சேதுபதி மன்னர் வரலாறு - ரகுநாத கிழவன் சேதுபதி
1. சேதுபதி மன்னர்களது ஆட்சியில் குத்தகை நாடு என வழங்கப்பெற்ற அறந்தாங்கிப் பகுதியில் இயங்கி வந்த முருகப்பன் மடம் தர்மத்திற்காகப் பகையணி, பிராந்தணி, திருப்பொற்கோட்டை ஆகிய மூன்று ஊர்களை கி.பி. 1692ல் தானமாக வழங்கினார்.
2. சேது நாட்டின் வடக்கே கிழக்குக் கடற்கரைப் பட்டினமான சுந்தரபாண்டியன் பட்டினத்தில் அக்கிரகார தர்மத்திற்காகவும். அந்த ஊரின் தென்மேற்கே உள்ள திருவேகம்பத்து ஏகாம்பர நாதர் சாமி கோயிலுக்கும் ஆக கி.பி. 1695ல் கொந்தாலன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான், சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் ஆகிய ஏழு கிராமங்களைத் தானமாக வழங்கினார்.
3. சேது நாட்டின் வடபகுதியில் உள்ள தென்னாலை நாட்டில் அமைந்துள்ள எழுவன் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் எழுவாபுரீஸ்வரர், அகிலாண்ட ஈஸ்வரி ஆகியவர்களின் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவைகளுக்காக இடையன்வயல், கள்ளிக்குடி, புதுக்கோட்ட்ை ஆகிய மூன்று கிராமங்களை கி.பி. 1694ல் தானமாக வழங்கினார்.
4. இராமநாதபுரத்தை அடுத்த மிகச்சிறந்த சைவத் திருத்தலமாகிய திரு உத்தரகோசமங்கை திருக்கோயிலுக்கு திருஉத்தரகோசமங்கை கிராமத்தையும், அதனை அடுத்துள்ள கிராமங்களையும் கி.பி. 1678ல் தானமாக வழங்கியுள்ளார்.
5. சேதுநாட்டின் சிறந்த பழம்பெரும் துறைமுகமான கீழக்கரையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்கு ஏற்கனவே திருமலை சேதுபதி மன்னர் புல்லந்தை முதலிய கிராமங்களை வழங்கியதை முன்னர் பார்த்தோம்.
இந்தக் கோயிலில் பணியாற்றிய இராமலிங்க குருக்களுக்குத் தகுந்த வருவாய் இல்லாததை உணர்ந்த ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் அந்த ஊரின் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்ற பொருள்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மகமையாகக் குருக்கள் பெற்றுக் கொள்வதற்கான உரிமை வழங்கியதை கி.பி. 1678 அவரது செப்பேடு தெரிவிக்கின்றது.
இத்தகைய தெய்வீகத் திருப்பணிகளில் முனைந்திருந்த சேதுமன்னர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தக்க துணையாக வாழ்ந்து வந்தார். மிதிலைப்பட்டி, அழகிய சிற்றம்பலக் கவிராயரை ஆதரித்துச் சிறப்பித்தார். திருமருதூர் என்னும் நயினார் கோவிலில் எழுந்தருளியுள்ள நாகநாத சுவாமி செளந்தரவள்ளி அம்மன் ஆகியோர் மீது அந்தாதி இலக்கியம் ஒன்றை இயற்றிய கார் அடர்ந்த குடி தலமலைகண்ட தேவர் என்ற புலவரைப் பாராட்டிப் பல சிறப்புக்களைச் செய்தார். இன்னும் பல புலவர்கள் இந்த மன்னரால் பொன்னும், பொருளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அறியத்தக்கனவாக இல்லை.
இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் சேதுநாட்டைச் சூழ்ந்திருந்த மதுரை நாயக்க அரசு தஞ்சாவூர் மராட்டிய அரசு ஆகியவைகளுடன் நட்பும், நல்லிணக்கமும் கொண்டு நல்ல அரசியல் உறவுகளை வளர்த்து வந்தார். ஆனால் நாயக்க மன்னரும், மராட்டிய மன்னரும் சேதுபதி மன்னருடன் நேர்மையான அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்க வில்லை என்பதை வரலாறு தெரிவிக்கின்றது.
கி.பி. 1680ல் திருச்சியிலிருந்த மதுரைச் சொக்கநாத நாயக்கரை, அவர் கோட்டையைவிட்டு உலவுவதற்காக வெளியே சென்றபோது, கோட்டைத் தளபதியான ருஸ்தம்கான் என்பவன் அவரைக் கைது செய்து சிறையிலிட்டான். அடுத்து அவரது உடன்பிறப்பான அலகாத்திரி நாயுடுவை திருச்சி ஆட்சிபீடத்தில் அமரச் செய்து அவரது மேல்பிரதிநிதியாக ருஸ்தம்கான் மதுரை அரசியலை நடத்தி வந்தான். இதனைத் தனது நண்பரும் கன்னிவாடி பாளையக்காரருமான சின்னக் கத்திரி நாயக்கரது மூலம் தெரிந்த சேதுபதி மன்னர், மிகவும் வேதனை அடைந்தார். மேலும் கன்னிவாடி பாளையக்காரர் வேண்டுதலின்படி, இராமநாதபுரம் சீமையிலிருந்த திறமையான போர் வீரர்களது அணியுடன் கன்னிவாடி சென்று அவரையும் அழைத்துக்கொண்டு திருச்சி கோட் டைக்குச் சென்றார். இவர்கள் இருவரும் திட்டமிட்டபடி ருஸ்தம்கானை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பதுபோல் அவரைச் சந்தித்தபோது, அவர் எதிர்பாராத நிலைமையில் சேதுபதி மன்னரது வீரர்கள் ருஸ்தம்கானைத் தாக்கி ஒழித்தனர். அடுத்துச் சிறையிலிருந்த மன்னர் சொக்கநாத நாயக்கரையும் விடுதலை செய்து மீண்டும் திருச்சியின் ஆட்சிபீடத்தில் அமர்த்தினார். அதனால் மனம் நெகிழ்ந்த சொக்கநாத நாயக்க மன்னர், சேதுபதி மன்னருக்குப் பல பாராட்டுக்களைச் செய்ததுடன் பரராஜகேசரி (எதிரிகளுக்கு சிங்கம் போன்றவர்) என்ற சிறப்பு விருதையும் வழங்கிச் சிறப்பித்தார்[5]. மேலும் சேதுபதிச் சீமை அரசியல் நிர்வாகம் செவ்வனே நடப்பதற்குத் தமது பிரதானிகளில் ஒருவரான குமாரப் பிள்ளையையும் இராமநாதபுரம் கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.
- ↑ 5. Sathya Natha Ayyar. A - History of Madurai Nayaks (1928).
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரகுநாத கிழவன் சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி, மன்னர், தானமாக, சொக்கநாத, செய்து, கன்னிவாடி, அரசியல், அவரது, ஆகிய, வழங்கினார், நாயக்க