சேதுபதி மன்னர் வரலாறு - அரண்மனையும் ஆவணங்களும்
ஆவணங்கள்
ஏறத்தாழ 12-ஆம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து வந்துள்ள சேது மன்னர்களது ஆட்சி பற்றிய அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆதலால் கள்ளர் சீமை கானாட்டு திருமெய்யத்திலும், பின்னர் சாலை கிராமத்தை அடுத்த விரையாத கண்டனில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை நீடித்த இந்த மன்னர்களது ஆட்சியினைப் பற்றிய ஆவணங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. கி.பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை போகலூரிலும், இராமநாதபுரத்திலும் நிலைத்திருந்த சேது மன்னர்களது ஆட்சியைப் பற்றிய விவரங்களை அறிவதற்குக் கீழ்கண்ட ஆவணங்கள் மட்டும் பயனுள்ளவையாக அமைந்து விளங்குகின்றன.
1. Old Historical Manuscripts by Taylor Vol II (1841)
2. Manual of Madura Country by A. Nelson (1861)
3. Manual of Ramnad Samasthanam by Raja Ram Rao (1891)
4. இராமநாதபுரம் நிலமான்ய ஒலைக் கணக்கு (1810)
5. Tamil Nadu Archives Records from 1772 AD
6. Diary of General Patterson (1796) - London Museum
7. இராமப் பையன் அம்மானை - தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு
8. கான்சாயபு சண்டை - (நாட்டுப்புற இலக்கியம்)
9. Records of outer East India Company (Calonial Archives the Hague)
10. Record of English East India Company
11. Topographical list of inscriptions 1906, Vol II by K.V. Rangacharya
இவை தவிர கி.பி. 1604 முதல் 1792 வரை சேது மன்னர்கள் வழங்கிய சர்வமான்ய சாசனங்களான செப்பேடுகளும் கி.பி. 1622 முதல் 1898 வரையிலான கால அளவில் சேது மன்னர்கள் வெட்டுவித்த கல்வெட்டுகளும் ஆகும். இந்த ஆவணங்களில் சேது மன்னர்களது ஆட்சிக் காலத்தை அறுதியிட்டுத் தெரிவிக்கவில்லை. எடுத்துக்காட்டாக திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் கி.பி. 1674லும், கி.பி. 1678லும் நிறைவுபெற்றதாக சில ஆசிரியர்கள் குறிப்பிட்டு உள்ளனர். உண்மையில் அவரது ஆட்சிக்கால முடிவு கி.பி. 1676 ஆகும். மேலும் இந்த மன்னர் சேதுபதி பட்டம் சூட்டிக் கொண்டபோது கூத்தன் சேதுபதியின் மகன் தம்பித் தேவர்க்காக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தலையிட்டுச் சேது நாட்டை மூன்று பிரிவுகளாகப் பிரிக்குமாறு வலியுறுத்தி வந்தார். இதன் காரணமாகப் பிரிவினை செய்யப்பட்ட சேது நாட்டில் காளையார் கோவில் பகுதியைத் தம்பித் தேவர் தலைமையிடமாகக் கொண்டு சில காலம் ஆட்சி செய்துள்ளார். இதனைப் போன்றே இன்னொரு பகுதியான அஞ்சுகோட்டை பகுதியை நாராயணத் தேவர் மகன் தனுக்காத்த தேவர் சில காலம் ஆட்சி செய்ததையும். மேலே கண்ட நூல்கள் குறிப்பிடத் தவறிவிட்டன.
இன்னொரு செய்தி, ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி. 1710-ல் மரணமடைந்ததும் அவரது தங்கையின் மகனான திருவுடையாத் தேவர் என்பவர் சேதுபதிப் பட்டத்தினைப் பெற்றார் என அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் திருவுடையாத் தேவர் என்ற முத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி. 1710-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவரது தமையனார் முத்து வயிரவநாத சேதுபதி கி.பி. 1710-லேயே சேதுநாட்டின் ஆட்சி உரிமையைப் பெற்றிருந்தார் என்பதை அவரது கி.பி. 1710. கி.பி. 1712 ஆண்டைச் சேர்ந்த செப்பேடுகள் தெரிவிக்கின்றன. ஆதலால் முத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி. 1713-ல் தான் சேது நாட்டின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது. கி.பி. 1713-ல் இந்த மன்னர் வழங்கிய முதல் செப்பேடும் இதை உறுதி செய்கிறது. இந்த மன்னரது மரணம் பற்றிய சரியான ஆண்டு இந்த நூல்களில் காணப்படவில்லை. இதனைப் போன்றே கிழவன் சேதுபதியின் மகனான பவானி சங்கரத் தேவர் கி.பி. 1725-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்து கி.பி. 1727 வரை ஆட்சி செய்ததைப் பற்றிய செய்திகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த மன்னர் திருக்கோயில்களுக்கு வழங்கிய தானங்களில் கி.பி. 1727-ல் நயினார் கோயிலுக்கு வழங்கப்பெற்ற அண்டகுடித் தானம் பற்றிய கல்வெட்டு மட்டும்தான் கிடைத்துள்ளது. இவைகளை விட இன்னும் சிறப்பு வாய்ந்த தொன்மை ஆவணங்களைப் போர்த்துகீசியர் சேது மன்னர் கடிதப் போக்கு வரத்து, யாழ்ப்பாணம், தூத்துக்குடி, கீழக்கரை ஆகிய ஊர்களில் நிலை கொண்டிருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது உடன் படிக்கைகளும் கி.பி. 1772 - 1794 வரையான கால அளவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் சேது மன்னருக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து ஆகியவை சேதுபதிச் சீமை வரலாற்றிற்கு மிகவும் இன்றியமையாதவை. அவைகளில் ஒன்று கூட நமக்குக் கிடைப்பதாக இல்லை. இராமநாத சமஸ்தான நிர்வாக அலுவலர்களது அசிரத்தையாலும், பொறுப்பற்ற தன்மையாலும் இவை முழுவதும் அழிந்து விட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரண்மனையும் ஆவணங்களும் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேது, பற்றிய, தேவர், மன்னர், ஆட்சி, சேதுபதி, அவரது, மன்னர்களது, ஆவணங்கள், முத்து, வழங்கிய, நூற்றாண்டு, சேதுபதியின்