சேதுபதி மன்னர் வரலாறு - முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
இந்த மன்னர் பாலகனாய் இருக்கும்போது கி.பி. 1762-ல் பட்டம் சூட்டப்பட்டதால் இவரது அரசப் பிரதிநிதியாக இவரது தாயார் முத்துத் திருவாயி நாச்சியார் பொறுப்புகளை ஏற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இவருக்குப் பிச்சை பிள்ளை. தாமோதரன் பிள்ளை என்ற இரு பிரதானிகள் உதவியாகச் செயல்பட்டு வந்தனர்.
இந்தக் கால கட்டத்தில் தென்னகத்தில் ஆற்காடு நவாபின் ஆதிக்கம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆயுத வலிமை கொண்டு சென்னையில் நிறுவப்பட்டிருந்தது. ஆற்காடு நவாபிற்குக் கட்டுப்படாமல் அவருடைய ஆதிக்கத்தை எதிர்த்த மதுரை, நெல்லைசீமைப் பாளையக்காரர்களை கி.பி. 1751 முதல் மேற்கொண்ட பல போர்களின் மூலம் அவர்களை எல்லாம் அடக்கி ஒடுக்கிக் கப்பத் தொகையை நவாப் பெற்று வந்தார். அப்பொழுது தமிழகத்தில் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்ற நான்கு தன்னரசுகள் மட்டும் இருந்தன. ஏற்கனவே தஞ்சையை நவாபும், ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியாரும் பங்கிட்டுக் கொண்டு பெயரளவில் தஞ்சை மன்னரைத் தஞ்சைச் சீமை அரசராக அங்கீகரித்திருந்தனர். எஞ்சிய மூன்று தன்னரசுகளில் கள்ளர் சீமை மன்னரான புதுக்கோட்டை மன்னரை விட்டுவிட்டு, மறவர் சீமையின் மன்னர்களான இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளின் மீது படையெடுப்பதற்கு ஆற்காடு நவாபு திட்டமிட்டு வந்தார்.
இதற்கிடையில் தஞ்சை மன்னராக இருந்த துல்ஜாஜி கி.பி. 1771-ல் மறவர் சீமை மீது படையெடுத்தார். இராமநாதபுரம் சீமையின் வடக்குப் பகுதிகளை வேகமாகக் கடந்து வந்து அனுமந்தக்குடி கோட்டையைத், தஞ்சைப் படைகள் கைப்பற்றி விட்டன. இதையறிந்த ராணி முத்துத் திருவாயி நாச்சியாரும் பிரதானி பிச்சைப் பிள்ளையும் ஆக்கிரமிப்பாளர்களைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். இராமநாதபுரம் சீமைக்கு உரிமை கோரிய ஆறுமுகம் கோட்டை, மாப்பிள்ளைத் தேவர் தஞ்சைப்படைகளை முன் நடத்தி வர இராமநாதபுரம் கோட்டையை முற்றுகையிட்டனர். மன்னர் துல்ஜாஜியும் இந்தப் போரில் நேரிடையாகக் கலந்து கொண்டார். இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வி ஏற்படா நிலையில், இந்தப் போர் 30 நாட்கள் நீடித்தன. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒரு திட்டத்தை இராமநாதபுரம் தரப்பில் வரைந்தனர். திட்டமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதாவது இராமநாதபுரத்திற்கு மேற்கே உள்ள பெரிய கண்மாய் நீர்த்தேக்கத்தில் நிறைவாக இருந்த நீரைக் கண்மாய்க்கரையைச் சிறிது அகழ்வதின் மூலமாக ஒரு பெரிய உடைப்பை ஏற்படுத்தவும் அதன் வழி மிகுந்த வேகத்துடன் பாய்ந்து சென்ற கண்மாய் நீரை கிழக்கே ஓடிவந்து இராமநாதபுரம் கோட்டையை வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் சூழ்ந்திருந்த தஞ்சைப் படைகளை முழுமையாக அழித்தது. வேறு வழியில்லாமல் தஞ்சை அரசர் சேதுபதி ராணியுடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு ஓரளவு நஷ்டஈட்டையும் பெற்றுக்கொண்டு தஞ்சை திரும்பினார். இது நடந்தது ஜூன் 1771.
ஆற்காடு நவாப்பின் படையெடுப்பு
இந்த நிகழ்ச்சிக்கு ஒராண்டு கழித்து ஆற்காடு நவாபின் படைகளும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக் கூலிப்படைகளும், நவாபின் மைந்தர் உம் தத்துல் உம்ராவும், தளபதி ஜோசப் ஸ்மித்தும் இந்தப் படையெடுப் பிற்கு கூட்டுத்தலைமை ஏற்றனர். திருச்சியிலிருந்து திரட்டி வந்த பெரும்படை 29.05.1772-ஆம் நாள் இராமநாதபுரம் கோட்டையைச் சூழ்ந்தது[1]. தொடர்ந்து மூன்று நாள்கள் ராணி சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் ஆற்காடு நவாபிற்குக் கப்பம் கட்ட ராணி மறுத்துவிட்டார். இதனால் சீற்றம் கொண்ட நவாபின் மைந்தர் உம்தத்துல் உம்ரா ஏற்கனவே கோட்டையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கி வண்டி வீரர்களுக்கு சமிங்ஞை செய்ததும் இராமநாதபுரம் கோட்டை மீது பீரங்கிகள் அக்கினி மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இரண்டு நாள்கள் போர் நடைபெற்றும் வெற்றி ஈட்டாத எதிர்ப்படைகள் கோட்டையின் கிழக்கு மதிலில் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பின் வழியாகத் தளபதி ஸ்டிவன்சன் தலைமையில் ஒரு அணி பாய்ந்து சென்றது. இராமநாதபுரம் கோட்டை வாயிலுக்கும் அரண்மனைக்கும் இடைப்பட்ட பரந்த மைதானத்தில் பரங்கியரும், மறவர்களும் கடுமையாகப் போரிட்டனர். முடிவில் 3000 மறவர்களை இழந்த இராமநாதபுரம் ஆக்கிரமிப்பாளர் களுக்கு அடிபணிந்தது. இது நிகழ்ந்தது 03.06.1772. கைது செய்யப்பட்ட ராணி சேதுபதியும் இரண்டு பெண்மக்களும் இளவரசர் முத்துராமலிங்க சேதுபதியும் பாதுகாப்புக் கைதியாக திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். அங்கு சிறை வாழ்க்கையின்போது ராணியும் அவரது இளைய மகளும் காலமானார்கள்.
- ↑ 1. (மில்டரி கண்சல்ஸ்டேசன்) military Consulstation
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - இராமநாதபுரம், ஆற்காடு, ராணி, தஞ்சை, நவாபின், கோட்டை, பெரிய, இந்தப், மீது, ஆங்கிலக், வந்தார், சீமை, கொண்டு