கட்டுக்குள் வந்து விடுகிறது; துன்பமும் கட்டுக்குள் நின்று விடுகிறது.
எதுவும் அளவு கடந்து போகும்போதுதான் ஒரு எதிரொலியைக் கொண்டுவந்து காட்டுகிறது.
இருட்டு வெளிச்சம், இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகக் கருதும்படி பகவான் கீதையிலே போதித்தான்.
பகலிலே, குருடனுக்கும் கண் தெரியும். ஆனால், இருட்டிலே எவனுக்குக் கண் தெரிகிறதோ அவனே ஞானி.
முதுகு சொரணையற்றுப் போய் எவனுக்கு வலி தெரியாமல் போய் விடுகிறதோ, அவனே நிம்மதியடைந்தவன்.
`உடம்பிலுள்ள எல்லா வாசல்களையும் செம்மையாக அடக்கி, மனத்தை உள்ளேயே நிலை நிறுத்தி, உயிரை அறிவோடு நன்றாக நிலைநாட்டித் தியானத்தைக் கைக்கொண்டு என்னையே நினைத்தவனாய் எவன் தன்னை மறந்து விடுகிறானோ, அவன் பரம்பொருளை அடைகிறான்’ என்கிறான் பகவான் கீதையிலே.
நீங்கள் பரம்பொருளை அடைகிறீர்களோ இல்லையோ… நிம்மதியை அடைகிறீர்கள்.
பகவத்கீதையிலே, `க்ஷேத்ரம்’ பற்றியும் `க்ஷேத்திரக்ஞன்’ பற்றியும் பேசப்படுகிறது.
`க்ஷேத்திரம்’ என்பது உடல், `க்ஷேத்திரக்ஞன்’ என்பது உயிர்.
எது நிம்மதி இழக்கிறது? க்ஷேத்திரமா? க்ஷேத்திரக்ஞனா?
உடலுக்கு நிம்மதி இல்லையென்றால், மருத்துவன் உண்டு. உயிருக்கு நிம்மதி இல்லையென்றால் நீங்களே மருத்துவர்கள்.
கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த புத்தியும் தலைமுறைக்கு வரமாட்டா.
இந்த நூலில் கண்டபடி, நீங்கள் நடந்து கொண்டு விட்டாலும் கூட, உங்களை நீங்களே வாதித்துக் கொண்டிருந்தால் நெஞ்சுக்கு நிம்மதி வராது.
ஆன்மாவின் சொரூபத்தை உணர்ந்து. அதன் இயக்கத்திற்கு ஒத்துழைப்பதுதான் தேகம் என்பதை அறிந்து ஒழுங்காக இயங்கினால், நிம்மதி நெஞ்சுக்குள்ளே இருப்பதைக் காணலாம்.
அது ஒன்றும் கடையில் விற்கும் கத்திரிக்காய் அல்ல… வசதியுள்ளவன் வாங்கிக் கொள்வதற்கு!
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிம்மதி, என்பது, கட்டுக்குள், நீங்கள், கொடுத்த - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்