முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » அரசியல் - ஆன்மிகம்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - அரசியல் - ஆன்மிகம்
- வாதூலன்
பக்கத்திலுள்ள ஒரு கோயிலுக்கு விசேஷ நாளன்று போயிருந்தேன். மாலை வேளையில் தேரை எல்லோரும் இழுத்துக் கோயிலைச் சுற்றி வலம் வந்தார்கள். இறுதிச் சுற்று முடியும் தறுவாயில், குறிப்பிட்ட கோயில் மூலவரைச் சொல்லி, .... க்கு ஜே! என்று கோஷம் செய்தார்கள். கொஞ்ச காலமாகவே இதுபோல் நடந்து வருகிறதென்றாலும், அன்று கேட்ட ஓசை சிறிது உச்ச கட்டத்துக்குப் போனாற்போலிருந்தது. இதே போல வேறு ஒரு கோயிலிலும், சப்தம் எழுப்பி வலம் வருவதைக் கவனித்தேன். கடவுளின் பெயர் தான் வேறு!
அந்தச் சப்தமும், கூட்டமும் அவ்வப் போது எழுந்த உச்சகட்ட உற்சாகமும், கிட்டத்தட்ட ஓர் அரசியல் கூட்டத்தையே ஞாபகப் படுத்தியது. இது வழிபாட்டு விதத்தில் மாத்திரமில்லை.. சிற்சில மாதங்களில், சில பெண்மணிகள் - ஏன் ஆண்களும் கூடச் சேர்ந்து நெற்றி நிறைய குங்குமத்துடன் உண்டி குலுக்கி நன்கொடை கேட்டு வருகிறார்கள். ... அம்மனுக்குப் பால் ஊற்றுகிறோம் ... புடவை சாத்துகிறோம் என்று பல காரணங்கள். இதிலும் அரசியல் சாயல் தான்!
மேலே சொன்னவற்றைத் தாண்டி, அரசியலில் முளைக்கும் தன் முனைப்பு என்கிற அகம்பாவம் கோயில் நிர்வாகிகளிடத்திலும் தெரிகிறது. குறிப்பிட்ட ஒரு மனிதரைத் தவறாது ஒரு கோயிலில் எல்லா விசேஷ நாள்களிலும் பார்த்து வந்திருக்கிறேன். சமீப காலமாக அவரைக் காணோம். விசாரித்ததில், ஏதோ தகராறு வந்ததில் இப்போது கோயிலுக்கே வருவதே இல்லை என்று தெரிய வந்தது... ஆனால் அவர் பெயரை, வேறு ஒரு கோயில் சம்பந்தப்பட்ட அழைப்பிதழில் காண நேர்ந்தது. ஓர் அரசியல் கட்சியின் மூன்றாம் இடத்தில் நிற்கிறவர், சொந்தக் காரணங்களுக்காக விலகி தனிக் கட்சித் தலைவராகத் திகழ்வதையே இது நினைவூட்டியது.
அரசியலின் சகல கூறுகளும் இன்றைய ஆன்மிகத்தில் ஊடுருவி நிற்கிறது. இந்தப்போக்கு நல்லதா?
அந்த நாளில் இரண்டுமே தனித்துத்தான் நிற்கும். ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் - காலத்தின் கட்டாயத்தில் பிற கட்சிகளைச் சார்ந்து ஆட்சியை நிர்வகிக்க வேண்டிய சூழலில் - ஆன்மிகத்தின் பங்கு தவிர்க்க இயலாமல் போகிறது. யாரைப் பார்த்தால் பிரச்சினை தீரும் என்ற கேள்வி மனசை அலைக்கழிக்க, எல்லா கட்சித் தலைவர்களும் யாராவது ஓர் ஆன்மிகத் தலைவரை நாடுகிறார்கள். எப்படியாவது பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டு கட்சிக்கும் ஆட்சிக்கும் நற்பெயர் கிடைக்கிறதா என்கிற உணர்வு தான் அவர்களைத் தூண்டுகிறதே தவிர, அசலான ஈடுபாடு உண்டா? ஐயம் தான்!
பழைய காலங்களில் உள்ளார்ந்த பக்தியும், அமைதியான கோயில் வழிபாடும் விரவியிருந்தன. நான் சிறுவனாகப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, புரசை கங்காதரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்.. புரசை பெரிய சாலை திரும்பும் முனையில் வினாயகர் கோயிலில் பரீட்சை சமயம் அவசரமாக வேண்டிக் கொண்டு போயிருக்கிறேன். வீட்டுப் பெண்மணிகள் கோயிலுக்குப் போய், விரைவில் திரும்பி விடுவார்கள். வம்பளப்பு கம்மி.
இப்போது எல்லாமே - சொல்லப் போனால் அன்றாட வாழ்வே - ஒரு பிரச்சினையாகிப் போய்விட்டது. வேகமாகச் செல்லுகிற ஊர்திகள் மட்டுமில்லை.. அமைதியாக நிற்கிற வண்டியிலும் ஆபத்து..! பெற்ற மகன்களும் கைவிட்டு, ஆறுதல் கூற உற்றார் யாருமில்லாத, நட்டாற்றில் இருப்பது போன்ற நிலை.. கரையேற ஏதாவது ஒன்று கிடைக்காதா என்கிற ஆற்றாமையிலும் ஆதங்கத்திலும் கோயிலை நாடுகிறார்கள். அந்த உணர்வுகளின் வெளிப்பாடும் வடிகாலும் தான், ஓசையான வழிபாடு ஆகி விட்டதோ என்று தோன்றுகிறது.
ஆக, இன்றைய சூழலில் ஆன்மிகத்திலும் அரசியல் பிணைந்து இருக்கிறதென்பது வெளிப்படை. ஒரு வார ஏட்டில் சமூகத் தொண்டு புரியும் நபரைப் பேட்டி கண்டிருந்தார்கள். அய்யனார் கோயில் திருவிழா நடக்காமலிருந்தது மூன்று - நாலு வருஷமாக.. எல்லா தெருக்களுக்கும் சாமி ஊர்வலம் கொண்டு போனோம். சாமிக்குச் சாதி இல்லை. மதம் இல்லை! என்று அந்த நபர் குறிப்பிட்டிருக்கிறார். சற்று தீவிரமான பக்தியைக் கண்டவுடனே, குறிப்பிட்ட அரசியல் கட்சி பணம் தருகிறது என்று அவதூறு சொன்னார்களாம்! அந்த அளவுக்குக் கிராமங்களில் கூட ஆன்மிகத்தில் அரசியல் புகுந்திருக்கிறது..
நீரிழிவு நோயைப் பற்றி நிபுணர்கள் எப்போதும் ஒரு கருத்து தெரிவிப்பார்கள். அடியோடு நீக்க முடியாது... ஆனால் பயிற்சிகள் உணவு முறை மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்! அதுபோல் தான் ஆத்திகமும் ஆகி விட்டதோ என்று தோன்றுகிறது. ஓசை, ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றைச் சில நெறிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.. அறவே நீக்குவது சிரமம்தான்!
அரசியலில் ஆன்மிகம் கலப்பது குறித்து இரு வேறு கருத்துகள் இருக்கலாம்; ஆனால் ஆன்மிகத்தில் அரசியலின் அளவைக் குறைத்தே ஆக வேண்டும் என்பதில் மூன்றாவது கருத்துக்கே இடம் இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசியல் - ஆன்மிகம் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தான், அரசியல், கோயில், வேறு, அந்த, இல்லை, ஆன்மிகத்தில், என்கிற, குறிப்பிட்ட, எல்லா

