என் சரித்திரம் - பக்கம் - 253
புராணத்தையும் எடுத்து வந்தான். அவனிடமிருந்து மாயூரப் புராணத்தை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டுப் புஸ்தகக் கட்டை முன் இருந்த இடத்திற் கொண்டுபோய் வைக்கும்படி கட்டளையிட்டார். நான் அப்புராணத்தைப் பெற்று என் ஆசிரியர் இருந்த இடம் சென்றேன். “ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பினோம்” என்ற எண்ணத்தோடு அவரை அணுகி நிகழ்ந்தவற்றைச் சொன்னேன்.
அவர் செய்யுள் செய்யும் முறைகளைச் சிறிது நேரம் உதாரணங்களுடன் சொல்லி விளக்கினார். பிறகு மாயூரப்புராணத்தில் விட்ட இடத்திலிருந்து பாடம் கேட்க ஆரம்பித்தேன்.
ஆறுமுகத்தா பிள்ளையின் ஆக்ஞைப்படி நானாக இயற்றிய பாட்டு என் மனத்தில் பிறந்தது; அது வெளிப்படாமலே நின்று விட்டது. நானும் அதை மறந்து விட்டேன். “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்ற பகுதியை மாத்திரம் நான் நினைவில் வைத்திருக்கிறேன். இயல்பாகவே நிமிஷத்திற்கு நிமிஷம் மாறும் முகச் செம்மலாகிய ஆறுமுக பூபாலர் என் சொந்தப் பாட்டைக் கேட்டிருந்தால் என்னை என்ன பாடுபடுத்தி வைத்திருப்பாரோ, கடவுளே அறிவார்!
அத்தியாயம்-42
சிலேடையும் யமகமும்
பட்டீச்சுரத்தில் இருந்தபோது பிள்ளையவர்கள் இடையிடையே கும்பகோணம் முதலிய இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்பொழுது நானும் உடன் சென்று வருவேன். பட்டீச்சுரத்திலுள்ள ஆலயத்திற்கு ஒருநாள் சென்று தரிசனம் செய்து வந்தோம். அக்கோயிலில் தேவி சந்நிதானத்தில் ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரது பிம்பமும் அவர் பத்தினியாரது பிம்பமும் இருக்கின்றன. அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். தஞ்சையிலிருந்து அரசாண்ட அச்சுதப்ப நாயக்கரிடம் அமைச்சராக இருந்து பல அரிய தர்மங்களைச் செய்தவர் ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர். அவர் பட்டீச்சுரத்து அக்கிரகாரத்தில் வசித்து வந்தனராம்.
சிலேடைப் பாட்டு
மற்றொரு நாள் சிறந்த சுப்பிரமணிய ஸ்தலமாகிய ஸ்வாமி மலைக்குச் சென்று முருகக் கடவுளைத் தரிசனம் செய்தோம். முருகக்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 251 | 252 | 253 | 254 | 255 | ... | 761 | 762 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 253 - En Sarithiram - என் சரித்திரம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - சென்று, அவர்