சத்ய சோதனை - பக்கம் 127
எண்ணினார். என்னுடைய உடையின் கோலத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்துவிட்டு, ஐரோப்பியர்களைப் போல எனக்கும் அதிகச் செலவாகும் என்று நினைத்துவிட்டார். குறிப்பாக எனக்குக் கொடுக்கக்கூடிய வேலையும் அப்பொழுது எதுவும் இல்லை. அவர்கள் வழக்கோ டிரான்ஸ்வாலில் நடந்துகொண்டிருந்தது. என்னை உடனே அங்கே அனுப்புவது என்பதிலும் அர்த்தமில்லை. என்னுடைய திறமையும் யோக்கியப் பொறுப்பையும் அவர் எந்த அளவுக்கு நம்ப முடியும்? என்னைக் கண்காணிப்பதற்கு அவர் பிரிட்டோரியாவில் இருந்து வர இயலாது. பிரதிவாதிகள், பிரிட்டோரியாவில் இருக்கின்றனர். அவர்கள் என்னை எந்த வழியிலாவது வசப்படுத்திக் கொள்ளக்கூடும் என்று அவர் கருதினார். சம்பந்தப்பட்ட வழக்கைப் பற்றிய வேலையை ஒப்படைப்பது? வேறு வேலைகளெல்லாம், அவருடைய குமாஸ்தாக்களே என்னைவிட நன்றாகச் செய்துவிட முடியும். மேலும் தவறு செய்யும் குமாஸ்தாக்களைக் கண்டிக்க முடியும். நானும் தவறு செய்ய நேர்ந்து விட்டால்,என்னை கண்டிக்க முடியுமா? ஆகையால், வழக்குச் சம்பந்தமான வேலை எதையும் என்னிடம் கொடுக்க முடியவில்லையென்றால், ஒரு பயனும் இல்லாமல் என்னை வைத்துக் கொண்டிருக்க நேரும்.
அப்துல்லா சேத், எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றே சொல்லலாம். ஆனால், மிகுந்த அனுபவ ஞானம் உள்ளவர். அதிகக் கூர்மையான அறிவு படைத்தவர். தமக்குப் புத்திசாலித்தனம் அதிகம் உண்டு என்பதை அவரும் உணர்ந்திருந்தார். பழக்கத்தினால், பேசுவதற்குப் போதுமான அளவு அவருக்கு ஆங்கிலமும் தெரியும். அதைக் கொண்டு அவர், பாங்க் மானேஜர்களிடமோ, ஐரோப்பிய வர்த்தகர்களிடமோ பேசியும், தமது வழக்குச் சம்பந்தமாக வக்கீல்களிடம் தமது கட்சியை விளக்கியும் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தார். இந்தியர்களுக்கு அவரிடம் உயர்ந்த மதிப்பு உண்டு. அச்சமயம் இந்தியரின் வியாபார ஸ்தலங்களில் அவருடைய கம்பெனியே மிகப் பெரியது ; அல்லது பெரியவைகளில் ஒன்று என்றாவது சொல்ல வேண்டும். இவ்வளவு சாதகமான வசதிகளெல்லாம் இருந்தும், அவருக்குப் பிரதிகூலமானதும் ஒன்று உண்டு. அது, அவர் சுபாவத்திலேயே சந்தேகப் பிராணியாக இருந்ததுதான்.
இஸ்லாம் மதத்தின் சிறப்பில் அவர் பெருமைகெள்ளுபவர். அம்மதத்தின் தத்துவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதிலும் அவருக்குப் பிரியம் அதிகம். அவருக்கு அரபு மொழி தெரியாது. என்றாலும் பொதுவாகத் திருக் குர் ஆனிலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் அவருக்கு ஓரளவு நல்ல ஞானம் உண்டு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 125 | 126 | 127 | 128 | 129 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவர், உண்டு, என்னை, அவருக்கு, முடியும் - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்