சேதுபதி மன்னர் வரலாறு - ரகுநாத கிழவன் சேதுபதி
சில ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய ஜான் டி பிரிட்டோ பாதிரியார் கி.பி. 1692ல் மீண்டும் சேது நாட்டிற்கு வந்து மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் சமயத்தொண்டை மேற்கொண்டார். இதனால் சினமுற்ற, மன்னர், செருவத்தி பாளையக்காரரது தலையீட்டையும் புறக்கணித்துப் பாதிரியாருக்கு மரண தண்டனை வழங்கினார். இந்தக் கடுமையான நடவடிக்கையினால் சேதுபதி மன்னரது கடைசி எதிரி செருவத்தி பாளையக்காரரும் ஒழித்துக் கட்டப்பட்டார்.
மற்றுமொரு மன்னருக்கு எதிரான கிளர்ச்சி சாயல்குடி பகுதியில் எழுந்தது. சேதுபதி மன்னர் அந்தப் பகுதிக்கு முகாம் சென்ற பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஏழு பாளையக்காரர்கள் குடிமக்களைத் திரட்டி மன்னரைத் தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்திருந்தனர். தற்செயலாக இந்தச் சதியினைக் கேள்வியுற்ற மன்னர் சதிகாரர்களான பாளையக்காரர்களை ஒருவர் பின் ஒருவராகத் தம்மைச் சந்திக்குமாறு செய்து அவர்களைத் தனித்தனியாகக் கொன்று ஒழிக்க ஏற்பாடு செய்தார். இத்தகைய கடுமையான எதிர் நடவடிக்கை களினால் குழப்பம். கிளர்ச்சி, சதி என்ற சிக்கல் சேது நாட்டு அரசியலி லிருந்து அகன்று விட்டன. இப்பொழுது மன்னர் அமைதியாகப் பல ஆக்கப் பணிகளில் ஈடுபட்டார்.
திருப்பணிகள்
தமது முன்னோர்களைப் போல இராமேஸ்வரம் திருக்கோயிலில் திருப்பணிகள் பலவற்றை மேற்கொண்டார். இராமேஸ்வர திருக்கோயிலில் அன்றாட பூஜை முதலிய கைங்கரியங்களுக்குத் திருவாடானை வட்டம் இராஜசிங்கமங்கலம் ஏரியின் 48 மடைகளில் ஒரு மடை வழியாக வெளிப்படும் வெள்ளப் பெருக்கினால் வேளாண்மை நடைபெறுகின்ற நிலப்பரப்பு முழுமையையும் இந்த மன்னர் கி.பி. 1697ல் தானமாக வழங்கினார். இதன் காரணமாக இந்த மடை பின்னர் இராமனாத மடை எனப் பெயர் பெற்றது. மேலும் இந்தக் கோயிலில் நடைபெறும் 'தேவர் கட்டளை" என்ற 'உச்சி கால கட்டளை' முதலிய நிகழ்ச்சிகளைச் சரிவர நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக இந்த மன்னர் இராமேஸ்வரம் சங்கர குருக்கள் மகன் ரகுநாத குருக்களைத் தமது சொந்தப் பிரதிநிதியாக நியமித்து அவருக்குத் திருக்கோயிலில் வழங்கப்பட வேண்டிய மரியாதைகள் முதலியனவற்றை நிர்ணயம் செய்ததை இந்த மன்னரது இன்னொரு செப்பேட்டுச் செய்தி மூலம் தெரியவருகிறது. இந்தக் கோவிலின் நடைமுறைகளைக் கவனிப்பதற்கு என ஆதீனகர்த்தர் ஒருவர் இருந்து வந்தபொழுதிலும் ரெகுநாத குருக்கள் புதிதாக ஏன் நியமனம் செய்யப்பட்டார் என்ற வினா இங்கு எழுகிறது. இந்தத் திருக்கோயிலின் உச்சிக்காலக் கட்டளையை இந்த மன்னரது முன்னோ ரான முதலாவது சடைக்கத்தேவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆதலால் சேதுபதி மன்னர் இந்தக் கட்டளையை மிகப் புனிதமான செயலாகக் கருதி அதனைச் செம்மையாக நாள்தோறும் தவறாமல் நிறைவேற்றுவதைக் கண்காணிப்பதற்கு ரெகுநாத குருக்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. மற்றும் இந்தத் திருக்கோயிலுக்கு வருகைதருகின்ற பயணிகளுக்கு இராமேஸ்வரத்தில் அன்னசத்திரம் ஒன்றினை நிறுவி அதன் பராமரிப்புக்கு உதவுவதற்காக முதுகளத்துர் வட்டத்தில் உள்ள நல்லுக்குறிச்சி என்ற ஊரினைச் சர்வமானியமாக வழங்கியதை கி.பி.1691ஆம் ஆண்டு செப்பேடு தெரிவிக்கின்றது. அந்தச் சத்திரம் இன்றும் இராமேஸ்வரம் மேலரத வீதியில் நடத்தப்பட்டு வருகிறது.
தமது முன்னவரான திருமலை ரகுநாத சேதுபதி மன்னரைப் போன்று வைணவ திருத்தலமான திருப்புல்லாணித் திருக்கோயிலின் பூஜை திருவிளக்கு. நந்தவனம், ஆடித்திருவிழா போன்ற திருப்பணிகளுக்காக இராமநாதபுரம், முதுகளத்துர், பரமக்குடி வட்டாரங்களில் உள்ள இருபத்தி ஏழு கிராமங்களை இந்த மன்னர் அந்தக் கோயிலுக்குத் தானமாக வழங்கியிருப்பது வியப்பிற்குரிய செய்தியாக உள்ளது[2]. அதுவரை சேதுபதி மன்னர் எவரும் ஒரு கோவிலுக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான கிராமங்களைத் தானம் வழங்கியது வரலாற்றில் காணப்படவில்லை. இன்னொரு வைணவத் திருத்தலமான திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள செளமிய நாராயணப் பெருமாளுக்கும் சில அறக்கொடைகளை வழங்கி உதவினார். அந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரிவேட்டைத் திருவிழாவிற்கு வழங்கியுள்ள கிராமங்கள் பற்றிய கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது[3]. இந்த அரிய நிகழ்ச்சி இந்த சேதுபதி மன்னர் தம்மைச் சார்ந்துள்ள சைவ சமயத்தைப் போன்று வைணவம், சமணம், இஸ்லாம் ஆகிய சமய நிறுவனங்களுக்கு இயல்பான சமயப் பொறையுடன் அறக்கொடைகளை வழங்கியிருப்பதை அவரது செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றன.
இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டத்தில் உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் தர்மத்திற்காக உத்தார நாட்டு கானுர் கிராமத்தைத் தானமாக வழங்கியிருப்பதை அங்குள்ள கி.பி. 1696ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது[4]. மேலும் இந்த மன்னர் கீழ்க்கண்ட திருக்கோயில்களுக்கு அறக்கொடைகளை வழங்கியிருப்ப தைச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. திருச்சுழியல் வட்டம் காரேந்தல் கிராமத்து முஸ்லிம் மக்களது தொழுகைப் பள்ளியைப் பராமரிப்பதற்காக இந்த மன்னர் அந்த ஊரினைப் பள்ளிவாசல் தர்மமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தானம் நில மானியக் கணக்கு தெரிவிக்கின்றது.
- ↑ 2. Dr.S.M. கமால் - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994).
- ↑ 3. கமால் S.M. Dr - சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)
- ↑ 4. Dr. S.M. கமால் - சேதுபதி மன்னர் கல்வெட்டுகள் (2002)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரகுநாத கிழவன் சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், சேதுபதி, இந்தக், உள்ள, அறக்கொடைகளை, குருக்கள், தெரிவிக்கின்றது, இராமேஸ்வரம், மன்னரது, தமது, திருக்கோயிலில், தானமாக