முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » இல்லறத்தில் நிம்மதி
அர்த்தமுள்ள இந்துமதம் - இல்லறத்தில் நிம்மதி
நடத்தை கெட்ட மனைவி ஒரு நரகம்.
மனைவி நடத்தை கெட்டவளாக இருந்தால், அவளை விட்டு ஒதுங்கி விடலாம்.
ஆனால், கோபக்காரியாகவோ, குணங்கெட்டவளாகவோ இருந்தால், அந்த மனைவியைத் திருத்தி வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும்.
பண்பான மனைவி கிடைத்தும், கோபதாபங்களினால் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக் கூடாது.
தகராறு இல்லாத குடும்பம் இல்லை.
`வீட்டிற்கு வீடு வாசற்படி’ என்பார்கள்.
`ஒவ்வொரு கூந்தலிலும் பேனிருக்கும்’ என்பார்கள்.
எறும்பின் உடம்பு, அதன் கையால் எட்டுச் சாண்.
`யானைக்குத் தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே’ என்று கவலையிருந்தால், `அணிலுக்கு உடம்பு போதவில்லையே’ என்ற கவலை உண்டு.
ஏழைக்குச் சாப்பாட்டுப் பிரச்சினை என்றால், பணக்காரனுக்கு வருமான வரிப் பிரச்சினை.
பொருளாதாரம் சரியாக இருந்தாலும், கணவனோ தாரமோ சரியாக இல்லாத குடும்பங்கள் உண்டு.
இரண்டு பேரும் சரியாக இருந்தாலும், பொருளாதாரம் சரியாக இல்லாத குடும்பங்கள் உண்டு.
காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்களே, கட்டிலைப் பிரித்துப் போட்டுக் கொண்டதுண்டு.
பெற்றோர் பார்த்துப் பேசி முடித்த திருமணத்தில், பேரன்பு வெள்ளம் பெருகியதும் உண்டு.
அன்பிருந்தும், பணம் இருந்தும், சந்ததி இல்லாத குடும்பங்கள் உண்டு.
சந்ததி பெருகிக் கிடந்தும், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவோர் உண்டு.
கிராமங்களில், `ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன?’ என்பார்கள்.
அமெரிக்காவில் பகல் என்றால், இந்தியாவில் இருட்டு.
அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும். நாம் மட்டுமே சிரமப்படுவது போலவும் சில பேருக்குப் பிரமை.
ஒன்றை மட்டுமே உறுதியாக நம்புங்கள்.
பிரச்சினை இல்லாத குடும்பமே இல்லை.
`ஐயோ நிம்மதி இல்லையே…’ என்று அலுத்துக் கொள்ளாதவனே இல்லை.
அந்த நிம்மதியைத் தேடி அலைவதில் பயனில்லை.
அது உங்கள் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறது.
வெளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் போதே, பிரச்சினையோடு திரும்பக் கூடாது.
மனைவியும், சில கேள்விக்குறிகளோடு கணவனை வரவேற்கக் கூடாது.
எதையும் அடித்துப் பேசக்கூடாது; இடித்துச் சொல்லக்கூடாது.
`நீங்கள் வாங்கி வந்த காய்கறி மகா மட்டம்’ என்று மனைவி சொன்னால், `எந்த நாய் சொன்னது’ என்று கேட்கக் கூடாது;
`தப்பாகத்தான் வாங்கி வந்துவிட்டேன்’ என்று ஒப்புக் கொண்டுவிட வேண்டும்; பிரச்சினை அதோடு முடிந்துவிடும்.
`சாப்பாடு மகா மட்டம்’ என்று கணவன் சொன்னால், `எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான்; வேண்டுமானால், உங்க அம்மா வீட்டில் போய்ச் சாப்பிடுங்கள்’ என்று சொல்லக் கூடாது.
`இன்றைக்கு என்னவோ உடம்புக்கே சரியில்லை. படுத்துக் கிடந்தேன்; நாளைக்கு நன்றாகச் செய்து வைக்கிறேன்’ என்று சொல்ல வேண்டும்.
மனைவி நல்ல புடவை கட்டினால், கோபித்துக் கொள்ளக்கூடாது. `இன்னும் நல்ல புடவை கட்டம்மா! எவ்வளவு செலவானாலும் வாங்கித் தருகிறேன்’ என்று சொல்ல வேண்டும்.
மனைவி குளித்துவிட்டு வரும்போது, `இப்போதுதான் நீ மகாலட்சுமி’ என்று புகழ வேண்டும்.
கணவன் வெளியிலிருந்து வரும்போது மனைவி, `ஐயய்யோ! வியர்த்திருக்கிறதே, உடம்பு மெலிந்திருக்கிறதே’ என்று புலம்ப வேண்டும்.
மனைவியைக் கணவன், `அம்மா’ என்றே அழைக்க வேண்டும். மனைவி கணவனை `ஐயா’ என்றே அழைக்க வேண்டும்.
சில குழந்தைகளுக்குப் பிறகு, மனைவி கணவனுக்குத் தாயாகி விடுகிறாள்; கணவனே மனைவிக்கும் தாயாகி விடுகிறான்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, மனைவி, வேண்டும், உண்டு, இல்லாத, கூடாது, சரியாக, பிரச்சினை, கணவன், இல்லை, குடும்பங்கள், உடம்பு, என்பார்கள் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்