நீச்சல் தாரகை நிஷா மில்லட்!
நீச்சல் விளையாட்டில் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்ற பெருமை இவருக்குண்டு. 1999-ல் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டியில் 14 தங்கங்களை வென்று வரலாறு படைத்தவர்; 11 வயதிலேயே தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்று அதிவேக நீச்சல் வீராங்கனை பட்டத்தைப் பெற்றவர் என இவரது பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அவர்தான் கர்நாடகத்தின் நீச்சல் வீராங்கனை நீஷா மில்லட்.
பெங்களூரில் பிறந்த நிஷா மில்லட், சிறு வயதிலேயே நீச்சல் பழகத் துவங்கிவிட்டார். பெற்றோர் கொடுத்த ஊக்கத்தாலும், பள்ளி ஆசிரியர்கள் தந்த உற்சாகத்தாலும் குறுகிய காலத்திலேயே இவர் பல வெற்றிகளைப் பெற முடிந்தது. துவக்க காலத்தில் நாள்தோறும் 2 மணி நேரம் நீச்சல் பழகிக் கொண்டிருந்த நிஷா, பின்னர் பயிற்சி நேரத்தை படிப்படியாக அதிகரித்துக் கொண்டார். 8 வயது முதல் நீச்சல் பயிற்சியாளர்களிடம் பயிற்சிக்குச் சேர்ந்து பல்வேறு நீச்சல் முறைகளைக் கற்று முன்னேறினார்.
பள்ளிகளில் துவங்கிய வெற்றி படிப்படியாக பள்ளிகளிடையே போட்டி, மாவட்ட அளவிலான போட்டி, மாநில அளவிலான போட்டி என்று முன்னேறியது. காலையில் அதி சீக்கிரம் எழுந்துவிடும் நிஷா மில்லட் நீச்சல் பழகத் தவறுவதில்லை. இவரது விடாப்பிடியான பயிற்சியின் மூலம் தேசிய அளவில் அவருக்குப் பாராட்டும், புகழும் வந்து சேர்ந்தது.
1994-ல் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் தனது 11-வது வயதில் வெற்றிகண்டார். அதோடு அதிவேக நீச்சல் வீராங்கனை என்ற பட்டத்தையும் அவர் தனக்குச் சொந்தமாக்கினார். இதே விளையாட்டுப் போட்டியில் குறைந்த வயதில் தங்கம் வென்றவர் என்ற சாதனையையும் புரிந்தார்.
1995-ல் இலங்கையில் நடைபெற்ற ஆசிய பசிபிக்விளையாட்டுப் போட்டிகளில் தங்கத்தை வென்றார். 1996-ல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களைப் பெற்றார். 1998-ல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 1999-ல் தில்லியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் போட்டிகளிலும், 1999-ல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கங்களைக் குவித்து இந்திய அணியின் மானம் காத்தார்.
1999-ல் நடைபெற்ற தேசிய நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் 14 தங்கங்கள், ஒரு வெள்ளி வென்று புதிய தேசியச் சாதனையைப் படைத்தார். இதுவரை இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது சிறப்பம்சம்.
ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியின் 100 மீட்டர் பிரிவில் 1 நிமிடத்துக்குள் தூரத்தைக் கடந்த முதலாவது இந்திய பெண் நீச்சல் வீராங்கனை என்ற சாதனையை நிஷா மில்லட் புரிந்தார். தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்த சாதனையை அவர் செய்து காட்டினார். அதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதலாவது இந்திய நீச்சல் வீராங்கனை என்ற பெருமையும் நிஷாவுக்கு உண்டு.
நிஷா மில்லட்டின் சாதனையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருதை வழங்கியது. கர்நாடகத்திலிருந்து அர்ஜுனா விருது பெறும் முதலாவது நீச்சல் வீராங்கனை நிஷா என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) ஓராண்டுக்கான உதவித்தொகையையும் நிஷா பெற்றார். நிஷாவின் சாதனைகளைப் பாராட்டி இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு ஐஓசி தேர்ந்தெடுத்தது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உதவித்தொகையைப் பெறும் முதலாவது நீச்சல் வீராங்கனை நிஷா ஆவார்.
பெங்களூர் மவுண்ட் கார்மேல் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை படித்துள்ளார் இவர். ''இடைவிடாத பயிற்சி, மனோதிடம், எதையும் செய்து முடிக்கும் திறமை, இலக்கு நிர்ணயித்தால் அதை எட்டிப் பிடிக்கும் தைரியம் ஆகியவைதான் தனக்கு சர்வதேச புகழைப் பெற்றுத் தந்தது'' என்கிறார் நிஷா மில்லட். தினந்தோறும் பயிற்சி, போட்டிகளுக்கு இடையேயும் தனது குடும்பத்தாருடன் சேர்ந்திருப்பதை மிகவும் விரும்புகிறார். இவரது தங்கை ரேஷ்மா மில்லட்டும் நீச்சல் வீராங்கனையே. நேரம் கிடைக்கும் போது அக்கா நிஷாவும் தங்கை ரேஷ்மாவும் சேர்ந்து பெங்களூரை வலம் வருவது பொழுதுபோக்கு. சைக்காலஜியில் பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்பது இவரது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்ற உறுதியோடு இருக்கிறார்.
குறுகிய காலத்துக்குள் இந்திய நீச்சல் வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்துள்ளார் நிஷா. ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் பெண்மணியாக திகழ வேண்டும் என்பதுதான் இந்த இளம் நீச்சல் வீராங்கனையின் விருப்பம். சாதனைப் படிகளை நோக்கி அவர் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார். ஒலிம்பிக் போட்டியில் அவர் வெற்றி பெறவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
நன்றி: தினமணி
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீச்சல் தாரகை நிஷா மில்லட்!, நீச்சல், நிஷா, நடைபெற்ற, வீராங்கனை, விளையாட்டுப், போட்டியில், ஆசிய, மில்லட், சர்வதேச, ஒலிம்பிக், தேசிய, இவரது, அவர், முதலாவது, இந்திய, போட்டிகளில், என்பது, பயிற்சி, வென்று, போட்டி, தனது, போட்டிகளிலும், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி