முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » துன்பத்தில் இருந்து விடுபட உத்தமர்களுடன் சேருங்கள்
அர்த்தமுள்ள இந்துமதம் - துன்பத்தில் இருந்து விடுபட உத்தமர்களுடன் சேருங்கள்
`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பார்கள்.
பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான்.
யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது.
ஏன், வர்ணங்களிலேகூட ஒரு மனோதத்துவம் உண்டு.
கறுப்பு வர்ணத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனுக்குக் கல்மனம்; வெள்ளை நிறத்தைப் பார்த்தால் தூய்மை; பச்சை தயாள சிந்தை; மஞ்சள் மங்கலமுடையது.
வாசனையிலும் அந்தப் பேதம் உண்டு.
நறுமண மலர்களை முகரும் போது உன் மனமும், முகமும் பிரகாசிக்கின்றன.
நாற்றத்தை முகரும் போது உனக்கே அருவருப்பு.
அதுவே உனக்குப் பழக்கமாகி விட்டால், உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எதிரிகளுக்கு அருவருப்பு.
சகவாச தோஷமும் இதுதான்.
நான் பன்னிரண்டு வயதில் தமிழ் வித்துவான் பரீட்சையில் புகுமுக வகுப்பு எழுதினேன். அப்போது அமராவதி புதூர் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அங்கேயே வித்துவான் பட்டப்படிப்புத் தொடங்கினார்கள். அப்போது வித்துவான் பட்டப்படிப்புக்கு இவ்வளவு ஆங்கிலப்படிப்பு வேண்டும் என்ற விதிமுறை இல்லை.
முதல் வருடம் `என்ட்ரன்ஸ்’ பாஸ் செய்தேன். அப்போது எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ராமநாதபுரம் வித்துவான் ராமசாமிப் பிள்ளை. அவரது எளிய தோற்றம் என்னைக் கவர்ந்தது.
அத்தோடு நான் கிராமத்துக்கு வந்துவிட்டேன்.
வித்துவான் படிப்பைத் தொடர வேண்டும் போல் தோன்றிற்று.
பக்கத்து ஊரான கீழ்ச்செவல்பட்டியில் இருந்த வித்துவான் முத்துகிருஷ்ண ஐயரிடம், தினமும் நான்கு மைல்கள் நடந்து போய்த் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டேன்.
அதையும் முழுமையாகக் கற்கவில்லை.
குருகுலத்திலும், பிறகு சென்னைக்கு வந்ததும், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களிடம் தான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
குருகுலத்தில் நான் படித்த போது அவர்தான் தலைமை ஆசிரியர்.
அவர்களிடம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்; பழகியும் வந்தேன்.
அந்தப் பழக்கத்தில் தான், எனக்குப் பணிவு ஏற்பட்டது.
புதுக்கோட்டை, ராயவரத்தில் ஒரு பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்த போது, சில நண்பர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அந்தத் தொடர்பில்தான் மதுப்பழக்கம் ஆரம்பமாயிற்று.
பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.
திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.
நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.
அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.
பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.
1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.
இன்று எனக்கே நான் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறேன்.
பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:
ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி
நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.
அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.
அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், வித்துவான், போது, தொடர்பு, ஏற்பட்டது, அவர், கொண்டேன், அப்போது, தமிழ், அந்தப், கற்றுக் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்