ஸ்டார் ஆஃப் இந்தியா ஹரிணி!

பூப்பந்தாட்டம். கர்ப்ப காலத்தில் மகளிர் விளையாடுவதற்காக தஞ்சை மன்னரால் உருவாக்கப்பட்ட விளையாட்டு. பழமை வாய்ந்த விளையாட்டும் கூட. அவ் விளையாட்டில் இரண்டாவது முறையாக இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ''ஸ்டார் ஆஃப் இந்தியா'' எனும் உயரிய விருதைப் பெற்றுள்ளார் சென்னை மாணவி என். ஹரிணி (23).
ஆந்திர மாநிலம் செகந்திராபாதில் சமீபத்தில் நடைபெற்ற 50-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் அதி சிறப்பாக விளையாடியதற்காக இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனம் அவ் விருதை இந்த ஆண்டும் அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
போட்டியில் அதி சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில் ''ஸ்டார் ஆஃப் இந்தியா'' விருது கொடுத்து கௌரவிக்கப்படுவது வழக்கம்.
அச் சிறப்பை 2-வது முறையாக தமிழகத்துக்குப் பெற்றுள்ள தந்துள்ளார் ஹரிணி.
பல்லாவரத்தைச் சேர்ந்த ஏ.என். நாகராஜன் - சுந்தரி தம்பதியின் ஒரே மகள் ஹரிணி. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். விளையாட்டுப் பின்னணி ஏதும் குடும்பத்துக்குக் கிடையாது. அவர் குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி. வைஷ்ணவ கல்லூரியில் பி.எஸ்.ஸி படித்துக் கொண்டிருக்கும் போது எதார்த்தமாகப் பூப்பந்தாட்டத்தைப் பார்த்ததின் விளைவு. இன்று தமிழகம் முழுவதும் இவ் விளையாட்டில் அங்கீகாரம் பெற்றவராக உயரச் செய்துள்ளது.
முன்கள வீராங்கனையோ அல்லது பின்கள வீராங்கனையோ சரியாக விளையாடா விட்டால் அவர்களது ஆட்டத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய பொறுப்பு ''சென்டர்'' எனும் நடுக்கள வீராங்கனைக்கு உண்டு. அதில் செம்மையுற்று விளங்குவதால் தமிழகப் பூப்பந்தாட்டக் கழகம் அவரை கடந்த சில ஆண்டுகளாக மாநில அணிக்குத் தேர்வு செய்யத் தவறுவதில்லை.
செகந்திராபாதில் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்ற தேசியப் போட்டியில் நூலிழையில் கர்நாடகத்திடம் அரையிறுதியில் தோல்வியுற்று மூன்றாவது இடத்தைப் பெற்றனர் தமிழக மகளிர்.
அது குறித்து வருத்தம் தெரிவித்த ஹரிணி, பல ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை வென்றுவரும் கேரளத்தை வீழ்த்த வேண்டும் என்பதையே தமிழக சங்கம் இலக்காகக் கொண்டு பயிற்சியளித்து வருகிறது என்றார். ஆனால் இம்முறை அந்த நோக்கம் நிறைவேறவில்லை. எப்படியும் ஒருநாள் கேரளத்தைத் தோற்கடிப்போம் என்று உறுதியுடன் கூறுகிறார் அவர்.
தற்போது சென்னை சோழிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் (ஸ்போர்ட்ஸ் கோட்டா) முதுகலை தகவல் தொழில்நுட்பம் முதலாமாண்டு படித்து வருகிறார்.
அவர் கூறியதாவது பார்ப்பதற்கு எளிதான விளையாட்டு போலத் தெரியும் பூப்பந்தாட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆர்வமும், உறுதியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இவ்விளையாட்டில் முன்னேறலாம்.
மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவை அங்கீகாரம் செய்துள்ள விளையாட்டும் கூட. ஆனால் வேலை வாய்ப்பு மட்டும் மகளிருக்கு அணு அளவும் கிடையாது.
கர்ப்ப காலத்தில் மகளிர் விளையாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட இவ்விளையாட்டில் ஆடவர்களுக்கே சில நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றன. மகளிர் மட்டும் என்ன பாவம் செய்தனரோ தெரியவில்லை. அதனாலேயே பல ஓபன் போட்டிகள் தற்போது நடைபெறுவதில்லை. மகளிர் பங்கேற்பும் குறைந்து வருகிறது. ஆனால் என்னைப் போல வைராக்கியம் உடையவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நான் இந்த அளவு முன்னேறியதற்கு காரணம் பயிற்சியாளர் ஐ.சார்லி ராஜ்குமார் என்றால் மற்றொரு காரணம் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி இயக்குநர் பாபு மனோகரன் என்றார்
மகளிர் பூப்பந்தாட்டத்தைப் பொருத்த வரை பூவிழி எனும் சென்னை வீராங்கனையின் பெயர் வெளி உலகுக்குப் பரிச்சயமானது. அந்த வரிசையில் கோவையைச் சேர்ந்த லீலா குமாரி, ஞான மலர் ஆகியோருக்கும் இடம் உண்டு. அவர்களைத் தொடர்ந்து அந்த நட்சத்திரப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் ஹரிணி..
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்டார் ஆஃப் இந்தியா ஹரிணி!, மகளிர், ஹரிணி, விளையாட்டு, அந்த, போட்டியில், அவர், சென்னை, இந்திய, எனும், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி