சேதுபதி மன்னர் வரலாறு - முத்து விஜயரகுநாத சேதுபதி
II. முத்துவிஜயரகுநாத சேதுபதி
முத்துவயிரவநாத சேதுபதியின் இளைய சகோதரர் திருவுடையாத் தேவர் என்பவர் கி.பி.1713ல் முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் சேதுபதி மன்னரானார். இதனை உறுதிப்படுத்தும் இவரது முதலாவது செப்பேடு கி.பி.1713ல் வழங்கப்பட்டுள்ளது.
திருவுடையாத் தேவர் இராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி திங்களில் நடைபெறும் விஜயதசமி (தசரா விழா) விழா அன்று முடிசூட்டிக் கொண்டதால் இவரது அதிகாரப் பூர்வமான பெயர் முத்து விஜய ரகுநாத சேதுபதி என வழங்கப்பட்டது. ஆனால் முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற அடைமொழி இவருக்கு முன் இருந்த ரெகுநாத கிழவன் சேதுபதிக்கும் ரெகுநாத திருமலை சேதுபதிக்கும் இருந்ததை அவர்களது கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. இந்த மன்னரது ஆட்சி கி.பி.1725 வரை நீடித்த குறுகிய கால ஆட்சியாக இருந்தாலும் இந்தக் காலத்தில் சில அரிய சாதனைகளை இந்த மன்னர் நிகழ்த்தியுள்ளார். முதலாவதாகச் சேது நாட்டின் நிர்வாகத்தைச் சீரமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். திருமலை ரகுநாத சேதுபதி ஆட்சியில் சேதுநாட்டின் எல்லைகள் வடகிழக்கு வடக்கு. தெற்கு ஆகிய மூன்று திக்குகளிலும், விரிவடைந்த பொழுதிலும் அவரது ஆட்சிகாலத்தில் இந்த பெரிய நிலப்பரப்பின் நிர்வாகத்தைச் சீரமைக்க இயலவில்லை. அவரை அடுத்து சேதுபதிப் பட்டம் பெற்ற ரெகுநாத கிழவன் சேதுபதிக்கு உள்நாட்டின் குழப்பங்களைச் செம்மை செய்வதில் காலம் கழிந்ததால் நிர்வாகத் துறையில் புதியன எதையும் புகுத்த முடியவில்லை.
செம்மையான நிர்வாகம் நடைபெற
ஆதலால் இந்த மன்னர் அன்றைய சேதுநாட்டை 72 இராணுவப் பிரிவுகளாகப் பிரித்ததுடன் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு சேர்வைக்காரரை நியமித்து அதில் அடங்கியுள்ள கிராமங்களின் வருவாய் கணக்குகளைப் பராமரிப்பதற்காக மதுரைச் சீமைகளிலிருந்து பட்டோலை பிடித்து எழுதும் வேளாண் குடிமக்களை வரவழைத்து அவர்களை நாட்டுக்கணக்கு என்ற பணியில் அமர்த்தினார். அடுத்ததாக அரசின் வலிமையை நிலைநிறுத்தி வெளிப்புற எதிரிகளிடமிருந்து சேதுநாட்டைக் காப்பதற்காக மூன்று புதிய கோட்டைகளை முறையே ராஜசிங்கமங்கலம், பாம்பன், கமுதி ஆகிய ஊர்களில் புதிதாக அமைத்தார். கமுதிக்கோட்டை புதுமையான முறையில் வட்டவடிவில் மூன்று சுற்று மதில்களுடன் அமைக்கப்பட்டது. இதனை அமைத்தவர்கள் பிரெஞ்சு நாட்டு பொறியியல் வல்லுநர்கள் என இராமநாதபுரம் சமஸ்தான மேனுவல் தெரிவிக்கின்றது. சேதுநாட்டில் ஏற்கனவே திருப்பத்துர், காளையார்கோவில், மானாமதுரை, அனுமந்தக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் சேதுமன்னருக்குச் சொந்தமான கோட்டைகள் இருந்து வந்தன. இவையனைத்தும் தமிழ்நாட்டில் பாரம்பரிய முறைப்படி கோட்டைவாசல், கொத்தளங்கள், அகழி என்ற பகுப்புகளுடன் செவ்வக வடிவில்அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த மரபுகளினின்றும் மாறுபட்டதாக கமுதிக் கோட்டை குண்டாற்றின் வடக்குக் கரையின் பாறைகள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டது. தமிழகத்தில் இதனைப் போன்ற வட்டவடிவமான கோட்டை நாஞ்சில் நாட்டில் அமைக்கப்பட்ட உதயகிரி கோட்டை யாகும். இதனை நாஞ்சில் நாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மனுக்காக கி.பி.1751ல் டினாய்ஸ் என்ற டச்சுத்தளபதி அமைத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கோட்டை இப்பொழுது உதயகிரி கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாவதாக, இந்த மன்னர் சேதுநாட்டின் அத்தாணி மண்டபமான இராமலிங்க விலாசத்தை அழகிய சுவர் ஒவியங்களால் கலைக்கருவூலமாக அலங்கரிக்கச் செய்தார். மூன்று பகுதிகளை உடைய இந்தப் பெரிய மண்டபத்தின் உட்புறம் முழுவதும் ஒரு அங்குலம் கூட இடைவெளி இல்லாமல் முழுமையும், தெய்வீகத் திருவுருவங்களாலும், வரலாற்று காட்சிகளாலும் சேது நாட்டு சமுதாய வாழ்வைப் பிரதிபலிக்கும் ஓவியங்களாகவும் இந்த மண்டபத்தின் சுவர் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. ஏறத்தாழ முன்னுற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும், இந்த சுவர் ஓவியங்கள் புதுமைப் பொலிவுடன் இன்றும் திகழ்ந்து வருகின்றன.
நான்காவதாக, கலைஉள்ளம் கொண்ட இந்த மன்னர் மிகச்சிறந்த சிவபக்தர் ஆகவும் விளங்கி வந்தார் என்பதைச் சில வரலாற்றுச் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இராமேஸ்வரம் திருக்கோயிலில் மூன்றாவது பிரகாரத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டு அடிக்கல் நாட்டியவரும் இந்த மன்னரே ஆகும். இந்தக் கோவிலின் பள்ளியறையில் சுவாமி அம்பாள் பயன்பாட்டிற்காக 18,000 வராகன் எடையில் வெள்ளி ஊஞ்சல் ஒன்றினையும் செய்து அளித்ததுடன் இராமேஸ்வரம் திருக்கோயிலின் ஆடிமாத விழாவின் போது சுவாமியும், அம்மனும் திருவுலா வருவதற்கான திருத்தேர் ஒன்றினையும் புதிதாகச் செய்வித்து அளித்தார். இந்தத் தேர்த் திருவிழாவின் முதலாவது தேர்ஒட்டத்தை இந்த மன்னர் முன்நின்று நடத்தித் தேரின் வடத்தையும் பிடித்துக் கொடுத்தார் எனத் 'தேவை உலா என்ற சிற்றிலக்கியத்தில் காணப்படுகிறது. மேலும் இராமேஸ்வரம் திருக்கோவிலின் உபயோகத்திற்காக மன்னார் வளைகுடாவில் முத்துச்சிலாபக் காலங்களில் இரண்டு தோணிகள் வைத்து முத்துக்குளிக்கும் உரிமையையும் ஒரு செப்பேட்டின் மூலம் இராமேஸ்வரம் கோவிலுக்குத் தானம் வழங்கியுள்ளார்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முத்து விஜயரகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி, மன்னர், கோட்டை, மூன்று, இராமேஸ்வரம், நாட்டு, சுவர், ஆகிய, ரகுநாத, ரெகுநாத, இந்தக், முத்து, இதனை