சேதுபதி மன்னர் வரலாறு - முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
இதற்கிடையில் கி.பி. 1792-ல் சேதுநாடு எங்கும் கடும் வறட்சி ஏற்பட்டது. இச்சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு கும்பெனியார் சேதுநாட்டில் தானியங்களை விற்பனை செய்வதற்கு முன் வந்தனர். விற்பனையாகும் தானியங்களுக்குச் சுங்க விலக்கு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர். இந்தக் கோரிக்கையையும் சேது மன்னர் புறக்கணித்து விட்டார். இச்சூழலில் கும்பெனியாரைச் சார்ந்து நடந்து கொள்ளுமாறு பிரதானி முத்திருளப்ப பிள்ளை, அடிக்கடி மன்னரை வற்புறுத்தி வந்தார். இதற்கு உடன்படா மன்னர் பிரதானியைப் பதவி நீக்கம் செய்தார். அடுத்து இராமநாதபுரம் சீமையில் உற்பத்தியாகும் கைத்தறித் துணிகள் அனைத்தையும் ஏகபோகமாக கும்பெனியாரே வாங்குதற்கும், கொள்முதல் செய்வதற்கும் மன்னரது அனுமதியைக் கோரினர். அப்போது செயல்பட்ட 650 தறிகளில் 150 தறிகளுக்கு மேலாக மன்னரது நேரடிப்பொறுப்பில் இயங்கி வந்ததாலும், இதனால் சேதுநாட்டிற்கு வரு மான இழப்பு ஏற்படும் நிலை இருந்ததாலும் மன்னர் இந்தக் கோரிக் கையையும் மறுத்தளித்து விட்டார். கடைசியாக கும்பெனியார் மதுரை நெல்லைச் சீமைகளில் கொள்முதல் செய்த கைத்தறித் துணிச் சிப்பங்களை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பலில் பாம்பன் கால் வாய் வழியாகச் சென்னைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பாம்பன் துறைமுகத்தில் கும்பெனியார் அவர்களது கப்பல்களுக்கு முன்னுரிமையும் சுங்கச் சலுகையும் பெற முயன்றனர். இந்த முயற்சியையும், மன்னர் நிராகரித்து, வரிசை முறையை அமுல்படுத்தியதால் முன்னுரிமை வழங்க மறுத்தார்.
இவ்விதம் அப்பொழுது தமிழகத்தின் அரசியலில் வாய்ப்பும் வலிமையும் பெற்று வந்த கும்பெனியாரை அவமதிப்புக்குள்ளாக்கிய இந்த மன்னரைத் தீர்த்துக் கட்டுவது என கி.பி. 1794-ல் கும்பெனித் தலைமை முடிவு செய்தது. ஆனால் இந்த ஆண்டிலும் வறட்சி தொடர்ந்ததால் அவர்களது திட்டத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குத் தள்ளி வைத்தனர். கி.பி. 1795-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் நாள் வைகறையில் பாளையங்கோட்டை, கயத்தாறு ஆகிய ஊர்களிலிருந்து வந்த கும்பெனியாரின் பெரும்படை இராமநாதபுரம் கோட்டைக்குள் புகுந்தது. கோட்டையின் பொறுப்பு தளபதி மார்ட்டின்சிடம் இருந்ததால், இந்தப் படை எவ்வித இடையூறும் இல்லாமல் அரண்மனையைச் சுற்றி வளைத்து இரண்டாவது முறையாக மன்னரைக் கைது செய்தது. சிறிதும் எதிர்பாராது நடந்த இந்த நிகழ்ச்சியினால் பெரிதும் ஏமாற்றமடைந்த மன்னர் வெள்ளையரது கட்டளைக்குப் பணிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அடுத்தநாள் பாதுகாப்புடன் மீண்டும் திருச்சிக் கோட்டைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிறை வைக்கப்பட்டார். இராமநாதபுரம் கோட்டைப் பொறுப்பிலிருந்த மார்ட்டின்சும் கலெக்டர் பவுனியும் இராமநாதபுரம் அரண்மனையைக் கொள்ளையிட்டனர்.
ஆங்கிலேய ஆட்சி
கும்பெனியாருக்கும் முத்துராமலிங்க சேதுபதிக்கும் இடையில் பகையுணர்வு வளர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் அவரது தமக்கையான மங்களேஸ்வரி நாச்சியார் கும்பெனியாரிடம் சேதுநாட்டு வாரிசு தான் எனக் கூறி தனக்கு சேது நாட்டின் ஆட்சியுரிமையை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை வலியுறுத்துவதற்காகத் தனது கணவர் இராமசாமித் தேவருடன் சென்னை சென்று ஆற்காடு நவாபு, கும்பெனி கவர்னர் மற்றும் அவரது அலுவலர்கள் அனைவரையும் சந்தித்து தனது வேண்டுகோளை வலியுறுத்தியும் அதற்காகப் பெருந்தொகையைக் கையூட்டாக வழங்கி அரச பதவியைப் பெறப் பெரிதும் முயன்றார். கும்பெனித் தலைமை மங்களேஸ்வரி நாச்சியாரை சேதுபதியின் அடுத்த வாரிசாக ஏற்றுக் கொண்டபோதிலும் அவருக்கு அதிகார மாற்றம் செய்யாமல் சேதுநாட்டின் நிர்வாகத்தைக்கும்பெனியாரே எட்டு ஆண்டுகள் நடத்தி வந்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், இராமநாதபுரம், கும்பெனியார்