சேதுபதி மன்னர் வரலாறு - சேது மன்னர்களது நிர்வாகம்
தெளிவான வரலாற்றுச் சான்றுகளுடன் சேது மன்னர்களது ஆட்சியின் மாட்சி பற்றி கி.பி. 1600 முதல் கி.பி. 1795 வரையான காலகட்டத்திற்குரிய செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. இவை களிலிருந்து சேது மன்னர்களது நாட்டின் பரப்பு வடக்கே திருவாரூர் சீமையிலிருந்து தெற்கே திருநெல்வேலி சீமையின் வடபகுதி வரை அமைந்திருந்தது என்பதை அறிய முடிகிறது. கி.பி. 1645 - 1678 வரை அரசோச்சிய மிகச் சிறப்பான மன்னராக திருமலை ரெகுநாத சேதுபதி காணப்படுகிறார். ஆனால் அவரது நிர்வாக முறை பற்றிய செய்திகள் கிடைத்தில. கி.பி. 1713-க்கும் கி.பி. 1725க்கும் இடைப்பட்ட காலவழியில் சேதுபதி பீடத்திலிருந்த முத்து விஜய ரகுநாத சேதுபதி நிர்வாகத் துறையில் ஆற்றிய பணிகளை இராமநாதபுரம் சமஸ்தான வரலாறு தெரிவிக்கின்றது. நிர்வாக நலனுக்கு ஏற்றவாறு சேது நாட்டை இந்த மன்னர் 72 இராணுவப் பிரிவுகளாக அமைத்தார் என்பதும், குடிமக்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதற்காகவும், வசூல் கணக்குகளைப் பராமரிக்கவும், மதுரைச் சீமையிலிருந்து வேளாளப் பெருமக்களை வரவழைத்துச் சேதுநாட்டில் கணக்கர்களாக நியமித்தார் என்பதும் தெரிய வருகிறது[1]. அவர்கள் நாட்டுக் கணக்கு என்று அழைக்கப்பட்டனர். ஆனால், நிர்வாகத்தைச் செம்மைப்படுத்திய மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி என்பதுதான் உறுதியான செய்தியாக உள்ளது.
அறிவும், திறனுமிக்க இந்த மன்னரது அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை (பிரதானி) ஊர்தோறும் சென்று குடிமக்களது நிலங்களின் தன்மை, நீராதாரம் ஆகியவைகளைக் கணக்கில் கொண்டு குடிகள் அவர்களது நிலத்திற்குச் செலுத்த வேண்டிய தீர்வையை நிர்ணயம் செய்தார். இதற்காக இவர் சேது நாட்டின் நிலத்தை நஞ்சை புஞ்சை, மானாவாரி, பொட்டல் என்று தரவாரியாகப் பிரிவு செய்தார். மற்றும், அப்பொழுது வழக்கில் இருந்த பண்டமாற்று முறைப்படி குடிகள் தங்களது தீர்வையை விளைப்பொருளாகச் செலுத்துவதற்குப் பதிலாக அவைகளை சேதுநாட்டு நாணயமாகச் செலுத்தலாம் என்ற முறையையும் ஏற்படுத்தினார். அப்பொழுது சேதுநாட்டில் மின்னல் பணம், சுழிப்பணம், காசு என்ற நாணயங்கள் வழக்கில் இருந்தன என்பதும் அவைகளைப் பொறிக்கக்கூடிய நாணயச் சாலைகள் இராமநாதபுரத்திலும், இராமேஸ் வரத்திலும் இருந்தன என்று தெரிகிறது.
இந்த நிலங்களைக் குடிகள் அவர்களே உழுது, வித்திட்டுக்களை பறித்து, வேளாண்மை செய்து வந்தனர். அரசரின் அலுவலர்கள் அறுவடையின் போது களத்துமேட்டில் இருந்து அறுவடையான கதிரடிப்பைக் கண்காணித்து, மொத்தத்தில் கிடைக்கும் தானியத்தின் மதிப்பை அளவிட்டனர். இவருக்கு உதவியாக அளவன், பொலிதள்ளி என்ற உதவியாளர்கள் பணிபுரிந்தனர். மொத்த விளைச்சலில் குடிமக்களது செலவுகளையும், களத்துமேட்டில் அளந்து கொடுக்கப்படும் களத்துப் பிச்சை என்ற அன்பளிப்புத் தானிய அளவினையும் நீக்கிவிட்டு, எஞ்சியுள்ள மணிகளை அளவன் மூலம் அளந்து சமமாகப் பங்கிட்டு, ஒரு பகுதி மன்னருக்கும், மற்றொரு பகுதி சம்பந்தப்பட்ட குடிமகனுக்கும் வழங்கப்பட்டது. மன்னரது பங்காகப் பெறப்பட்ட தானியத்தை கிராமங்களுக்கிடையில் ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்த 'சேகரம் பட்டறை என்ற கிடங்குகளில் சேகரித்து வைத்தனர்.
மற்றும், இந்த விளைச்சலுக்கான தீர்வையாகப் பெற்ற தானியங்களைத் தவிர கிராமக் குடிமக்களிடம் இருந்து கத்திப்பெட்டி வரி, சீதாரி வரி, நன்மாட்டு வரி, சாணார் வரி, வரைஒலை வரி, தறிக்கடமை என்ற வரி இனங்களும் குடிமக்களது தொழிலுக்கு ஏற்ற வகையில் வசூலிக்கப்பட்டு வந்தன. இவை தவிர ஆங்காங்கே சில்லறையாக விற்பனை செய்யப்படும் தானியங்களுக்கு கைஎடுப்பு, அள்ளுத்தீர்வை (ஒரு கையால் அள்ளுதல், இரண்டு கைகளாலும் அள்ளுதல்) என்ற வரிப்பாடுகளும் இருந்து வந்தது தெரிகிறது.
பெரும்பாலும், மழைப்பெருக்கினால் கிடைக்கும் நீரினைத் தேக்கங்களில் சேமித்து வைத்து அவைகளை முறையாக மடை அல்லது கலுங்கு வழியாகவும், வாய்க்கால்கள் மூலமாகவும் விளைநிலங்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்பட்டு வந்தது. முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில், (கி.பி. 1792-ல்) வைகை நதியிலிருந்து வரத்துக்கால்கள் மூலமாக அபிராமம் கண்மாய்க்கு வரப்பெறுகின்ற வெள்ளத்தைச் சிவகங்கைப் பிரதானிகள். தடை செய்தனர் என்ற செய்தியினை அறிந்த சேது மன்னர் தமது வீரர்களுடன் விரைந்து சென்று அபிராமம் கண்மாய்க்கு வருகின்ற கால்களின் அடைப்புக்களை அகற்றி நீர்ப்பாய்ச்சலுக்கு உதவினார் என்ற செய்தி வரலாற்றில் பதிவு பெற்றுள்ளது. இதில் இருந்து சேது மன்னர்கள் தமது நாட்டுக் குடிமக்களது விவசாயத் தொழிலில் நேரடியாக எவ்விதம் கவனம் செலுத்தினர் என்பதை அறிய முடிகிறது!
இந்த மன்னரது முன்னவர்கள் குடிகளது வேளாண்மைத் தொழிலுக்கு உதவுவதற்காகப் பல புதிய கண்மாய்களையும். நீர்வரத்துக்கால்களையும் அமைத்து உதவிய செய்திகள் பல உள்ளன. கூத்தன் சேதுபதி காலத்தில் வைகையாற்றின் நீரினை வறட்சி மிக்க பரமக்குடி, முதுகளத்தூர் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட வாய்க்கால் ஒன்று இன்றும் கூத்தன்கால் என்ற பெயருடன், பயன்பட்டு வருகின்றது. குண்டாற்று நீரினைக் கமுதிக்கு அருகிலிருந்து திசை திருப்பி முதுகளத்தூர் பகுதியின் கன்னி நிலங்களைக் கழனிகளாக மாற்றுவதற்கு முத்து விஜயரகுநாத சேதுபதி மன்னர் உதவியதையும், சுமார் 30 கல் நீளமான அந்தக் கால்வாய் இன்றும், ரெகுநாத காவேரி என்ற பெயரில் பயன்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கவை.
இவ்விதம், 'குடி உயர கோல் உயரும்' என்ற முதுமொழிக்கு ஒப்ப குடிகளும் சேது மன்னரும் வளமையான காலத்தில் வாழ்ந்து வந்ததால் உள்நாட்டு வணிகம் தழைத்தது.
- ↑ 1 Raja Ram Rao.T-Manual of Ramnad Samasthanam (1891) pg 236.
1 | 2 | தொடர்ச்சி ›› |
சேது மன்னர்களது நிர்வாகம் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேது, சேதுபதி, இருந்து, குடிமக்களது, மன்னர், மன்னர்களது, குடிகள், மன்னரது, விஜயரகுநாத, என்பதும், செய்திகள், முத்து