என் சரித்திரம் - பக்கம் - 618







[மருந்து - அமிர்தம். திமிரம் - இருள், அறியாமை, ஆதவனைப் பொரும் - சூரியனை ஒக்கும். புஸ்தகம் கடிதம் எழுதுகையில் பெறாவிடினும் துணிவு பற்றிப் பெற்றேனென்று எழுதினார்.]

அந்தக் கடிதங் கண்டு என் உள்ளம் உவகையால் பொங்கியது. உடனே என் நன்றியறிவைத் தெரிவித்து எட்டுப் பாடல்கள் அமைந்த விடைக் கடிதத்தை எழுதியனுப்பினேன். முதலியார் தாம் எழுதிய பாடல்கள் பொருளில்லாப் பாடல்களென்று தம் கடிதத்தில் குறித்திருந்தார். அதற்கு விடையாக, ‘தங்கள் பாடலோடு பணம் வந்தமையால் அவையே பொருளமைந்த பாடல்கள்; என்னுடையனவே பொருளிலாப் பாடல்கள் என்னும் கருத்தமைய,

“பொருளிலாப் பாட்டென்று புகன்றனைநீ நவின்றசுவை பொழியும் பாவைப் பொருளிலாப் பாடல்களென் பாடல்பொரு ளுளபாடல் புகழ்நின் பாடல் பொருளுடனே விரவியஞ்சல் வழிவந்த செயலொன்றே பொருந்து சான்றாம் பொருளிலா வெனையுமொரு பொருளாக்கொள் நயசுகுணப் புகழ்க்கோ மானே”


[பொருள் - நல்ல கருத்து, பணம். அஞ்சல் - தபால். சான்று - சாட்சி] என்னும் பாடலை எழுதினேன்.

ஒரு வாரத்துக்கெல்லாம் சென்னையிலிருந்து பைண்டர் நூறு பிரதிகள் வரையில் பைண்டு செய்து ஒரு பெட்டியில் அனுப்பியிருந்தார். அதைப் பிரித்துப் புஸ்தகங்களை எடுத்துக் கோலம் போட்ட ஒரு பலகையின் மேல் வைத்து மாலை சாத்திக் கற்பூர நீராஞ்சனம் செய்து மஞ்சள் நீர் சுற்றி என் தாயார் என் கையில் எடுத்து அளித்து ஆசீர்வாதம் செய்தார். என் தந்தையார் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார். -----------------------------------------------------------------------------

இவற்றை நான் வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை முதற்பாகத்தில் விரிவாக எழுதியுள்ள அரங்கநாத முதலியார் சரித்திரத்திற் காணலாம்.








தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
பக்கம் - 618 - En Sarithiram - என் சரித்திரம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - பாடல்கள், என்னும்