முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » குடும்பம் என்னும் தர்மம்
அர்த்தமுள்ள இந்துமதம் - குடும்பம் என்னும் தர்மம்
ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.
தமிழர் ஒருவர் வெளி நாட்டிற்குச் சென்றிருந்தாராம். அங்கு ஓர் அமெரிக்கத் தம்பதிகளைச் சந்தித்தாராம். அவர்கள் ஹோட்டலுக்கு வெளியிலேயே கட்டிப் பிடித்துக்கொண்டு நின்றார்களாம்.
தமிழரைப் பார்த்து அந்த அமெரிக்கர், “இவள் எனது மூன்றாவது மனைவி” என்று அறிமுகப்படுத்தி வைத்தாராம்.
“முதல் இருவரையும் வெட்டி விட்டதாக” வேறு சொன்னாராம்.
“ஒத்து வரவில்லை என்றால் ஒதுக்கிவிடுவதுதான் நல்லது” என்று போதித்தாராம்.
“வாழ்க்கையை வாழ்க்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்; அதற்கென்று பண்பாடு எதற்காக?” என்று வேறு வினவினாராம்.
“கட்டிக்கொண்டு விட்டோம் ஒருத்தியை என்பதற்காகச் சண்டை போட்டுக்கொண்டே அவளோடு வாழ்வதில் என்ன அர்த்தம்? புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்வதுதான் நியாயம்” என்று வேறு போதித்தாராம்.
ஆடு மாடுகள் இப்படித்தான் செய்கின்றன. ஆனால், அவை ஒப்பந்தத்திற்காகப் பதிவாளர் அலுவலகத்திற்கும் போவதில்லை; வெட்டுவதற்காக நீதிமன்றத்திற்கும் போவதில்லை.
`எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்று முடிவு கட்டிவிட்டால் ஆண் பெண் என்ற இரண்டு வகை மிருகங்கள் தான் மிஞ்சும்.
மாமன், மைத்துனன் என்ற பண்பாட்டு உறவுக்கு அங்கே வேலை இல்லை.
ஆனால், அந்த வகை உறவில்தான், இந்து தர்மம் உலகெங்கும் தலை தூக்கி நிற்கிறது.
குடும்ப வாழ்க்கையை ஒரு அறம் என்று போதித்தது இந்து தர்மம். அதனால்தான் தமிழ், அதனை `இல்லறம்’ என்றது.
இந்து தர்மத்தில் ஒருவன் எத்தனை மனைவியரை வேண்டுமானாலும் கொள்ளலாம். ஆனால், அத்தனை பேருக்கும் அவன் ஒருத்தன்தான் கணவன்.
ஒருத்தியை அவன் ஒதுக்கி வைத்திருந்தாலும், சாகும் வரையிலும் அவள், அவனது மனைவியே.
அவளை எல்லா வகையிலும் திருப்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை.
அந்தக் கடமையில் தவறுவோர் பலருண்டு.
அவர்கள் அந்தத் தர்மத்தை மறந்தவர்களே தவிர, அந்தத் தவற்றைச் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களல்ல.
இந்து மதத்திலும் சில பிரிவினரிடத்தில், அறுத்துக் கட்டும் பழக்கம் இருந்திருக்கிறது. சில இடங்களில் இன்னும் இருக்கிறது.
இதனை இந்து தர்மம் அங்கீகரிக்கவில்லை.
இது எப்படி ஏற்பட்டது?
கோஷ்டிச் சண்டைகளால் ஏற்பட்ட வஞ்சம் தீர்க்கும் மனப்பான்மையில் ஏற்பட்டது.
`பெண் கொடுத்துப் பெண் எடுப்பது’ என்றொரு பழக்கம் உண்டு.
ஒரு வீட்டினுள் ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் இருந்தால் அதேபோல ஓர் இளைஞனையும், இளம் பெண்ணையும் பெற்ற குடும்பத்தினர், தங்கள் பெண்ணைக் கொடுத்து அந்தப் பெண்ணை எடுத்துக் கொள்வார்கள்.
இதில் ஒரு ஜோடி சந்தோஷமாக வாழும்போது, இன்னொரு ஜோடி சண்டை போட்டுக்கொள்ள நேரலாம்.
சண்டைபோடும் கணவன், தன் மனைவியைப் பிறந்த வீட்டிற்கே திருப்பியனுப்பினால், அங்கே சந்தோஷமாக வாழ்கிற கணவன்கூடத் தன் மனைவியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவான்.
வஞ்சம் தீர்ப்பதற்காக தங்கள் பெண் கழுத்திலிருந்த தாலியை அறுத்துவிட்டு, வேறொருவனுக்கு அவளைக் கட்டி வைத்தால், அவர்களும் அதே போலச் செய்துவிடுவார்கள்.
ஆத்திரத்தில் உருவான இந்தப் பழக்கம், கடைசியில் ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.
இந்தச் சம்பிரதாயத்தை வெறும் கதைகளிலேகூட இந்து தர்மம் ஏற்றுக்கொண்டதில்லை.
தர்மங்களின் வரிசையில் குடும்ப தர்மத்தையும் அது சேர்த்தது.
உடலைவிட மனைவியின் ஆன்மாவையே முதலில் கணவன் திருப்தி செய்ய வேண்டும்.
ஆனால், மனைவியோ கணவனின் உடலைத் திருப்தி செய்து, ஆன்மாவைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
கணவன், மனைவியின் உடலைத் திருப்தி செய்வதும் இன்றியமையாததாகவே கருதப்பட்டது. ஆனால், அது இரண்டாம் பட்சமாக வைக்கப்பட்டது.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்று, இந்து, ஆனால், கணவன், திருப்தி, தர்மம், பழக்கம், செய்ய, பெண், வேறு - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்