சத்ய சோதனை - பக்கம் 86
எது என்பதை மனிதன் அறிவதில்லை ; அதுவும் அச்சமயத்தில் அதைப்பற்றிய அறிவே இருப்பதில்லை; கடவுள் நம்பிக்கை இல்லாதவனாயின் தான் தற்செயலாகத் தப்பிவிட்டதாகச் சொல்லிக் கொள்ளுவான். கடவுள் நம்பிக்கை உள்ளவனானால், கடவுளே தன்னைக் காத்தார் என்பான். தனக்கு இருந்த சமயஞானமோ, ஆன்மீகக் கட்டுப்பாடோதான், ஆண்டவன் தன்னிடம் கருணை காட்டியதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வருவான்; அல்லது வரக்கூடும். ஆனால் அவன் ரட்சிக்கப்படும் சமயத்தில் தன்னைக் காத்தது தன்னுடைய ஆன்மீகக் கட்டுப்பாடுதானா, வேறு ஒன்றா என்பதை அவன் அறியான். தனக்கு ஆன்மீக பலம் அதிகம் இருக்கிறது என்று அகம் பாவம் கொண்டிருந்தது, முடிவில் அது தூசாகிப் போனதைக் காணாதவர் யார்? சமய ஞானம் வேறு; சாதனை வேறு. ஆகவே, சாதனை இல்லாத சமய ஞானம், சோதனை ஏற்படும் சமயங்களில் வெறும் உமியாகவே தோன்றுகிறது. சமய ஞானத்தினால் மட்டும் பயனில்லை என்பதை இங்கிலாந்தில் தான் நான் முதன் முதலில் கண்டுகொண்டேன். இதற்கு முன்னால் நிகழ்ந்த சோதனைகளில் நான் எவ்வாறு காப்பாற்றப்பட்டேன் என்பதை என்னால் அவ்வளவாகக் கூற முடியாது. ஏனெனில், அப்பொழுது நான் மிகச் சிறியவன். ஆனால், இப்பொழுதோ எனக்கு வயது இருபது. கணவன், தந்தை என்ற வகையில் எனக்குச் சிறிது அனுபவமும் ஏற்பட்டிருந்தது. எனக்கு நினைவிருக்கும் அளவில், நான் இங்கிலாந்தில் இருந்த காலத்தில், கடைசி ஆண்டில் அதாவது 1890-ல் சைவ உணவாளர்கள் மகாநாடு ஒன்று போர்ட்ஸ்மவுத்தில் நடந்தது. அதற்கு ஓர் இந்திய நண்பரும், நானும் அழைக்கப்பட்டிருந்தோம். போர்ட்ஸ்மவுத் துறைமுகம், மாலுமித் தொழிலில் ஈடுபட்டவர்களையே பெரும்பாலும் கொண்ட பட்டணம். அங்கே தீய நடத்தையுள்ள பெண்களைக் கொண்ட வீடுகள் பல உண்டு. இப்பெண்கள் விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்ல. என்றாலும், தங்கள் கற்பு நெறியைக் குறித்து அவர்கள் அவ்வளவாகக் கவலைப்படாதவர்கள். இப்படிப்பட்ட வீடுகளில் ஒன்றில் நாங்கள் தங்கியிருந்தோம். இதைப்பற்றி வரவேற்புக் கமிட்டிக்கு எதுவுமே தெரியாது என்பதைக் குறித்து நான் சொல்லத் தேவையில்லை. போர்ட்ஸ்மவுத் போன்ற ஒரு பட்டணத்தில் தங்குவதற்கு நல்ல இடம் எது, கெட்ட இடம் எது என்பதைக் கண்டுபிடிப்பது எங்களைப்போல் எப்பொழுதோ ஒரு சமயம் அங்கே போகிறவர்களுக்குக் கஷ்டமாகவே இருந்திருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், என்பதை, வேறு - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்