முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » சமூக வெளியில் இயங்கியல் உறவு
இலக்கியக் கட்டுரைகள் - சமூக வெளியில் இயங்கியல் உறவு

- வே. சிவகுமார்
ஒவ்வொரு சமூகமும் தனக்கென கதையாடல் மரபினைக் கொண்டுள்ளன. சமூகவெளியில் உள், வெளி என்கிற நிலைப்பாட்டில் சில முரணான கதையாடல் மரபினையும் பின்பற்றி வருகிறது. பெருங்கதையாடல் என்கிற மைய நிறுவனத்திற்கு முற்றும் முரணான\மாறான தன்மையினைப் பிரதிபலிப்பதாக வாய்மொழி மரபுக் கதையாடல் உள்ளது. நாட்டுப்புற வாய்மொழி மரபுக்கதையின் "உட்கூறுகள்" "ஒற்றுமையாதல்" என்கிற மையத்திற்கு எதிரானக் கலகக்குரலாகவே காணமுடிகிறது. எதிர்நிலை கதையாடல் என்னும் தன்மையில் இயங்குகின்ற நிலையிலும், பெருங்கதையாடல்களை வெகுசனப்படுத்துதல் என்னும் நிலைப்பாட்டில் நிறுவனம் அடித்தள மக்களின் புழங்கு பண்பாட்டினை உள்வாங்கிக் கொள்ள முயலும் பொழுது இயங்கியல் உறவில் இயல்முரண் தோன்றுகிறது. முரண்பாட்டோடு "மேனிலையாக்கம்" என்கிற அங்கீகாரத்தன்மையில் அடித்தள\சமூக அங்கீகாரம் பெற மக்கள் பெருங்கதையாடல் மரபினை உள்வாங்கிக் கொள்கின்றனர். உள்வாங்கிக் கொள்ளல் தன்மையில் பெருங்கதையாடல் தொடர்புடைய நிகழ்வுகளில் ஏற்படும் அங்கீகாரம்\அங்கீகார மறுப்புக் குறித்து இக்கட்டுரை விளக்கி நிற்கின்றது.
நீண்டகால தமிழக வரலாற்றில் அவைதிக எழுச்சிக் காலம், வைதிக எழுச்சிக்காலம் என்னும் இரு பெரும் கூறுகளில் முன்னைய சமூக அமைப்பு தீண்டாமை தோன்றாத அமைப்பாகவும் பின்னைய சமூக அமைப்பு நிலம் பண்டப்பெருளாக மாற்றப்பட்டதோடு அதனோடு தொடர்புடைய உற்பத்தி உறவுகளிலும் முரண்கள் தோன்றின. ஆன்மீகத்தளத்தில் இந்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள "கோயில்" "தெய்வம்" போன்றவைகளை தனதாக்கிக் கொள்ள முயன்றுள்ளது. மக்களின் சமூகமனம் தொடர்பான பிரதிபலிப்பே "தெய்வம்" என்கிற குறியீடாகவும், தெய்வம் உறைகின்ற "கோயில்" வெளி சமூக அங்கீகாரம் பெறுகின்ற இடமாகவும் திகழ்கின்றது. வைதிக எழுச்சிக்காலத்தில் வெகுசனப்படுத்துதல் நிலையில் திருஞானசம்பந்தர் + அப்பர், மெய்கண்டார் + அருள்நந்தி சிவன் உயர்சாதியினர் விளம்புநிலை சாதியினரோடு சமூக, அரசியல், ஆகமவழிபாடு என்னும் பல்வேறு நிலைப்பட்ட தளங்களிலும் இணைத்துக்கொள்ள முயன்றாலும் "சைவக் கட்டமைப்பு" நிலையிலிருந்து வெளிவர முடியவில்லை என்றே கூறலாம். வைணவக் கோயிலின் அகவெளியில் இதே நிகழ்வே காணப்பட்டாலும் கோயிலின் புறவெளியில் இதற்கு முற்றும் மாறான சடங்கு வெளியே காணப்படுகிறது.
நிலக்குறுக்கோட்டில் 10.5 டிகிரி பாகையிலும் நிலநெடுங்கோட்டில் 78.14 டிகிரி பாகையிலும் மதுரையிலிருந்து வடக்கு - வடகிழக்கு திசையில் பன்னிரண்டு கல்தொலையில் அழகர்கோயில் அமைந்துள்ளது என்கிறார். பேரா.தொ. பரமசிவன் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறைப் பதினொறாம் நாளில் (சுக்கிலபட்ச ஏகாதசியில்) தொடங்கி ஒன்பதுநாள் கோயில் புறவெளியில் சமூக வெளியில் நிகழும் இயங்கியல் உறவு சில முரணானத் தன்மையிலேயே இயங்குகிறது.
மூன்றுநாள் கோயிலின் அகவெளியிலேயே இறைச் சடங்கு நிகழ்கிறது. இதில் பிராமணர்களே பல்லாக்கினைச் சுமந்து வருகின்றனர். மூன்றாம் நாள் இரவு ஒரு மணியளவில் அழகர் வேடம் புனைந்து வைகையாற்றின் வடகரையிலுள்ள வண்டியூருக்குப் புறப்படுகின்றார். அழகர்கோயில் தொழில் அட்டவணையின்படி பிராமணர்களால் "சூத்திர ஸ்ரீபாதம் தாங்கிகள்" என்றழைக்கப்படும் "செங்குந்த முதலியார்" சாதியினரே பல்லக்கை தூக்கி வருகின்றனர் என்கிறார் பேரா.சா. கந்த சுப்பிரமணியம்.
அழகர்கோயிலிருந்து தல்லாகுளம் வரையிலும், தல்லாகுளத்திலிருந்து அழகர்கோயில் வரையிலுமான நிகழ்வுகளில் மக்கள் மனதில் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தக்கூடிய "சாமி" (கள்ளழகர்) வடிவிலும், அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவின் பயண நோக்கமாகக் கருதப்படும் "மண்டூக முனிவரது சாபவிமோசனம்", "ஆண்டாள் திருமாலையை ஏற்றுக்கொள்ளுதல்" இரு பெரும் நிகழ்வுகளிலும் இயல்பான பெருந்தெய்வ வடிவமே கொள்கிறார். "புனிதம்" என்கிற கருத்தாக்கத்தின் மீதான புராண மயமாக்கல்\மேல்நிலையாக்கல் தன்மை மேலோங்குகிறது. கோயிலுடன் தொடர்புடைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் இச்சடங்கில் பங்கேற்றுக் கொள்ளாததும்\அறிந்து கொள்ளாததும் இயல்பான ஒன்றாகவே கொள்ளலாம். அழகர் - கள்ளழகராக மாறுவடிவம் கொள்வதற்கு மூன்று விதமானக் கதை வழங்கப்படுகிறது. முதல் கதை பிராமணியர்களாலும், இரண்டாம் கதை இடையர் சாதியினராலும், மூன்றாம் கதை நாயுடு சாதியினராலும் கூறப்படுகிறது. மேனிலையாக்கத் தன்மையில் இக்கதைகள் கூறப்பட்டாலும் கோயிலின் புறச்சூழலமைப்பு, குடியமைவு கோயிலுடன் பிறர்கொண்டச் சமூக உறவு குறித்து ஆராய இவ்வுண்மை விளங்கும்.
சமூக உறவில் பழமரபு கதையான தங்கை மீனாட்சி திருமணத்திற்கு அண்ணன் அழகர் வர அதற்குள் திருமண நிகழ்வு முடிவுற கோபமுடன் தன் காதலி "துலுக்க நாச்சியார்" வீட்டில் தங்கிவிட்டு மலைக்குத் திரும்புகின்றார். இது கதையின் மேலோட்டமான நிகழ்வாக இருந்தாலும் சமூக அங்கீகாரம் என்பதில் அடித்தள மக்களின் சாமி கொண்டுள்ள வடிவம் (கள்ளழகர் வடிவம்) வழிபாட்டு நெறிகளும் நகர்மயமான பெருந்தெய்வ வழிபாட்டிற்கு புறம்பானது என்பதினால் ஊருக்குள் வர அனுமதிப்பதில்லை என்பதேயாகும். சைவ-வைணவ மதங்களுக்கிடையிலான வரலாற்றுப் போராட்டம் என்பதைவிட கள்ளழகர் வடிவமே அவர்கள் ஏற்றுக்கொள்ளாமைக்கானக் காரணம் எனலாம். இதேபோல சில நிறுவனமயப்படுத்தப்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டுக் கோயில்களில் இன்னும் இதேபோன்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பெரியபுராணத்தில் அறுபத்திமூன்று நாயன்மார்களுக்கும் பிரமானிய வேடம் கொண்டே அருள்பாலிப்பதையும் வைத்தும் இதனை உணரமுடிகிறது. இதை உறுதி செய்வதாக வரலாற்று ரீதியாக அழகர் - கள்ளழகராக மாறும்முன் மதுரை மாநகருக்குள் "அழகரடி" எனப்படும் பகுதியில் இந்நிகழ்வு நடந்ததாக வாய்மொழி கதை இப்பகுதி மக்களிடம் காணப்படுவதாக பேரா.தொ. பரமசிவன் தனது நூலில் குறிப்பிடுகின்றார். கடவுளாயினும் தாழ்ந்த சாதியினர் வடிவம் கொண்டால் அவரையும் தாழ்வாக உயர்சாதியினர் பார்ப்பது வியப்புக்குரியச் செய்தி இல்லை என்றே கொள்ளலாம்.
கள்ளழகர் வடிவம் கொண்ட பல்லக்கினைச் சுமந்து வரும் சூத்திர ஸ்ரீபாதம் தாங்கிகள்தான் இறைவன் ஒவ்வொரு மண்டகப்படியிலும் அமர்ந்த சேவை, நின்ற சேவை, மூன்று சேவை, இரண்டு சேவை, ஒரு சேவை போன்றவற்றினை நிர்ணயம் செய்பவர்களாக உள்ளனர். மண்டகப்படிக்காரரின் பொருளாதாரமே இதற்குக் காரணமாக இருந்தாலும் "பரிவட்டம்" நிகழ்விலும் எடுத்துக்கொள்ளப்படும் காலநிகழ்விலும் இவர்களே முக்கியத்துவம் பெறுகின்றனர்.
பல்லக்கில் பயணம் செய்வது சமூக மரியாதையின் குறியீடாக இருந்தது எனலாம். பல்லக்கை அனைவரும் பயன்படுத்த இயலாது. முன்பு அரசர்கள் பிராமணர்கள் தவிர பிறர் பல்லக்கைப் பயன்படுத்தி பயணம் செய்ய அரசர்களிடம் உரிமைப் பெற வேண்டும் என்கிற பழமரபை பேரா.ஆ. சிவசுப்பிரமணியன் கூறுகின்றார். இத்தகையக் கருத்தோட்டத்தில் பார்க்கிற பொழுது அழகர் - கள்ளர் வேடம் புனைந்ததும் அரசர் கள்ளர்களுடன் ஆன்மீகத் தளத்தில் செய்துகொண்ட சமரசம் என்றே கொள்ளலாம். பல்லக்கைத் தூக்குபவர்களுக்கு உண்மையில் சமூக அங்கீகாரம் இருந்தது என்பது மேலோட்டமாகத் தெரிந்தாலும் அடிநாதமாக அங்கீகார மறுப்பே தென்படுகிறது. "சூத்திர ஸ்ரீபாதம் தாங்கிகள்" சொல்லுக்குள் புதைந்திருக்கும் "சூத்திரர்" என்னும் சொல்லாடலின் வாயிலாக இதனை மேலும் உறுதிபடுத்தலாம்.
''அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை'' (அறன்வலியுறுத்தல்:குறள்:7)
முற்பிறவியில் செய்த அறத்தின் பயனாக பல்லக்கின் மேல் பிராமணர்கள் அமர்ந்து செல்வதும் சமூகவெளியில் முரணான குறியீடாகவே உள்ளது.
ஏழாம் நாள் நிகழ்வாக மாலை அம்மாளு அம்மாள் மண்டபத்தில் இறைவனைத் தங்கவைத்து "அய்யங்கார்" தோப்பு மண்டகப்படிக்கு" இறைவனின் "சடாரி"யை மட்டும் கோயிற் பணியாளர்கள் எடுத்துச் செல்கின்றனர். சடாரி மீண்டும் வந்தவுடன் இறைவன் புறப்படுகின்றார். இறைவன் பெருந்தெய்வ வடிவம் எடுத்து வைகை வடகரைக்கு வந்த பின்பும் மதுரையின் புறநகருக்குள் அனுமதிக்காமைக்கானக் காரணம் அறியமுடியவில்லை. கோயிலின் அகவெளியிலும் இறைவன் புனித நீராட்டுக்ககுப் பின்னரே உள்ளே செல்கின்றார்.
கள்ளர், இடையர், நாயுடு, பள்ளர், பறையர், வலையர் ஆகிய மதுரையின் அருகாமையில் வாழும் நாட்டுப்புற மக்கள் தங்கள் குல வழிபாடு போன்றே இவ்விழாவில் பங்குகொண்டாலும் அவர்களிடம் "சாமி"யுடனான நெருக்கத்தைவிட சடங்குத் தொடர்பான நிகழ்வுகளில் இவர்கள் பங்கு பெற்றாலும் ஆதிக்கச்சாதியினர் நடத்தும் சடங்கு நிகழ்வு குறித்து இவர்கள் பங்குபெற்றாலும் அங்கீகார மறுப்பின் காரணமாக விலகியும் காணப்படுகின்றனர். இந்நிகழ்வு சமூகத்தின் இயங்கியல் தன்மையில் அங்கீகாரம் தருவது போன்ற அங்கீகார மறுப்பு செயலாகும். ஒருமுறை நிகழ்ந்து மறுமுறை நிகழும் வரையிலான கால இடைவெளியில் விளம்பு நிலையில் உள்ளோர் இறைவனை எண்ணிக்கொண்டே விலகியே இருக்க வைக்கும் செயலாகவும் கருதலாம். "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்", "திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன்" என்னும் மறைமுக உயர்சாதி ஆதிக்கமே இச்சமூக வெளியில் இயங்கியல் உறவாகக் காணமுடிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சமூக வெளியில் இயங்கியல் உறவு - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ", சமூக, என்கிற, என்னும், அழகர், கோயிலின், வடிவம், அங்கீகாரம், சேவை, கதையாடல், அழகர்கோயில், பேரா, இறைவன், கள்ளழகர், பெருந்தெய்வ, இயங்கியல், தன்மையில், வேடம், சூத்திர, ஸ்ரீபாதம், கொள்ளலாம், அங்கீகார, என்றே, உள்வாங்கிக், மக்களின், உள்ளது, வாய்மொழி, மக்கள், தொடர்புடைய, பெருங்கதையாடல், குறித்து, நிகழ்வுகளில், சடங்கு

