சேதுபதி மன்னர் வரலாறு - முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
நவாபின் ஆட்சி
சேது நாட்டில் ஆற்காடு நவாபின் நிர்வாகம் 8 ஆண்டுகள் தொடர்ந்தன. இந்தக் கால கட்டத்தில் ஏற்கனவே தஞ்சை மன்னரது உதவியும் இராமநாதபுரம் சீமையைத் தாக்கிய ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைச்சாமித் தேவர் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவி பெற்றுச் சேதுபதிச் சீமையில் ஆற்காடு நவாபு நிர்வாகத்தை எதிர்த்துப் போரிட்டார். நவாபின் ஆட்சியில் புகுத்தப்பட்ட அரசாங்க ஆண்டு முறை ஹிஜிரி கணக்கு சேதுநாட்டுப் பணத்திற்குப் பதில் ஆற்காடு வெள்ளி ரூபாய் போன்ற புதிய மாற்றங்களினால் அதிருப்தியுற்ற மக்கள், மாப்பிள்ளைச்சாமித் தேவருடன் இணைந்து எதிர்ப்பு அணியைப் பலப்படுத்தி வந்தனர். இதே காலக்கட்டத்தில் சிவகங்கைச் சீமையையும் ஆக்கிரமித்து அங்கிருந்த மன்னர் முத்துவடுகநாத தேவரை 25.05.1772-ல் காளையார் கோவில் போரில் கொன்று, சீமையின் நிர்வாகத்தை, ஆற்காடு நவாபு ஏற்றிருந்ததால் அங்கும் அதிருப்தி நிலவியது. அடுத்து கி.பி. 1780 ஜூன் மாதம் மைசூர் மன்னர் ஹைதர் அலி வழங்கிய குதிரைப்படைகளின் உதவி கொண்டு மன்னரது விதவை மனைவி இராணி வேலுநாச்சியார் மீண்டும் சிவகங்கையில் மறவராட்சியை ஏற்படுத்தினார்.
இந்தச் சூழ்நிலையில் இராமநாதபுரம் சீமையும் தன்னுடைய கையைவிட்டு நீங்காமலிருப்பதற்காக ஆற்காடு நவாபு ஒரு திட்டத்தினை உருவாக்கி சேதுபதி மன்னரது ஒப்புதலையும் பெற்றார். இதன்படி சேதுபதி மன்னர் ஆற்காடு நவாபின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு ஆண்டுதோறும் அன்பளிப்புத் தொகையாக (பேஷ்குஷ்) ஒரு இலட்சம் ரூபாய் வரை நவாபிற்கு செலுத்தவும் சம்மதித்தார். காலமெல்லாம் திருச்சிக் கோட்டையில் சிறைக்கைதியாக இருந்து சாவதை விட நவாபினது இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் சிறை வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் சேதுபதி மன்னரான பிறகு நவாபையும், பரங்கியரையும் உறுதியாகவும் இறுதியாகவும் அழித்து ஒழித்து விடலாம் என அந்த இளம் மன்னர் திட்டமிட்டிருந்தார்.
மீண்டும் சேதுபதி மன்னர் ஆட்சி:
பின்னர் சேதுபதி மன்னர் பல விறுவிறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சேது நாட்டில் வறட்சி ஏற்படும்போது தஞ்சைச் சீமையிலிருந்து தானியங்களைக் கொள்முதல் செய்து வந்து மக்களுக்கு வழங்குவதற்கும், சேதுநாட்டில் நல்ல அறுவடை ஏற்படும் போது உபரி தானியத்தைப் பக்கத்திலுள்ள இலங்கை நாட்டிற்கும் கேரளத்திற்கும் அனுப்புவதற்கும். ஏற்ற வகையில் கிழக்குக் கடற்கரையில் கிட்டங்கிகளை அமைத்தார். மேலும் கருப்பட்டி, தேங்காய், எண்ணெய் போன்ற அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாப் பண்டங்களைக் கொள் முதல் செய்வதற்கு வியாபாரத் துறை என்ற ஒரு தனி அமைப்பையே உருவாக்கினார். மற்றும் சேதுநாட்டுக் கடலில் கிடைக்கும் சங்குகளைப் படகிலேற்றி வங்காளத்திற்கு எடுத்துச் சென்று அங்கு விற்பனை செய்ய கல்கத்தாவில் ஒரு சேமிப்புக் கிடங்கையும் ஏற்படுத்தினார். அப்பொழுது சேதுநாட்டின் பல பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வளர்ந்து வந்த நெசவுத் தொழிலில் சுமார் 650 கைத்தறிகள் சேதுநாட்டின் கிழக்கு, வடக்கு மேற்குப் பகுதிகளில் இயங்கி வந்தன. இவைகளில் பரமக்குடியில் மட்டும் சேது மன்னரது குத்தகைக்கு உட்பட்ட சுமார் 100 கைத்தறிகள் சேதுநாட்டுக்கு வெளியே விரும்பி, வாங்கப்பட்ட (Sea Breeze) போன்ற வகைக் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்து வந்தன. இவைகளைப் பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும் போட்டியிட்டு வாங்கி காரைக்கால், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை போன்ற இடங்களுக்கு அனுப்பி வந்தனர். இதனால் சேதுநாட்டில் சேதுபதி நாணயங்களுடன் டச்சுக் காரர்களது நாணயமான போர்டோநோவா, பக்கோடா, பணம் பெரு மளவில் சேதுநாட்டின் செலாவணியிலிருந்து நாட்டின் வளமைக்கு வலு வூட்டியது. இந்த நாணயங்களுக்கு ஈடாகச் சேதுநாட்டு நாணயங் களை மாற்றிக் கொள்வதற்குச் சேது மன்னர் ஒரு நாணய மாற்றுச் சாலையையும் ஏற்படுத்தினார். இந்தக் கால கட்டத்தில் இந்த மன்னரிடம், பேஷ்குஷ் தொகையை மாதந்தோறும் பெற்றுக் கொள்ள ஆற்காடு நவாபு கர்னல் மார்ட்டின்ஸ் என்ற பரங்கியை இராமநாதபுரம் கோட்டையில் அவரது தனி அலுவலராக நியமித்திருந்தார். மன்னர் இளம் வயதினராக இருந்ததால் நிர்வாக அனுபவங்களைப் பெறுவதற்குத் தளபதி மார்ட்டின்ஸை நாடினார். அப்பொழுது ஆங்கிலக் கல்விப் புலமை பெற்றிருந்த முத்திருளப்ப பிள்ளை என்பவரை மன்னரது பிரதானியாக பணியாற்ற மார்டின்ஸ் பரிந் துரைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் மிக எளிய குடும்பத்தில் வறுமையில் வாடிய முத்திருளப்ப பிள்ளையின் தாயார் நெல்லை மாவட்டத்தை அடுத்திருந்த சேதுபதிச் சீமையில் உச்சி நத்தம் கிராமத்தில் உள்ள ரெட்டியார் வீட்டுப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். அந்த ரெட்டியார் முயற்சியில் இளைஞர் முத்திருளப்ப பிள்ளை ஆங்கில மொழியில் மிகுந்த புலமை பெற்றதுடன் பின்னர் சேது நாட்டுப் பிரதானியாக நியமிக்கப்பட்டார். மிகச் சிறந்த ராஜ தந்திரியாக விளங்கினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், ஆற்காடு, சேதுபதி, மன்னரது, சேது, நவாபு, நவாபின், முத்திருளப்ப, சேதுநாட்டின், ஏற்படுத்தினார், மீண்டும், இராமநாதபுரம்