முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » சிதைக்கப்படும் அடையாளங்கள்...
பொதுவான கட்டுரைகள் - சிதைக்கப்படும் அடையாளங்கள்...
- ஜா. மாதவராஜ், சு. வெங்கடேசன்
சிந்தனை ஊற்றெடுக்கும் ஆன்மாவின் இரத்தமாகிய தாய்மொழி தேவையில்லை என்று மூளைக்குள் செலுத்தப்படுகிறது.
பத்திரிகைகள், சினிமாக்கள், தொலைக்காட்சிகள், ஆங்கிலப்படங்கள் என நம்மைச் சுற்றிலும் அரூபமான சதி வலைகள் பின்னப்படுகின்றன. கதாநாயகன் நாலு வார்த்தை ஆங்கிலத்தில் பேசிவிட்டால் விசிலும், கைதட்டல்களும் தியேட்டரை அமர்க்களப்படுகின்றன.
நாகரீக சமூகம் நீ எந்த மொழியில் பேசினால் உன்னை அங்கீகரிக்கும், அதையும் எப்படி உச்சரித்தால் உனக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்குமென்று மனித மனங்களில் நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் என்பது, அத்தியாவசியமான ஒன்றாகவும், பொது இடங்களில் பேசப்படுவதற்குரிய உயர்ந்த மொழியாகவும் அதற்கு மேடையமைத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் படித்தால்தான் வேலை கிடைக்கும், அதுவும் அமெரிக்கா போன்ற அந்நிய நாடுகளில் வேலை கிடைக்கும் என்று போதிக்கப்படுகிறது. ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி என்கிற உணர்வே நம்மிலிருந்து அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் தேவையற்ற மொழிகளாக கோடிக்கணக்கான மக்களின் தாய் மொழிகளை உலகமயமாக்கல் சத்தமில்லாமல் நிராகரிக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் அடுத்த நூற்றாண்டிற்குள் 6800க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து போகும் என ஆப்பிரிக்க கட்டுரையாளர் ஒருவர் எச்சரிக்கிறார். ஆதித் தாய்களின் நாக்குகளை அறுத்தெறிகிற வன்முறை ஊடகங்களின் மூலம் இலகுவாக நடந்தேறுகிறது. சுதந்திரச் சந்தையை ஆக்கிரமிக்கும் நாடுகளின் மொழிகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும். கலாச்சாரத்தின் மாண்புகள் இங்கு சந்தையின் கரையான்களால் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மொழி மட்டுமல்ல... நமது அடையாளங்கள் அனைத்தும் சிதைக்கப்படுகின்றன. ஈராக்கில் யுத்தம் ஆரம்பித்ததும் தீவைக்கப்பட்ட எண்ணெய் வயல்களை சேதங்களிலிருந்து தடுத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்த இராணுவத்திற்கு, யுத்தம் முடிந்து ஈராக்கே கைவசம் ஆனபிறகும் புராதன சிறப்பு மிக்க மியூஸியத்தை மட்டும் எப்படிக் காப்பாற்ற முடியாமல் போனது? வேண்டுமென்றே அந்த கலாச்சார நினைவுகள் தகர்ந்து போக அனுமதித்தது. அடுத்து தங்கள் கலாச்சாரம் ஈராக்கை முழுமையாக விழுங்கும்போது வேறெதுவும் ஈராக்கில் தென்படக்கூடாது என்கிற உன்மத்தம்.
கலாச்சாரமும் ஒரு பொருளாக, கைவினைப் பொருளாக, புத்தகமாக, இசையாக, உணவாக, உடையாக, விற்கப்படுகிறது. மொழியாக ஆக்கிரமிக்கிறது. இன்றைய கலாச்சார பரிவர்த்தனை சமத்துவமற்றதாக இருக்கிறது. ஒரு திசையிலிருந்து மட்டுமே வீசுகிறது. பணக்கார நாடுகளிலிருந்து ஏழை நாடுகளின் மீது பொழிந்து நசுக்குகிறது.
யுனெஸ்கோவின் 1997ம் வருட அறிக்கையில் 1980லிருந்து 1991க்குள் கலாச்சார மதிப்புகொண்ட பொருட்களின் வியாபாரம் 670 கோடி டாலரிலிருந்து 2000கோடி டாலருக்கு உணர்ந்திருக்கிறது. எனச் சொல்லப்பட்டதோடு மட்டுமில்லாமல் அவைகளில் அமெரிக்காவின் ஆதிக்கமே அதிகம். எனவும் சொல்கிறது. அமெரிக்காவின் ஏற்றுமதியில் அதிக பங்கு வகிப்பது வாகனங்களோ, விமானங்களோ அல்ல.... பொழுதுபோக்கு உள்ளிட்ட கலாச்சார விஷயங்களே!
எல்லாம் வீடுகளுக்குள் இருப்பதாகவும், கிடைப்பதாகவும் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. உலகமயமாக்கல் இன்றைய உலகத்தை வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட விரும்புகிறது. மனிதர்களை பலவீனத்தின் உச்சியில் கொண்டுபோய் நிறுத்தி வைக்கிறது. தொட்டால் விழுந்துவிடும் அளவுக்கு நாடிநரம்புகள் செல்லரித்துப் போயிருக்கின்றன.
உபயோகித்து தூக்கி எறிவது என்பது மனித மனங்களில் அழுக்காக படியவைக்கப்படுகிறது. தொடர்ந்து உபயோகிப்பது என்பது சந்தையில் உற்பத்தியையும், விற்பனையையும் பாதிக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. பிளாஸ்டிக்கில் ஆரம்பித்த இந்த மனோபாவம் இன்று மனிதர்கள் வரை தூக்கியெறியப்படக் கூடிய பொருட்களாக்கி இருக்கிறது.
உலகமயமாக்கலின் கட்டற்ற போக்கால் வான்வெளியெங்கும் மீடியா மன்னர்களின் ராஜ்ஜியங்களாகின்றன. காற்று, தான் சுமப்பது அறியாமல் பொதி கழுதையாய் சுமந்து திரிகிறது. 24 மணி நேரமும் எந்த சேனலும் பார்க்க முடிகிற அளவுக்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் இருந்து கொண்டே இருக்கிறது. பி.பி.சியில் சந்தை நிலவரத்தை பார்க்கமுடியும். ஸ்டார் மூவிஸிலோ, ஏ எக்ஸ் என்னிலோ, ஆக்ஷன் சேனலிலோ க்ராபிக்ஸில் முகம் அழுகிப் போகிற மனிதர்களைப் பார்க்க முடியும். டபிள்யூ.டபிள்யூ.எஃபில் நான்கு புறமும் கயிறு கட்டியிருக்க அதற்கு நடுவில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கை கால்கள் முறுக்கி, தலையில் மிதிக்கிற கொடூரங்களைக் காணலாம். எந்த நேரமும் இடுப்புகளைக் குலுக்கிக் கொண்டு ஆணும், பெண்ணும் துடிக்கிற பாடல்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
குழந்தைகளின் காதுகளை அடைத்து கண்களை நிலைகுத்தச் செய்கிறது. இந்த லீலாவினோதங்கள். தெருக்களில் அவர்களின் பாதச்சுவடுகள் காணாமல் போக பல அற்புதமான விளையாட்டுக்கள் இன்று அனாதைகளாகி விட்டன.
பெண்ணுடல் மீதான வக்கிரங்கள் எல்லோர் கண்களிலும் சொருகப்படுகின்றன. ஷேவிங் கிரீம் விளம்பரமென்றாலும் ஒரு பெண் வருவாள். உடலால் அளக்கப்படுகிற சங்கதியாக அழகு குறுகிப்போய் விட்டது. சிறுநகரங்களிலும் அழகிப் போட்டி வியாதிகள் தொற்றியிருக்கின்றன. அதற்கான சாதனங்கள் சந்தையில் புதிதுபுதிதாக முளைக்கின்றன.
அமெரிக்க இளைஞனின் ஜீன்ஸ் ஒரு இந்திய இளைஞனின் கனவாகவும் தேவையாகவும் விதைக்கப்பட்டுவிட்டது. அர்னால்டு சுவார்ஸ்நேகர், சீன் கேனரியும், பாப் இசையும், செக்ஸ் ஷாப்பும், இணைய தளங்களில் நுகர்ச்சிக்கு கிடைக்கும் அபரிதமான வாய்ப்புகளும் நமது இளைஞர்களின் மனதை வடிவமைக்கிறது. லூயி பிலிப் சட்டைத் துணிகளும், ஓல்ட் ஸ்பைஸ் அறைகூவல்களும் வண்ணக்காட்சிகளாய் விளம்பரங்களில் வந்து மத்தியதர வர்க்கத்தை அழைக்கழிக்கிறது. அன்றாட வாழ்க்கையின் ஊடே பயன்படுத்தும் பொருட்களில் பல பன்னாட்டுக் கம்பெனிகளுடையது என்கிற பிரக்ஞையற்று செண்ட்களின் வாசனையில் மூழ்கடிக்க முயற்சி நடைபெறுகிறது. வாசனைத் திரவியங்களின் புதையல் என்று இந்தியா வந்த வாஸ்கோடகாமாவின் கல்லறையிலிருந்து சிரிப்பு அலறலாய் கேட்கிறது.
சூரியன் உதிப்பதும், மறைவதும் அறியாத இந்த தொடர் ஒளிபரப்பில் மனிதர்கள் வேறு திசையில் சிந்திப்பதற்கான எந்த அவகாசமும் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் காட்டுவதையே பார்த்து பார்த்து சுயங்களை இழந்து போகிறார்கள். கையில் ரிமோட் கண்ட்ரோலை வைத்துக்கொண்டு சேனல்களை மாற்றி மாற்றிப் பார்க்கிற சுதந்திரம் இருப்பதாக நம்பிக்கொண்டு வெளிச்ச சிதறல்களில் மதிமயங்கிக் கிடக்கிறார்கள். உண்மையில் நமது கைகளில் ரிமோட் கண்ட்ரோல் இல்லை. அது அவர்கள் கைகளிலிருக்கிறது. அவர்கள் எப்படி நம்மைப் பார்க்க விரும்புகிறார்களோ அப்படி நம்மை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகச்சந்தை மனிதர்களை பரிசுத்த நுகர்வோன் என்கிற ஒற்றை அடையாளத்தோடு மட்டுமே பார்க்க விரும்புகிறது.
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசங்களில் ஒன்று மனிதர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்களாய் இருப்பது தான். அதுதான் அழகு. ஆயிரம் வண்ணங்களில் ஆயிரமாயிரம் மலர்களாய் மனிதர்கள் பூத்துக் குலுங்குவதுதான் அற்புதம். பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரம் இவற்றோடுதான் மனித சமூக காலங்களை கடந்து வந்திருக்கிறது. அந்த வேர்களுக்கு வெந்நீர் ஊற்றி, அழித்து ஒரே மனிதன்... ஒரே மொழி.... ஒரே கலாச்சாரம் என்பது நம் வாழ்வின் மீது நெருப்பு வைக்கிற காரியம். வானவில்லின் வர்ணங்களை பிய்த்துப் போடும் அராஜகம். விழுதுகளையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டால் ஆலமரத்தின் அடையாளம்தான் என்ன? ஆயுள்தான் என்ன? அவர்கள் மொழி. அவர்கள் உணவு. அவர்கள் உடை. அவர்கள் கலாச்சாரம். அவர்கள் சந்தை! இது அவர்களின் உலகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிதைக்கப்படும் அடையாளங்கள்... - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - மனிதர்கள், என்கிற, எந்த, மொழி, என்பது, பார்க்க, கலாச்சாரம், கலாச்சார, இருக்கிறது, மொழிகள், மனித, ஆங்கிலம், கிடைக்கும், மட்டுமே, நமது