முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » கழ்கால இருள் - கடந்தகால ஒளி
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - கழ்கால இருள் - கடந்தகால ஒளி
- எஸ். வி. ராஜதுரை
இந்தியாவின் முதல் சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் மூழ்கித் திளைத்த பள்ளிச் சிறுவர்களில் ஒருவனாக இருந்தவன் நான். என் நினைவுக்கெட்டியவரை அத்தகையதொரு நாடு தழுவிய திருவிழா மீண்டும் நிகழவில்லை.
பின்னோக்கிப் பார்க்கையில், இந்த நிகழ்காலத்தில் மண்டியிருக்கும் இருளின் அடர்த்தியை ஒப்பிடுகையில் கடந்த காலத்தில் பழமைவாதிகள் எனக் கருதப்பட்டோரின் செயல்பாடுகள் ஒளிக்கற்றைகளாக வரலாற்றில் இடம்பெறக் கூடும். அதேசமயம் சுதந்திர இந்தியாவை நிர்வகிக்க வந்த தலைவர்களின் தனிப்பட்ட நேர்மையையும் பற்றுறுதியையும் பொருட்படுத்தாத அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளின் உள்ளார்ந்த வக்கிரங்கள் இன்றைய இழிநிலைக்குக் கால்கோள் இட்டன.
கடந்த ஐம்பதாண்டுக் கால வரலாற்றின் சாரத்தையோ அல்லது அதனை உள்ளடக்கியுள்ள எண்ணற்ற விவரங்களையோ சிறு கட்டுரையொன்றில் தர முடியாது. ஆயினும் ஒரு சோதனை முயற்சியாக, பிரபல ஆங்கில நாளேடொன்றில் அந்த யுகத்தில் இந்த நாள் என்ற தலைப்பில் அன்றாடம் வெளியிடப்படும் செய்திகளை மூன்று மாத காலம் தொகுத்துப் பார்த்தேன். அவை தரும் சித்திரம் நிச்சயமாகவே வியப்புத் தரும்.
சென்னை மாநகரத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்துகளின் செலவைக் குறைப்பதற்காக மெத்தையில்லாத மர இருக்கைகளைப் பொருத்த அரசாங்கம் முடிவு செய்கிறது. அவை பயணிகள் அமர்வதற்கு வசதியாக உள்ளனவா என்பதை நேரடியாகக் கண்டுணர அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜியும் (வயது 70), போக்குவரத்து அமைச்சர் கிருஷ்ணாராவும் அத்தகைய இருக்கைகள் உள்ள பேருந்தொன்றில் 10.7.1953 அன்று கோட்டையிலிருந்து மவுண்ட் ரோடுக்கும் பின்னர் திரும்ப கோட்டைக்கும் பயணம் செய்கின்றனர் - கட்சி, அரசாங்கப் பட்டாளங்களின்றி!
இன்றோ பொது நிகழ்ச்சியானாலும் சரி, குடும்ப நிகழ்ச்சியானாலும் சரி, அரசாங்கச் செலவில் கார் ஊர்வலங்கள். பின் தொடர்ந்து வரும் கட்சிக்காரர்களின் வாகனங்கள். ஏதோ எதிரி ராணுவங்களை எதிர்கொள்ளச் செல்வதுபோல நவீன ஆயுதங்களேந்திய கமாண்டோக்களின் துணை. ஆட்சி மாற்றங்களுடன் அரசாங்கப் பேருந்துகளின் வண்ணங்களும் மாற வேண்டும். அவற்றில் தம்மைத் திணித்துக் கொண்டும் தொங்கிக் கொண்டும்தான் பயணிகள் செல்ல வேண்டிய பரிதாப நிலை. அரசாங்கப் பேருந்துகளின் வடிவமைப்பிலும் உலக வங்கியின் நிபந்தனை. ஊழல் புகார்களை எதிர்நோக்காத போக்குவரத்து அமைச்சர் யாருமே இல்லை என்ற நிலை.
அன்றைய ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடர் 30-7-1953 அன்று நடைபெறுகிறது. 1-10-1953-ல் ஆந்திரப் பகுதி பிரிந்து சென்று தனிச் சட்டமன்றம் அமைக்கவுள்ளது. இன்றைய ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம், ஒரிசா ஆகியவற்றின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அன்றைய சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்கள்.
சுதந்திரப் போராட்டக் காலந்தொட்டே காங்கிரசுக்குள்ளும் குழுப் பூசல்கள்! ஆந்திர கேசரி டி. பிரகாசமும் ராஜாஜியும் எதிரெதிர் குழுக்களில்! 1952 தேர்தலில் பிரகாசம் காங்கிரசிலிருந்து விலகி புதிய கட்சியொன்றின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். சட்டமன்ற நடவடிக்கைகளைச் சிறப்பாகவும் கண்ணியமாகவும் நடத்தி முடித்த அவைத் தலைவரர் ஜே. சிவசண்முகம் பிள்ளையைப் பாராட்டி நன்றி தெரிவிப்பதை பிரகாசம் தொடங்குவதுதான் முறை என்கிறார் ராஜாஜி. இல்லை. ராஜாஜியே தொடங்கட்டும் என்கிறார் பிரகாசம். வழக்கம் போலவே இருவரும் ஒத்துப்போக மாட்டேன் என்கிறார்கள் எனச் சிரிப்பலைகளை எழுப்பும் மூத்த அமைச்சர் சி. சுப்பிரமணியம், அவையின் சார்பில் அவைத்தலைவருக்கு நன்றி செலுத்துகிறார்.
கம்யூனிஸ்டுகள் எனது முதல் எதிரிகள் என்று வெளிப்படையாகவே கூறி அவர்களைக் கடுமையாக ஒடுக்கியவர் ராஜாஜி. ஆந்திரத்தின் புரட்சிக் கம்யூனிஸ்டுகளில் ஒருவரான டி. நாகிரெட்டி - அவரும் அன்று சட்டமன்ற உறுப்பினர் - கூறுகிறார்: எனது கட்சி ஓர் இளங்கட்சி. அக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் வயதில் இளையவர்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியிலுள்ள மிக அனுபவசாலியும், மிக சாமர்த்தியசாலியும் ராஜதந்திரியுமான ராஜாஜியை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் எங்களாலும் நிறையக் கற்றுக் கொள்ள முடிந்தது.
இன்றோ காங்கிரஸ் கட்சியின் உட்பூசலில் செருப்படிகளும் சுவரொட்டியடிகளும் வெகு தாராளம். சட்டமன்றத்திற்குள் நுழைவதென்பது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சிம்ம சொப்பனம். வசையடி பெறுவதில் வயது வித்தியாசமோ ஆண் - பெண் வேறுபாடோ இல்லை. அவைத் தலைவரின் அதிகாரத்திற்கு வானமே எல்லை என்ற நியதி வகுக்கப்பட்டாகிவிட்டது.
பிரிட்டிஷாரிடமிருந்து கைமாறிய ஆட்சியதிகார அமைப்பில் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது காவல்துறை. இதிலுள்ள அபாயங்களைப் புதிய ஆட்சியாளர்கள் புறக்கணித்துவிட்டனர். 1953 ஜூலை கடைசி வாரத்தில் கல்கத்தாவில் 144 தடையை மீறி ஒரு பொதுக்கூட்டம். அதனைக் கலைக்கக் காவல்துறையினர் தடியடி. செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் கூட அடித்து உதைக்கப்பட்டுக் கைது செய்யப்படுகின்றனர். மேற்கு வங்கத்தில் அன்று காங்கிரஸ் ஆட்சி. உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் பத்திரிகையாளர்களைக் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிடுகிறார்.
ஆனால் இன்றோ, காமிராவை மட்டுமா உடைத்தீர்கள்? மண்டைகளைப் பிளக்கவில்லையா? என்ற கேள்வியைக் காவல்துறையினர் எதிர்கொள்வதும் அதற்கான பதிலை உற்சாகத்தோடு நடைமுறைப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது - பல மாநிலங்களில்!
தேர்தலுக்காகவே அரசியல்; அதிகாரத்தைக் கைப்பற்றவே கொள்கையற்ற கூட்டணி என்ற இன்றைய அரசியல் கலாசாரத்திற்கு நேர்மாறான குரலொன்று ஐம்பதாண்டுகளுக்கு முன் ஒலித்தது. 1953 ஜூன் இறுதியில் பி.பி.சி. வானொலிக்கு அளித்த நேர்காணலில் அம்பேத்கர் கூறினார்: யாருக்கு வேண்டும் தேர்தல்கள்? மக்களுக்கு உணவு வேண்டும். அவர்களது பொருள்வகைத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். நமக்கு நிலம் ஏதும் இல்லை. நமக்குக் கிடைக்கும் மழைநீர் சொற்பம். நமது காடுகள் அழிக்கப்படுகின்றன. நாம் என்ன செய்ய முடியும்? இன்றைய அரசாங்கத்தால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று நான் கருதவில்லை. இந்த அமைப்பு மிக விரைவில் தகர்ந்து விழக் கூடியதாக உள்ளது. எனது மக்கள் மிகவும் பொறுமையிழந்து விட்டனர்.
இந்தியாவின் சமூகக் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும். அதனை அமைதி வழியில் செய்யச் சிறிது காலம் பிடிக்கும் எனக் கூறிய அம்பேத்கர் சமூக மாற்றம் பற்றிய ஓயாத பேச்சுகளைத்தான் கேட்க முடிகிறதேயன்றி செயல்களையல்ல.
செயல்திட்டமும் அதனை நிறைவேற்றுவதற்குத் தக்க ஏற்பாடுகளும் வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் செயல்படாமல் போகுமானால் ஒருவகை கம்யூனிசம் வரத்தான் செய்யும்.
அம்பேத்கருடன் சேர்த்து நேர்காணப்பட்டவர் அன்றைய பம்பாய் மாகாண காங்கிரஸ் முதலமைச்சர் மொரார்ஜி தேசாய். இந்தியாவில் ஜனநாயகம் ஆழ வேரூன்றித் தழைக்குமாதலால் கம்யூனிசம் வளரச் சாத்தியமில்லை என்றார்.
இங்கு ஜனநாயகமும் செயல்படவில்லை. கம்யூனிசமும் வரவில்லை. எனினும் அள்ளி அள்ளி வழங்குவதற்கு ஆன்மிகக் கூட்டங்களுக்குக் குறைவில்லை என நாம் மகிழ்ச்சியடையலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கழ்கால இருள் - கடந்தகால ஒளி - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேண்டும், அன்று, இல்லை, சட்டமன்ற, அமைச்சர், இன்றைய, அன்றைய, காங்கிரஸ், சென்னை, எனது, பிரகாசம், அரசாங்கப், பேருந்துகளின், அரசியல், இன்றோ

