முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » சேவையில் நிம்மதி
அர்த்தமுள்ள இந்துமதம் - சேவையில் நிம்மதி
உங்களில் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பிச்சையேற்கும் சந்நியாசிகள் இருக்கிறார்கள் அல்லவா? எங்கள் நாட்டில் அது போன்று ஓர் ஒழுக்க முறையைப் பின்பற்றும் ஒரு பரம்பரை இருக்கிறது. நான் அதைச் சார்ந்தவன். விளங்கக் கூற வேண்டுமானால் ஆடை முதலியன அதிகம் இன்றி வீடுதோறும் சென்று பிச்சை ஏற்று அதனால் உயிர் வாழ்ந்து, மக்கள் விரும்பும்போது உபதேசித்து, கிடைத்த இடத்தில் உறங்குவது போன்ற ஒரு நெறியைப் பின்பற்றுவோர், ஒவ்வொரு பெண்மணியையும், `தாயே’ என்றுதான் அழைக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணையும் சிறுமியையும் கூட `அம்மா’ என்றுதான் அழைக்க வேண்டும். இது தான் என் நாட்டுப் பழக்கம்.
மேற்கு நாட்டுக்கு வந்தும் அதே பழக்கம் நிலைபெற்ற காரணத்தால், பெண்களைப் பார்த்து `ஆம் தாயே’ என்ற போது அவர்கள் திடுக்கிட்டார்கள். அவர்கள் ஏன் அப்படி அஞ்சி நடுங்க வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை.
பிறகே காரணத்தைக் கேட்டறிந்தேன்.
`தாய்’ என்றால் வயது முதிர்ந்தவள் என்று அவர்கள் எண்ணுவதே அதற்குக் காரணம்.
மிகச் சிறந்ததான, தன்னலங் கருதாத, துயரெல்லாம் பொறுக்கும், என்றும் மன்னிக்கும் தாய்மையே இந்தியப் பெண் இனத்தின் இலட்சியம். மனைவி, பின்னே நிழல் போன்று நடந்து வருவாள். மனைவி, தாயின் வாழ்க்கையை அடியொற்றி நடக்க வேண்டும். அதுவே அவள் கடமை. ஆனால், தாயே அன்பின் உருவம்; அன்னையே வீட்டை ஆள்பவள்; வீட்டிற்குத் தலைவியும் அவளே.
குழந்தை குறும்பு செய்தால், அதைக் கண்டிப்பவன் தந்தை. எப்போதும் குழந்தைக்கும், தந்தைக்கும் இடையே புகுந்து அணைப்பவள் தாய். இது இந்தியாவில் உள்ள நிலை.
இங்கே இதற்கு நேர்மாறாய் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். குழந்தையைக் கடிந்து கொள்வது தாயின் தொழில்; பாவம் அப்பாவியான தந்தை குறுக்கிட்டுச் சமாதானம் செய்பவன்.
இலட்சியங்கள் எப்படி வேறுபடுகின்றன; கவனித்தீர்களா?
நான் குறை கூறுவதாக எண்ணக் கூடாது. நீங்கள் செய்வது முற்றிலும் நன்றே,
ஆனால், எங்கள் வழியோ பல ஊழிகளாய்ப் போதிக்கப்பட்டு வழிவழியாக வருவது.
பிள்ளையைச் சபிக்கும் தாயைப் பற்றி நீங்கள் கேள்விப்பட இயலாது. அவள் சுபாவம் எப்போதும் மன்னிக்கும் சுபாவமே! எப்பொழுதும் மன்னிப்பே! `பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே’ என்று சொல்வதற்கு மாறாக, நாங்கள் எப்போதும் `தாயே’ என்றுதான் கூறுவோம்.
அக்கருத்தும், அச்சொல்லும் இந்தியர் நெஞ்சிலே என்றும் எல்லையற்ற அன்புடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. நிலையற்ற நம் உலகிலே, அன்னையின் அன்பே ஆண்டவன் அன்பிற்கு அண்மையிலே அமைந்து கிடப்பது.
`அம்மா தாயே கருணை காட்டுக; நான் தீயோனாக, பல குழந்தைகள் தீயவர்களாக இருந்திருக்கிறார்கள்; ஆனால், தீய தாய் ஒரு போதும் இருந்ததில்லை’ என்றார் மகான் ராமப்பிரசாதர். இதுதான் இந்தியாவின் நிலை.
அத்தகைய தாயைத் தெய்வமாகக் கருதி, அவளுக்குச் செய்யும் சேவையை முதற்சேவையாகக் கொள்ளவேண்டும்.
நல்ல மனைவி வாய்த்தவன், அந்த மனைவிக்கே கூடச் சேவை செய்வதில் தவறில்லை.
சேவை தாயிடம் தொடங்கி, தாய் நாடு என்று வளர்ந்து, தெய்வ சேவையில் முடிவடைகிறது.
இத்தகைய சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன், இருக்கின்ற ஆடைகளை அணிந்து கொள்ளுவான்; ஆனால் அதை அழுக்கில்லாமற் பார்த்துக் கொள்ளுவான்.
கிடைக்கின்ற உணவைச் சாப்பிடுவான். ஆனால், அது ஆரோக்கியமானதா என்பதை மட்டும் கவனிப்பான்.
எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம்.
இந்த நிலையை, `இயக்கத்தில் இயங்காமை’ என்பார்கள்.
அதாவது இயங்கிக் கொண்டே இயங்காமல் இருப்பது.
கடலின் மேற்பகுதி இயங்கும்போது அடிப்பகுதி இயங்காமல் இருக்கிறதல்லவா? அதுபோல.
ஒரு நாள் சமைக்க முடியாது என்று மனைவி படுத்து விட்டால், இவன் தானே சமையல் செய்வது என்று சந்தோஷமாக ஆரம்பிப்பான்; அதைப் பார்த்து அவளே வந்து சேர்ந்து கொள்வாள். நிம்மதி வந்து விடும்.
அடம் பிடிக்கின்ற பிள்ளையை அடிக்க மாட்டான்; அரவணைத்துக் கொண்டு போவான்.
துரோகம் செய்கின்ற நண்பர்களை மன்னித்து விட்டு, விலகி விடுவான்.
கூலியைக் குறைத்துக் கொடுக்கும் முதலாளிக்கு `கடவுள் கூலி கொடுப்பார்’ என்று நிம்மதியடைவான்.
நோய் வரும்போது, `இது கர்மவினை’ என்று ஆறுதல் அடைவான்.
கடன் வரும்போது, அமைதியாக அதனைச் சமாளிப்பான்.
தாயின் சேவையில் வாழ்வைத் தொடங்குகிறவன், தர்மம் தவறிப் போக மாட்டான்.
இறுதியில் தெய்வத்தோடு ஐக்கியமடைவான்.
உலகத்துக்கு அவனே தெய்வமாகக் காட்சியளிப்பான்.
இப்போதும் சேவையைப் பற்றி உங்களிடம் பேசுவதற்கு நான் காஞ்சிப் பெரியவர்களையே துணைக்கு அழைக்கிறேன்!
மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லாப் பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்கு சேவை செய்வதே. சேவை என்று தெரியாமலே, அனைவரும் நமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு, நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டுமென்கிறேன்.
நமக்கு எத்தனையோ கஷ்டங்கள். உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை இத்யாதி இருக்கின்றன. நம் சொந்த கஷ்டத்திற்கு நடுவில் சமூக சேவை வேறா என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.
அதோடு கூட, `அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால் தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாய் பகவான் நிச்சயமாக நம்மைச் சொந்தக் கஷ்டத்திலிருந்து கை தூக்கி விடுவான். ஆனால், அதை இப்படி ஒரு லாப-நஷ்ட வியாபாரமாக நினைக்காமலே பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியார் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும், நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு, அந்த வழியில் மேலும் மேலும் செல்லுவோம்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடு போன்ற ஜீவன்களுக்கும் சேவை செய்ய வேண்டும். பழைய நாளில், கால்நடைகளுக்காகவே குளம் வெட்டுவது, அவை உராய்ந்து தினவு தீர்த்துக் கொள்வதற்கு அங்கங்கே கல் போடுவது என்று வைத்துக்கொண்டிருந்தார்கள். தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல் கொடுப்பதை `கோ க்ராஸம்’ என்று பெரிய தர்மமாகச் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. `க்ராஸம்’ என்றால் ஒரு வாயளவு. இங்கிலீஷில் புல்லை நிக்ஷீணீææ என்பது கூட இதிலிருந்தே வந்திருக்கலாம்.
யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவசம், முதலியன இந்த உலகத்திலிருப்பவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற உலகத்திலிருப்பவர்களுக்கும் நம் சேவையை விஸ்தரிக்கின்றன என்ற உணர்வோடு அவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மந்திரத்தோடு சேர்த்துச் செய்யப்படும் சேவை.
நம்மைப் போல் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லாரும் ஒரு சங்கமாக, ஒரே அபிப்பிராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும் போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும், நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும் அத்தியாவசியமான அவமானத்தையும் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.
பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கின்ற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவிடவேண்டும்.
`வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுதுபோக்குவது ஒரு தப்பா’ என்று கேட்பீர்கள்.
உங்களுக்குச் சொல்கிறேன்: பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்.
கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான்; வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும், உள்ளே அத்தனையும் பரோபகாரச் சேவையைத்தான் செய்தான். எத்தனை பேருடைய எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான். குன்றைத் தூக்கிப் பிடித்தது, விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால், கோபர்களைக் காப்பதற்காகவே அத்தனை பெரிய மலையைப் பாலகிருஷ்ணன் தூக்கினான்.
சின்னக்குழந்தை, விஷம் கக்கும் காளிங்கன் படத்திலே நர்த்தனம் செய்தது. வெளியில் பார்த்தால் விளையாட்டு; உண்மையிலேயே அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காகச் செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ சேவை. `அவனைப் போல் விளையாடியவனும் இல்லை; அவனைப் போல சேவை செய்தவனும் இல்லை’ என்று கிருஷ்ண பரமாத்மாவின் உதாரணத்தில் பார்க்கிறோம். லெளகீக சேவை மட்டும் இல்லை; ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளி கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான்; சிரித்துக் கொண்டே சாந்தமாக இவ்வளவையும் செய்தான். அதனாலேயே, அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிடம் சிரிப்பும், சாந்தமும் எப்போதும் இருக்க வேண்டும். தைரியம், ஊக்கம் இவற்றோடு.
பகவான் எடுத்த பல அவதாரங்களில், கிருஷ்ணாவதாரத்தில் தான் சேவை அதிகம். ராமாவதாரத்திலும் சேவைக்கென்றே ஆஞ்சநேய ஸ்வாமி வந்தார். இவர்கள் இருவரையும் ஸ்மரித்து, நாமும் சுத்தமான உள்ளத்துடன், எந்த சுயநலமும் கருதாமல் எவ்வித விளம்பரத்துக்கும் ஆசைப்படாமல் சேவை செய்ய வேண்டும்.
நமக்குத் `தீட்டு’ ஏற்பட்டால் அச்சமயத்தில் உலகோடு சேர முடியாமல் ஒதுங்கி இருக்கிறோமல்லவா! அவ்விதமே உலகுக்கு உபயோகமாகச் சேவை செய்யாத ஒவ்வொரு நாளும் நமக்குத் தீட்டு நாள் என்று கருதி, அவரவர் தம்மாலான சேவைகளில் ஈடுபட வேண்டும்.
ஜீவராசிகளுக்குச் செய்கிற உபகாரத்தால், சகல பிராணிகளுக்கும் மாதா, பிதாவாக இருக்கப்பட்ட பரமேசுவரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர், திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறார்.
`நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயில்
படமாகக் கோயில் பகவற் கதாமே’.
இதற்கு அர்த்தம், `மக்களுக்குச் செய்கிற உதவி சாக்ஷாத் ஈசுவரப் பிரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும்’ என்பது.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவை, என்று, வேண்டும், செய்ய, ஆனால், மனைவி, நான், விளையாட்டு, எப்போதும், கொண்டு, ஒவ்வொரு, செய்தான், செய்கிற, எத்தனை, செய்வது, தாய், என்றுதான், என்பது, தாயின், அதுவே, அவர்கள், எங்கள், நீங்கள் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்