முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » ஆரோக்கியத்தில் நிம்மதி
அர்த்தமுள்ள இந்துமதம் - ஆரோக்கியத்தில் நிம்மதி
`நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்’ என்று உருகினார் ஒருவர். அதுபற்றி நான் `அர்த்தமுள்ள இந்து மதம்’ நான்காம் பாகத்தில் கூறியுள்ளேன்.
நோய் இல்லாமலிருக்கச் சில வழிகளையும், உணவு முறைகளையும் அதில் நான் கூறியுள்ளேன். அதில் விட்டுப் போன சிலவற்றை இங்கே கூறுகிறேன்.
சாப்பாட்டிலே தினம் ஒரு கீரை சேர்த்துக் கொண்டு வர வேண்டும். மத்தியானம் மட்டும், அந்தக் கீரை பொரியலாகவோ, மசியலாகவோ, மண்டியாகவோ வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தக் கீரையுமே வயிற்றில் மலம் கட்டாமல் பார்த்துக் கொள்ளும்.
முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பருப்புக் கீரை, ஆரைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக்கீரை, பசளைக்கீரை, கோவைக்கீரை, குறிஞ்சாக்கீரை, புளிச்சங்கீரை, மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை.
மேற்குறித்த கீரைகளில் ஏதாவது ஒன்றைப் பகலிலே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் மத்தியானத்தில் `தூதுவளை’ ரசம் வைத்துச் சாப்பிட வேண்டும்.
அதில் ஜலதோசம் பிடிக்காது; சளி கட்டாது; குளிர்ந்த தண்ணீரில் குளித்தால் கூட எதுவும் செய்யாது.
கோடை காலத்தில் மணத்தக்காளிக் கீரை சூப் வைத்துச் சாப்பிட வேண்டும்.
அது உடம்பில் இருக்கும் நெருப்பை அப்படியே அணைத்து விடும். வாய்ப்புண், வயிற்றுப் புண் எல்லாவற்றையும் உடனடியாக ஆற்றிவிடும்.
சித்திரை, வைகாசி அறுபது நாளும் தொடர்ந்து பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டு வந்தால், பகலிலேயே நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பார்கள்.
அகத்திக்கீரை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அற்புதமான மருந்து. நுரையீரலைப் பாதுகாக்கிறது; உடம்பைச் சத்தோடு வலுவாக வைத்திருக்கிறது; மயிர்க்கால்களெல்லாம் வியர்வையை வெளியிடும் சக்தியைத் தெளிவாகப் பெற்று விடுகின்றன. `வயிற்றுப் புண்ணுக்கு அகத்திக்கீரை’ என்றொரு பழமொழியே உண்டு.
சர்க்கரை வியாதிக்கு முருங்கைக்கீரை கண்கண்ட மருந்து. அது பசியையும் தாங்கும்; பஞ்சத்தையும் தாங்கும்.
நாட்டிலே பெரும் பஞ்சம் வந்தபோது வரகு அரிசிச் சோறும், கோவைக்காய்ப் பொரியலும், முருங்கைக்கீரை வதக்கலும் தானே மக்களைக் காப்பாற்றின.
முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து உண்டு; வைட்டமின் வகைகள் அதிகம் உண்டு. முருங்கைப்பூ, ஆண்மை நரம்புகளை முறுக்கேற்றும்; முருங்கைக்காயும் அப்படியே.
அப்படி ஒரு மரத்தைப் படைத்ததற்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அது ஏழைகளுக்காக இறைவன் அளித்த வரம்.
கிராமத்திலே ஒரு நாடோடிப் பாடல் உண்டு.
மந்தையிலே மாடு மேய்க்கும்
மச்சானுக்கு மத்தியானம்
மொந்தையிலே சோற்றைப் போட்டு
முருங்கைக் கீரையை வதக்கிக் கொட்டி
- என்று அந்தப் பாடல் துவங்கும்.
நகரத்தில் உடம்புக்குச் சக்தி இல்லாமற் போனதற்கு முருங்கைக் கீரை சாப்பிடாதது தான் காரணம்.
முருங்கைக்கீரை கிடைப்பது போல், அவ்வளவு சுலபத்தில் ஆரைக்கீரை கிடைக்காதென்றாலும், முருங்கைக் கீரையைப் போல் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் சக்தி அதிலும் உண்டு.
`ஒரு காலடி நாலிலைப் பந்தலடி’ என்று ஔவையாருக்கும், கம்பருக்கும் தகராறு வந்த போது ஔவையாரால் சொல்லப்பட்டது, இந்த `ஆரைக்கீரை’யைப் பற்றி சொல்லப்பட்டதேயாகும்.
மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை குடிகாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, மாத்திரைகள் இதிலிருந்துதான் செய்யப்படுகின்றன.
இது கொஞ்சம் கசக்கும்; சாறு பிழிந்தும் சாப்பிடலாம்; மசித்தும், துவையலரைத்தும், சூப் வைத்தும் சாப்பிடலாம்.
குறிஞ்சாக் கீரையும், வயிற்றுப் புண்ணுக்கும் சர்க்கரை வியாதிக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும்.
சிறுநீர் நிறையப் போக வேண்டுமென்றால், மாத்திரை சாப்பிடாதீர்கள்; பசலைக்கீரை சாப்பிடுங்கள்.
எந்தப் பெண்ணும், கர்ப்பமான நாளிலிருந்து ஆறு மாத காலம் வரை, தொடர்ந்து பசலைக்கீரை சாப்பிட்டே ஆக வேண்டும். அதிலும் தலைப் பிரசவத்துப் பெண் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்.
இல்லையென்றால் `லாஸிக்ஸ்’ மாத்திரை போட வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அந்த மாத்திரை போட்டால் சிறுநீரோடு பொட்டாஷியம் போய்விடும். சோகை பிடித்தது போலாகிவிடும். பிறகு, அதைச் சரிக்கட்ட தக்காளி ஜூஸோ, ஆரஞ்சு ஜூஸோ சாப்பிட வேண்டிவரும். பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
தாய்மார்கள், கர்ப்பமுற்ற பெண்களுக்குத் தயவு செய்து ஆறுமாத காலம் பசலைக் கீரை சமைத்துக் கொடுங்கள். கருவுற்றிருக்கும் பெண், பசலைக் கீரையைத் தொடர்ந்து முறையாகச் சாப்பிட்டுக் கொண்டு வந்தால், பிரசவம் சுலபமாக அமையும்; அவஸ்தை இராது. அதோடு சிறுநீர் பிரிவதற்கு வாழைத்தண்டும், கீரைத்தண்டும் கண்கண்ட நல்ல மருந்துகள்.
இரண்டு வகையான உணவுகளைப் பற்றி, உலகத்தில் இரண்டு வகையான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.
சைவ உணவு நல்லதா? மாமிச உணவு நல்லதா?
ஹிட்லர் தனது ரகசிய சம்பாஷணைகளில் இப்படிச் சொல்கிறார்:
`சைவ உணவைப் போன்று உடலுக்கு வலிமையும், ஆரோக்கியமும் வேறு எதிலும் இல்லை!’
மிருகங்களிலே கூட மாமிசம் சாப்பிடுகின்ற மிருகங்கள் கொஞ்சத் தூரம் ஓடினாலும், நாக்கைத் தொங்கப் போட்டு விடுகின்றன.
உதாரணம்: நாய், நரி, சிங்கம், புலி.
காய்கறி உணவு அருந்தும் மிருகங்கள், அவை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எவ்வளவு வேகமாக ஓடினாலும் நாக்கைத் தொங்கப் போடுவதில்லை.
உதாரணம்: யானை, குதிரை, ஒட்டகம், மான், பன்றி.
மாமிசம் சாப்பிடுவது, மதத்துக்கு விரோதமானது அல்ல என்றாலும், உடம்புக்கு அதனால் நன்மையை விடத் தீமையே அதிகம். அதிலுள்ள `புரொட்டீன்’களைக் காய்கறிகளிலேயே பெற்று விடலாம்.
வங்காளத்து இந்துப் பிராமணர்கள் மீன் சாப்
பிடுகிறார்கள்; மீனை அவர்கள் காய்கறி வகைகளிலேதான் சேர்க்கின்றார்கள்.
வேறு சிலர் முட்டை சாப்பிடுகிறார்கள். முட்டையிலுள்ள `வெள்ளைக் கரு’வை எல்லோருமே சாப்பிடலாம் என்பது என்னுடைய கருத்து.
உணவில் அதிகம் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இது இதயத்திற்கு நல்லது.
வாயுத் தொல்லை இல்லாதவர்களுக்கு உருளைக் கிழங்கு நல்லது.
மொத்தத்தில் நகரத்து உணவை விட, கிராமத்து உணவு நீண்ட நாள் வாழ வைக்கிறது.
இறைவனுக்கு வைக்கப்படும் நைவேத்தியங்கள் மருத்துவ முறைப்படி ஆனவை.
பால் அதிகம் சாப்பிடுவது ஒன்றே, தேவையான புரதச் சத்துகளை உடலுக்குத் தந்து விடும்.
பதினெட்டுச் சித்தர்களில், `தேரையார்’ என்று ஒருவர் இருந்தார். எமனை விரட்டுவதற்கே அவர் சில வழிகளைச் சொல்கிறார்.
அந்தப் பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் கீழே தருகிறேன்.
`பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில்
குளிப்போம்.
பகல் புணரோம்; பகல் துயிலோம்; பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கீரை, வேண்டும், உண்டு, உணவு, சாப்பிட, அதிகம், முருங்கைக்கீரை, என்று, முருங்கைக், மாத்திரை, சாப்பிடலாம், சர்க்கரை, சேர்த்துக், தொடர்ந்து, அதில், நான் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்