சத்ய சோதனை - பக்கம் 408
வேண்டும். அவர்கள் எல்லோருக்குமே இது புதிய அனுபவம். அப்பையன் கதறி அழுதான். தன்னை மன்னிக்குமாறும் வேண்டினான். அவன் அழுதது, பட்ட அடி அவனுக்கு வேதனையாக இருந்ததனால் அல்ல. அவன் பதினேழு வயதுள்ள திடகாத்திரமானவன். விரும்பியிருந்தால், என்னை அவன் திருப்பி அடித்திருக்கவும் கூடும். ஆனால், அடிக்கவேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டதைக் குறித்து நான் அடைந்த மனவேதனையை அவன் அறிந்துகொண்டான். இச் சம்பவத்திற்குப் பிறகு அவன் எனக்குப் பணியாமல் இருந்ததே கிடையாது. என்றாலும், பலாத்காரத்தை உபயோகித்ததற்காக நான் இன்றும் வருத்தப்படுகிறேன். அன்று அவனுக்கு முன்னால் என்னுள் இருக்கும் ஆன்ம உணர்ச்சிக்குப் பதிலாக மிருக உணர்ச்சியையே காட்டி விட்டேன் என்று அஞ்சுகிறேன்.
அடிப்பது போன்ற தண்டனையே கூடாது என்று நான் எப்பொழுதும் எதிர்த்து வந்திருக்கிறேன். என் குமாரர்களில் ஒருவனை ஒரே தடவை மாத்திரம் நான் அடித்துவிட்டதாக எனக்கு ஞாபகம். ஆகையால், அன்று நான் ரூல் தடியை உபயோகித்தது சரியா, தவறா என்பதில் நான் இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாதவனாகவே இருக்கிறேன். கோபத்தினாலும், தண்டிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் தூண்டப் பெற்று நான் அவ்விதம் செய்ததால் ஒருவேளை அது தவறானதாக இருக்கலாம். என் மன வேதனையை வெளிப்படுத்துவதாக மாத்திரமே அது இருக்குமாயின், அது நியாயமானதே என்று நான் கருதியிருப்பேன். ஆனால், இவ்விஷயத்தில் நோக்கம் கலப்பானதாகவே இருந்தது.
இச்சம்பவம், என்னை ஆழ்ந்து சிந்திக்கும்படி செய்தது, மாணவர்களைத் திருத்துவதற்குச் சிறந்த முறையையும் அது எனக்குப் போதித்தது. ஆனால், அம்முறை நான் கூறிய அந்தச் சந்தர்ப்பத்தில் எவ்வளவு தூரம் பயன்பட்டிருக்கும் என்று நான் கூற முடியாது. இளைஞன் சீக்கிரத்திலேயே அச் சம்பவத்தை மறந்துவிட்டான். எப்பொழுதேனும் அவனிடம் அதிக அபிவிருத்தி காணப்பட்டதாகவும் எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இச் சம்பவம் மாணவர்கள் விஷயத்தில் உபாத்தியாயரின் கடமை என்ன என்பதை நான் நன்றாக அறிந்துகொள்ளும்படி செய்தது.
சிறுவர்கள் தவறாக நடந்துகொண்டுவிட்ட சம்பவங்கள் இதற்குப் பிறகும் நடந்தது உண்டு. ஆனால், அடி கொடுக்கும் தண்டனையில் அதன் பிறகு நான் இறங்கியதே இல்லை. இவ்விதம் என்னிடம் இருந்த சிறுவர் சிறுமியருக்கு ஆன்மிகப் பயிற்சி அளிக்க நான் செய்த முயற்சியில் ஆன்மாவின் சக்தியை மேலும் மேலும் நன்றாக நான் அறியலானேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 406 | 407 | 408 | 409 | 410 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், ஆனால், அவன், என்று - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்