முதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சேதுபதி மன்னர் வரலாறு » கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி
சேதுபதி மன்னர் வரலாறு - கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி
IV. கட்டையத் தேவர் (எ) குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
சுந்தரேஸ்வர சேதுபதியின் சகோதரரான இவர் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் 1728ல் சேதுநாட்டின் மன்னர் ஆனார். இவரது ஆட்சியில் சேதுநாடு இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பவானி சங்கரசேதுபதியை தோற்கடிக்க உதவிய தஞ்சை மன்னருக்கு பட்டுக்கோட்டை சீமைப்பகுதியையும் சசிவர்ணத் தேவருக்கு வைகை நதியின் வடகரைக்கும் பிரான்மலைக்கும் இடைப்பட்ட பகுதி சின்ன மறவர் சீமை என்ற பெயருடன் அவருக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதனால் சேதுநாட்டின் வலிமையும், வளமையும் குன்றியது. இவரது ஆட்சியில் தஞ்சை மராத்திய மன்னர் இராமநாதபுரம் சீமையைக் கைப்பற்றுவதற்காகப் பலமுறை முயற்சிகள் செய்தார். அவையனைத் தையும் சேதுபதி மன்னர் சிவகங்கை, எட்டையபுரம் வீரர்களின் உதவியுடனும் தமது தளவாய் வைரவன் சேர்வைக்காராது போர் ஆற்றல்களினாலும் முறியடித்து வெற்றி கொண்டார். இதனைத் தவிர இந்த மன்னரது ஆட்சியில் குறிப்பிடத்தக்க சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.
முந்தையர்களைப் போன்று ஆன்மீகத் துறைக்கு இந்த மன்னரது ஆட்சி அருந்துணையாக அமைந்து இருந்தது. இராமநாதபுரம் கோட்டைக்குத் தென்பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலை ஒட்டி ஒரு அக்கிரஹாரம் அமைப்பதற்கும், கமுதி. திருப்புல்லாணிக் கோவில்களுக்கும் பல அறக்கொடைகளை வழங்கி உள்ளார். மேலும் இந்த மன்னர் பெருவயல் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கோயில் ஒன்றினை அமைத்த அவரது தளவாய் வயிரவன் சேர்வைக்காரது திருப்பணியைப் பாராட்டி அந்தக் கோயிலின் பராமரிப்புச் செலவிற்காகப் பெருவயல், கலையனூர் கிராமத்தினை கி.பி.1736ல் சர்வமான்யமாக வழங்கி உதவினார். சேதுநாட்டில் குமரக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியை இங்ங்னம் முதல் முறையாக ஊக்குவித்துள்ளார். மற்றும் சேதுவில், இராமேஸ்வரத்தில் சோம வாரந்தோறும் அன்னதானம் நடைபெறுவதற்காக முத்துார் நாட்டிலுள்ள குளுவன்குடி என்ற கிராமத்தினையும் தானமாக வழங்கினார்.
முத்து விஜய ரகுநாத சேதுபதியின் நேர்மையான ஆணைப்படி மரண தண்டனை பெற்ற தண்டத்தேவரது இரு மனைவிகளான முத்து விஜய ரகுநாத சேதுபதியின் பெண்மக்கள் சீனிநாச்சியார், லெட்சுமி நாச்சியார் ஆகிய இருவரும் தங்கள் கணவரது சிதையில் விழுந்து தீக்குளித்து மரணம் அடைந்ததை நினைவூட்டும் வண்ணம் பாம்பனுக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட சேதுபாதையில் இரண்டு திருமடங்களை இந்த மன்னர் தோற்றுவித்தார். நாளடைவில் அந்த இருமடங்களைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் பெருகி இன்று அக்காமடம், தங்கச்சிமடம் என்ற பெயருடன் தனித்தனி ஊர்களாக இருந்து வருகின்றன.
இந்த மன்னரது மறைவு பற்றிய சரியான தகவல்கள் இல்லை. இவரையடுத்து இவரது மகன் சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற பட்டத்துடன் இராமநாதபுரம் சீமை மன்னர் ஆனார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், முத்து, சேதுபதி, விஜய, ரகுநாத, இராமநாதபுரம், மன்னரது, ஆட்சியில், பெயருடன், சேதுபதியின், இவரது