சேதுபதி மன்னர் வரலாறு - சேது மன்னர்களது நிர்வாகம்
சேதுபதி சீமையில் விளைந்த நெல் ரகங்கள்
1. சம்பா
2. சரபுலி சம்பா
3. ஈர்க்கி சம்பா
4. கெருடம் சம்பா
5. சிறுமணியன்
6. வரகுசம்பா
7. வெள்ளகோடி
8. தில்லைநாயகம்
9. வெள்ளை மிலகி
10. பாலுக்கினியம்
11. கவுனிசம்பா
12. கொம்பன் சம்பா
13. சிரகி சம்பா
14. மாப்பிள்ளை சம்பா
15. கல்மணவாரி
16. மானாவாரி
17. வெள்ளை மானாவாரி
நாட்டு நெல்
18. பணமுகாரி
19. முருங்கன்
20. நரியன்
21. வெள்ளைக் குருவை - வருடம் முழுவதும்
22. கருப்புக் குருவை - “
23. மொட்டைக் குருவை – “
24. செங்கனிக் குருவை - “
சேதுநாட்டுக் கைத்தறித் துணியும், தானியங்களும், எதிர்க் கரையிலுள்ள இலங்கைக்கும், வடக்கே புதுவை மாநிலத்திற்கும் பிரெஞ்சு, டச்சு வணிகர்களால் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் சேதுநாட்டின் முத்துக்கள், சங்குகள் தேவிபட்டினம் துறைமுகம் வழியாக வங்காளத்திற்கும் மற்ற வட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. கேரளத்து மிளகும், தேங்காயும் சேரநாட்டில் பயன்படுத்தப்பட்டதுடன், கீழக்கரை வணிக வேந்தர் சீதக்காதி மரைக்காயரது கப்பல்கள் தொலைதுரத்திலுள்ள கம்போடியா, சுமத்திரா, மலேயா நாடுகளிலிருந்து, சந்தனம், செம்பு, அந்த நாட்டுத் துணிகள், கருவாய்ப்பட்டை, ஏலம், கிராம்பு ஆகிய பொருட்களைச் சேதுநாட்டு கீழக்கரைத் துறைமுகத்திற்குச் சுமந்து வந்து சேர்த்தனர். வள்ளல் சீதக்காதி மரைக்காயர் 1796-ல் சென்னைக் கோட்டை கவர்னருக்கு வரைந்த மடல் ஒன்றிலிருந்து மேலே சொன்ன பொருட்களைச் சந்தைப் படுத்துவதற்காக பார்வதிசேகர நல்லூர் என்ற பார்த்திபனூரில் பெரும் சந்தை ஒன்று கூடியது என்பது புலனாகின்றது.
இவ்விதம், சிறப்பான வேளாண்மையினாலும் வளமான கடல் வணிகத்தினாலும், சேது மன்னர்களது கருவூலம் நிரம்பியது. இதன் காரணமாக சேது மன்னர்கள் இராமேஸ்வரம் போன்ற ஊர்களில் கோவில் கட்டுமானப் பணிகளைச் சிறப்பாக இயற்றுவதற்கும், சேது மார்க்கத்திலும் பிற பகுதிகளிலும், அன்ன சத்திரங்களையும் திருமடங்களையும் அமைத்துப் பராமரிப்பதற்கும் எளிதாக இருந்தது என்றால் மிகையாகாது. சேது மன்னர்களது நிர்வாகத்தில் கி.பி. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆற்காட்டு நவாப்பின் தொடர்பு ஏற்பட்டதால் அமில்தார். மிட்டாதார். சம்பிரிதி என்ற வட்டார வட்ட அலுவலர்களும் நியமனம் பெற்றனர். அலுவலகங்களில் சிரஸ்த்ததார், பேஸ்க்கார், பொக்கிஷதார் என்ற அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். பாரசீக மொழியில் சேது மன்னருக்கும், நவாப்பிற்கும். ஆங்கிலேயருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்துக்கள் கையாளப்பட்டன என்பதை கி.பி. 1795ஆம் ஆண்டு ஆவணம் ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், நிர்வாகத்தில் கிஸ்தி. பேஷ்குஷ், வஜா, ஜமாபந்தி, வாயிதா தாலூகா, கஸ்பா, மிக்டா, பசலி, கோஸ்பாரா போன்ற பாரசீகச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது தலையீடு ஏற்படும் வரையில் சேது மன்னர்களது நிர்வாகம் சிறப்பாக நடைபெற்றது புலனாகின்றது. ஆங்கிலேயரது நிர்வாகத்தில் குடிமக்களுடனான தொடர்புகள் சேது மன்னர் காலங்களைப் போன்று நெருக்கமாக இல்லாவிட்டாலும், அவர்களது கடிதங்களிலும், பதிவேடுகளிலும், பாரசீகமொழிச் சொற்கள் தொடர்ந்து வந்துள்ளன.
- ↑ 1. Raja Ram Rao.T - Manual of Ramnad Samasthanam (1891) Page 48.
‹‹ முன்புறம் | 1 | 2 |
சேது மன்னர்களது நிர்வாகம் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேது, சம்பா, நெல், குருவை, மன்னர்களது, நிர்வாகத்தில், சிறப்பாக, என்பதை