சேதுபதி மன்னர் வரலாறு - முத்து விஜயரகுநாத சேதுபதி
இவை தவிர இராமநாதபுரம் ஆதிமுத்துராமலிங்க சுவாமி திருக்கோவில் இந்த மன்னரால் அமைக்கப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது. மணிவாசகப் பெருமானால் திருப்பணி செய்யப்பட்டு திருவாசகப் பாடல்கள் பெற்ற திருப்பெருந்துறை ஆள்உடைய பரம சுவாமி ஆலயத்திற்கும் அந்தக் கோவிலினை நிர்வகித்து வருகின்ற திருவாவடுதுறை ஆதினத்திற்குமாகப் பல ஊர்களைக் குத்தகை நாட்டு அறந்தாங்கி வட்டத்தில் அறக்கொடைகளாக வழங்கியுள்ளார். தஞ்சை மண்டலத்தில் உள்ள திருமறைக்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஒரு மண்டபத்தினையும் அமைத்துக் கொடுத்துள்ளார் இன்றும் அந்த மண்டபம் சேதுபதி மண்டபம் என்றே வழங்கப்பட்டு வருகிறது. மற்றும் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் ஆலயத்திற்கு நம்பியூர் மாகாணத்து அன்னவாசல் என்ற ஊரினைத் தானமாக வழங்கியிருப்பதைத் திருவாரூர் கோயில் செப்பேடு ஒன்று தெரிவிக்கின்றது. இராமநாதபுரம் கோட்டைக்குள் உள்ளே அமைந்து உள்ள கோதண்டராமசுவாமி ஆலயத்திற்குக் காாாம்பல் என்ற கிராமத்தைத் தானமாக வழங்கியது இந்த மன்னரது சமரச மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அத்துடன் அந்தக் கோவிலின் பராமரிப்புச் செலவிற்காகச் சேதுநாட்டுப் பெருங்குடி மக்கள் ஆண்டுதோறும் எவ்வளவு கலம் நெல் இந்தக் கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ததுடன் இடையர்குடியைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் எவ்வளவு படி நெய்கொடுக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ததை ஒரு செப்பேட்டின் வழி அறிய முடிகிறது.
இந்த மன்னரது இறை பக்தியையும் அறஉணர்வையும் வெளிப் படுத்தக்கூடிய நிகழ்ச்சி ஒன்று வரலாற்றில் பதிவு பெற்றுள்ளது. இராமேஸ் வரத்திற்குச் சேதுபாதை வழியாக கால்நடையாக மண்டபம் தோணித் துறைச் சத்திரத்திற்கு வந்துசேரும் பயணிகள் கடலைக் கடந்து இராமேஸ் வரம் சென்று தங்களது பயணத்தை முடித்து வந்தனர். இவர்களது செளகரியத்திற்காகத் தோணித்துறையிலிருந்து பாம்பன் கரைக்குப் படகுகளை இயக்குவதற்கும் பாம்பன் சத்திரத்தில் தங்கிய இந்தப் பயணிகள் இராமேஸ்வரம் செல்வதற்கும் வசதிகளைச் செய்வதற்காக தண்டத் தேவர் என்ற ஒருவரை இராமேஸ்வரம் தீவு ஆளுநராக நியமனம் செய்தார். இவர் மன்னரது இரு பெண் மக்களையும் மணந்தவர்.
நாளடைவில் தண்டத்தேவர் பாம்பனுக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் சாலை வசதி ஏற்படுத்துவதற்காக இராமேஸ்வரம் பயணிகளிடம் ஒரு சிறிய தொகையை அன்பளிப்பாக வசூலித்து வந்தார். மன்னரது ஒப்புதல் இல்லாமல் தண்டத்தேவர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையைக் கேள்விப்பட்ட மன்னர் மிக்க ஆத்திரம் அடைந்தார். அதனை மிகப்பெரிய சிவத்துரோகமாகக் கருதித் தண்டத்தேவருக்கு மரண தண்டனை வழங்கினார். திருவாரூர்ப் புராணத்தில் சொல்லப்படுகின்ற மனுநீதிச் சோழனுக்கு ஒப்பாக இந்தச் சேதுபதி மன்னர் நடந்து கொண்டதால் அவரை மனுநீதி சேதுபதி என மக்கள் அழைத்தனர்.
இவ்விதம் நிர்வாகத்தில் மிகக் கடுமையான நேர்மையுடன் நடந்து வந்த இந்த மன்னர் உள்நாட்டு மக்களது அவலங்களைத் தீர்ப்பதற்கும் முயன்று வந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. மதுரைச் சீமையிலிருந்து கிழக்கு நோக்கிச் சேதுபதியின் சீமை வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமம் ஆகின்ற வைகை ஆற்றின் நீரினைச் செம்மையாக பயன் படுத்துவதற்காகத் திட்டம் ஒன்றை வகுத்து நிறைவேற்றினார். அதன் முடிவு தான் இராமநாதபுரம் நகருக்கு மேற்கே அமைக்கப்பட்டுள்ள பெரிய கண்மாய் என்ற நீர்த்தேக்கம் ஆகும். இதற்கு ரீ இராமபிரானது பெயரால் இரகுநாத சமுத்திரம் என்று பெயர் சூட்டியதை அவரது செப்பேடு ஒன்றின் மூலம் அறியப்படுகிறது.
இதனைப் போன்ற மிகப் பரந்த வறண்ட நிலமாக காட்சியளித்துக் கொண்டிருந்த முதுகளத்தூர் வட்டத்தின் மேற்கு கிழக்குப் பகுதிகளை வளமைமிக்க கழனிகளாக மாற்றுவதற்கு மற்றுமொறு திட்டத்தை இந்த மன்னர் வகுத்தார். கமுதிக்கோட்டைக்குத் தெற்கே கிழக்கு மேற்காகச் செல்லும் குண்டாற்றின் வடகரையில் ஒரு கால்வாயினை அமைத்து அதன் மூலம் முதுகளத்தூர் இராமநாதபுரம் வட்டங்களின் பகுதிகள் குண்டாற்று நீரினால் பயனடையுமாறு செய்தார். இந்தக் கால்வாய்க்கு ரெகுநாத காவேரி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தக் கால்வாய் ஏறத்தாழ 30 கல் தொலைவில் கிழக்கேயுள்ள களரிக் கண்மாயில் முடிவடைகிறது.
இவர் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தார் என்பதற்குச் சான்றாக மதுரைச் சொக்கநாதப் புலவரின் பணவிடுதூது, தேவை உலா ஆகிய இருநூல்கள் இருந்து வருகின்றன.
இவ்விதம் சமுதாயத்திற்கும் தெய்வீகத்திற்கும் தமது அரசுப் பணியை உட்படுத்தி வந்த இந்த மன்னருக்கு எதிரியாகப் பவானி சங்கரத் தேவர் எழுந்தது ஆச்சரியம் இல்லை. ரெகுநாத கிழவன் சேதுபதியின் செம்பிநாட்டு மறவர் குல பெண்மணிக்குப் பிறக்காததால் சேதுபதி பட்டம் மறுக்கப்பட்ட பவானி சங்கரத் தேவர் புதுக்கோட்டை தஞ்சை மன்னர்களது உதவியுடன் இராமநாதபுரம் கோட்டையைப் பிடிப்பதற்கு முற்பட்டார். இவரை சேதுநாட்டின் வடக்கு எல்லையில் சந்தித்துப் பொருதுவதற்காக சென்ற பொழுது முத்து விஜயரகுநாத சேதுபதி வழியில் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் திரும்பியதும் மரணம் அடைந்தார். இது நிகழ்ந்தது கி.பி.1725ல்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முத்து விஜயரகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - இராமநாதபுரம், சேதுபதி, மன்னர், மன்னரது, மண்டபம், தேவர், இராமேஸ்வரம், இந்தக்