சேதுபதி மன்னர் வரலாறு - முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
இவரது நிர்வாகத்தின்போது இராமநாதபுரம் சீமையின் பெரும் பகுதிக்கும் பிரதானி ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று அங்குள்ள மண்வளம். நீர் வளம் ஆகியவைகளை ஆய்வு செய்து, அந்த நிலங்களுக்குரிய தீர்வையைப் பணமாக பெறும் முறையை ஏற்படுத்தினார் மற்றும் பராமரிப்பில்லாமல் பழுதுபட்டுப் போயுள்ள ஆலயங்களையும், மடங்களையும் செப்பனிடுவதற்காக அரசாங்கத்திற்குச் செலுத்தப்படுகின்ற தீர்வையில் ஒரு சிறு பகுதியை ஜாரி மகமை என்ற பெயரில் ஒரு பொதுநிதியம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இராமேஸ்வரம் திருக் கோயிலின் 3வது பிரகார முற்றுப்பெறும் தருவாயில் மிகச் சிறப்பாக அந்தத் திருப்பணியில் ஈடுபட்டதற்காக, அவரது திருஉருவத்தை கீழக்கோபுர வாசலில் நிறுவியுள்ளதை இன்னும் நாம் காணலாம். இதேபோல் இராமநாதபுரத்திற்கு அடுத்து சேதுமன்னர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருமருதூர் (எ) நயினார் கோவில் ஆலயத்தையும் திருப்பணி செய்வதற்குச் சேதுமன்னர் இவரை நியமித்திருந்தார். அவரும் நாற்பது நாள்கள் நீடித்த அந்தத் திருப்பணியைச் சிறப்பாக முற்றுப்பெறச் செய்ததை அங்குள்ள கல்வெட்டு இன்னும் சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கிறது[2].
இந்தப் பிரதானியாரது நிர்வாகத்தில் உருப்பெற்றதுதான் இன்று மதுரை மாவட்டத்தைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் பெரியார் அனைத்திட்டம் ஆகும். சேது நாட்டில் 12 மாதங்களில் பெரும்பாலான பகுதி வறட்சி மிக்கதாக இருப்பதால் இந்தச் சீமையைத் தஞ்சைச் சீமைபோல் நீர்வளம் மிக்கதாகச் செய்யவேண்டும் என்று திட்டமிட்ட சேது மன்னருக்குப் பிரதானி இந்தத் திட்டத்தை வரைந்து கொடுத்தார். இதன்படி மதுரை மாவட்டத்தின் வருச நாட்டின் மலைப்பகுதியில் தோற்றம் பெறும் வைகை ஆறு சில பாறைகளின் இடர்ப்பாடுகளின் காரணமாக வைகையின் வெள்ளம் முழுவதும் கிழக்கு நோக்கி மதுரை வழியாக இராமநாதபுரம் சீமைக்கு வந்தடைவதற்குப் பதிலாக, மேற்கே திசைமாறிச் சென்று அரபிக் கடலில் வீணாகக் கலந்து வந்தது. அதைத் தடுத்து நிறுத்தி வைகை வெள்ளத்தை முழுமையாகச் சேதுநாட்டில் பயன்படுத்திக் கொள்வதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படையாகும். ஆனால் காலச் சூழலில் சேதுபதி மன்னரும் சேது நாட்டு அரசராக நீடிக்கவில்லை. கி.பி. 1792-ல் முத்திருளப்ப பிள்ளையும் அவரின் பிரதானியாகப் பணியாற்ற முடியாத துரதிருஷ்ட நிலை. காலம் மாறியது. அதனையடுத்த 100 ஆண்டுகள் கழித்து அந்தப் பெரியார் அணைத்திட்டம் ஆங்கில ஆட்சியில் உருப்பெற்றது.
இந்த மன்னரது ஆட்சி விறுவிறுப்புடன் நடைபெறத் துவங்கியது. இராமநாதபுரத்தை அடுத்துள்ள திருப்புல்லாணியில் ஒரு சிறிய கோட்டை அமைத்து கிழக்குக் கடற்கரையோரப் பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். அப்பொழுது சேது நாட்டில் வணிகத்துறையில் ஈடுபட்டிருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் நல்ல தொடர்பு களைக் கொண்டிருந்ததால் அவர்கள் மூலம் இராமநாதபுரத்திற்கு கிழக்கே பீரங்கி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். இவ்விதம் ஆற்காடு நவாபுடனும் அவரது உதவியாட்களாகிய ஆங்கிலக் கும்பெனியாரையும் அடியோடு சேது மண்ணிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்தார். தளபதி மார்ட்டின்ஸ் ஆற்காட்டு நவாபிற்கும் கும்பெனி கவர்னருக்கும் இரகசிய அறிக்கைகளை அனுப்பி வந்தார்.
இதற்கிடையில் அப்பொழுது சிவகங்கைச் சீமையின் நிர்வாகத்தை இராணி வேலுநாச்சியாருக்குப் பிரதிநிதியாக நேரடியாகக் கவனித்து வந்த மருது சகோதரர்கள் சிவகங்கைக்கும் இராமநாதபுரம் சீமைக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்த எல்லைப் பிரச்சினைகளைப் பெரிதாக்கி இராமநாதபுரம் சீமைக் குடிமக்களுக்குப் பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி வந்தனர். மேலும் அப்பொழுது சிவகங்கைச் சீமைக்குச் சொந்தமாயிருந்த தொண்டித் துறைமுகத்தின் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இராமநாதபுரம் சீமைக்குச் சொந்தமான திருவாடானைச் சுங்கச் சாவடி வழியாகச் சிவகங்கைச் சீமைக்குக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இராமநாதபுரம் மன்னருக்கு இந்த வகையில் செலுத்தப்பட வேண்டிய ரூ. 15,000/-ஐயும் மருது சேர்வைக்காரர்கள் செலுத்தாமல் அலைக்கழிவு செய்து வந்தனர். இதனால் கோபமுற்ற சேது மன்னர் திருநெல்வேலியிலிருந்து இராமநாதபுரம் சீமை, அருப்புக்கோட்டை, திருச்சுழி வழியாக பார்த்திபனூர் சுங்கச் சாவடியைக் கடந்து சிவகங்கை செல்லும் வரத்து வண்டிகள் அந்தச் சுங்கச் சாவடிக்கு வரி செலுத்தாமல் கிழக்கே, இராமநாதபுரம் வந்து வடக்கே சோழச் சீமைக்குச் செல்லுமாறு ஏற்பாடு செய்தார். இதனால் சிவகங்கைச் சீமைக்கு ஏற்பட்ட வருமான இழப்பை உணர்ந்த சிவகங்கைப் பிரதானிகள் வைகையாற்றிலிருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக தெற்கே அபிராமம் முதலிய கண்மாய்களுக்குச் செல்லும் நீர்வரத்தைத் தடை செய்தனர். இதனால் கோபமுற்ற சேதுபதி மன்னர் அபிராமம் சென்று அந்தக் கண்மாய்க்கு வரும் கால்களின் தடைகளை நீக்கி, நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். இதனை அடுத்து இரு சீமைகளுக்கும் இடையில் பகையுணர்வும் விரோதப்போக்கும் நீடித்து வந்தன. முடிவில் ஆனந்துரை அடுத்த பகுதியில் இரு சீமைப்படைகளும் நேருக்கு நேர் மோதின[3]. இதனையறிந்த கும்பெனிக் கலெக்டரும் நவாபும் இருதரப்பினருக்கும் அறிவுரைகள் வழங்கிப் போர் நடவடிக்கையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். நியாய உணர்வினால் உந்தப்பட்ட சேதுபதி மன்னர் போர் நிறுத்தத் திற்கு உடன்படாமல் போரை நீடித்து வந்தார்.
இருவருக்கும் சமரசம் செய்வதற்காக கலெக்டர் பவுனி இருதரப்பினரையும் தொண்டிக்கு அருகில் உள்ள முத்துராமலிங்க பட்டினத்துச் சத்திரத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். சிவகங்கைப் பிரதானிகள் ஏற்றுக் கொண்டனர். சேதுபதி மன்னர் சம்மனைப் புறக்கணித்து விசாரணைக்குச் செல்லவில்லை. இதனால் கும்பெனி யாருக்கு மன்னர் மீது கோபம் ஏற்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - இராமநாதபுரம், சேது, மன்னர், சிவகங்கைச், சேதுபதி, வழியாக, இதனால், சுங்கச், சீமைக்குச், அப்பொழுது, சென்று, மதுரை, செய்தார்