சேதுபதி மன்னர் வரலாறு - அரண்மனை நடைமுறைகள்
9. அரண்மனைக்கு வருகின்ற அரசு விருந்தாளிகளான தமிழ்ப் புலவர்கள், வடமொழிப் பண்டிதர்கள் பெரும் வணிகர்கள். பிற நாட்டு அலுவலர்கள் ஆகியோர் திரும்பிச் செல்லும்பொழுது மன்னரைச் சந்தித்து அரண்மனை மரியாதையைப் பெற்றுச் செல்லுதல் வேண்டும். அவர்க ளுக்குத் தேவையான வழிச் செலவுக்கான பணம், பட்டாடைகள் மற்றும் பொன் வெள்ளியிலான தட்டில் வைத்து வழங்கப்படும்.
10. இராமநாதபுரம் அரண்மனையின் பாதுகாப்பிற்காக பின்பற்றப்பட்ட முறை 'பாரி' எனப்படும். இந்த முறை தன்னரசு மன்னர் கள் காலத்திலிருந்து ஜமீன்தார்கள் காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதாவது இராமநாதபுரம் கோட்டையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனைப் பாதுகாப்பிற்கென இரண்டு தனிக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழுவில் சில வீரர்களும் தீ வெட்டி தூக்கிச் செல்பவர்களும், தாரை தப்பட்டை ஆகியவைகளை அடித்து முழக்குபவர்களும் வாங்கா என அழைக்கப்படும் வளைந்த புனலை ஊதுபவர்களும் இருந்தனர். முதலாவது குழு சரியாக நடுநிசி நேரம் ஆனவுடன் தீ வெட்டிச் சுளுந்துகளை ஏந்திச் செல்பவர்கள் பின்னால் பறையடித்து முழக்குபவர்களும் அவர்களை அடுத்து ஆயுதம் தரித்த போர் வீரர்களும் இராமநாதபுரம் அரண்மனையைத் தெற்கு மேற்கு. வடக்கு ஆகிய பகுதிகளைச் சுற்றிக் கண்காணித்தவாறு இராமநாதபுரம் அரண்மனை வாசலை வந்தடைவர். இவர்கள் முதல் பாரி என்றழைக்கப்பட்டனர்.
இதே போன்று மற்றொரு குழுவும் நடுநிசி நேரத்திற்கு இரண்டு மூன்று நாழிகை கழித்து அரண்மனையைச் சுற்றிக் கண்காணித்து வருவர். இவர்கள் இரண்டாவது பாரி எனப்பட்டனர். நீண்ட அமைதியில் மூழ்கியிருக்கும இராமநாதபுரம் அரண்மனை முதலாவது இரண்டாவது பாரியினால் கலகலப்புப் பெறுவதுடன் கோட்டையிலுள்ள மக்கள் இரவு நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு இந்த குழுக்களின் ஒசை பயனுள்ளதாக அமைந்திருந்தது.
11. கடிகாரம் இல்லாத முந்தைய காலத்தில் கோட்டையில் வாழும் மக்களுக்கு ஓரளவு நேரத்தைச் சரியாக அறிவிப்பதற்கு இராமநாதபுரம் அரண்மனை வாசலை அடுத்து 'மணிப் பாறா' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரண்மனையின் கிழக்குப் பகுதியில் சிறு குழிகளைத் தோண்டி வைத்து அதில் வெடி மருந்தினை நிரப்பி வைப்பார்கள். நாள்தோறும் வைகறைப் பொழுதிலும் பகல் உச்சி வேளையிலும் இரவிலும் குழிகளுக்குத் தீ மூட்டி வெடிக்கச் செய்வர். பயங்கரமாக வெடி மருந்து வெடிக்கும் ஓசையை வைத்துக் கோட்டையில் உள்ள மக்கள் நாள்தோறும் மூன்று வேளையிலும் ஒரு வகையாக நேரத்தை அறிந்து கொள்வதற்கு ஏற்றதாக இருந்தது. பிற்காலத்தில் வெடிமருந்து வெடிப்பதை நிறுத்தி அரண்மனை முகப்பில் வெண்கலத் தட்டினை முழக்கி நேரத்தைத் தெரிவிக்கும் முறையும் இருந்து வந்தது. இந்த வெடி மருந்தினை நிரப்பி வெடிக்கச் செய்தவர்கள் வாணக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு என அரண்மனை வாசலை ஒட்டி தெற்குப் பகுதியில் குடியிருப்பு மனைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதி இன்றும் வாணக்காரர் தெரு என்று அழைக்கப்படுகிறது.
12. சேதுபதிகள் தன்னரசு மன்னர்களாக இருந்த காலத்தில் மன்னரது விருந்தாளியாக இராமநாதபுரம் வருகின்ற பெரிய மனிதர்களை மன்னரது பிரதானி இராமநாதபுரம் கோட்டை வாசலில் சந்தித்து வரவேற்பு அளிப்பதும், அவர்களைப் பின்னர் அரண்மனை ஆசாரவாசலுக்குச் சேதுபதி மன்னர் நேரில் சென்று வரவேற்கும் பழக்கமும் இருந்து வந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரண்மனை நடைமுறைகள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - இராமநாதபுரம், அரண்மனை, வெடி, வாசலை, பாரி, வந்தது