சேதுபதி மன்னர் வரலாறு - அரண்மனையும் ஆவணங்களும்
II. அரண்மனையும் ஆவணங்களும்
இராமநாதபுரம் அரண்மனை
மேலே விவரிக்கப்பட்ட வரலாற்றின் நாயகர்களான சேது மன்னர்களும் ஜமீன்தார்களும் தங்களது தலைமையிடமாகவும் இருப்பிடமாகவும் அமைந்திருந்தது இராமநாதபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள அரண்மனையாகும்.
இராமநாதபுரம் கோட்டை முதலில் மண்ணால் அமைக்கப்பட்டு இருந்தது என்ற தொன்மையான செய்தி கி.பி. 12ஆம் நூற்றாண்டில் மதுரை மண்டலத்தின் மீது படையெடுத்து வந்த இலங்கைப் படையெடுப்பினைப் பற்றிய இலங்கை வரலாற்று நூலில் காணப்படுகிறது[1]. இந்தக் கோட்டை கி.பி. 1678 வரையான காலகட்டத்தில் போகலுரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த சேது மன்னர்கள் சில காலம் இதனைப் பயன்படுத்தினர். இதற்கு ஆதரவாக இராமநாதபுரம் தென்மேற்கு மூலையில் கூத்தன் சேதுபதியினால் அமைக்கப்பட்ட கூரிச்சாத்தனார் ஆலயத்தையும் தளவாய் சேதுபதி என்ற இரண்டாம் சடைக்கன் சேதுபதி அமைத்த சொக்கநாத கோயிலையும் அரண்மனையின் மையப் பகுதி திருமலை ரெகுநாத சேதுபதி அமைத்த இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தையும் குறிப்பிடலாம். இந்த மண் கோட்டையையும் இதனுள் அமைந்திருந்த அரண்மனையையும் அகற்றிவிட்டு இராமநாதபுரம் கோட்டையையும் அரண்மனையையும் அமைத்தவர் ரெகுநாத கிழவன் சேதுபதி ஆவார்.
இந்தக் கற்கோட்டையைப் பின்னால் வந்த சேது மன்னர்களும் ஜமீன்தாரர்களும் பயன்படுத்தி வந்துள்ளனர். இவைகளை அமைக்க பெரிதும் உதவியவர் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் என்ற கீழக்கரை வணிக வேந்தர் ஆவார் என்ற செய்தி இராமநாதபுரம் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளது[2].
இராமநாதபுரம் கோட்டை ஒரே ஒரு தரை வாயிலுடன் செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட கற்சுவர்களால் அமைக்கப்பட்டது. இராமநாதபுரம் அரண்மனையில் சேது மன்னரும் அவரது அரச பிராட்டிகளும் தங்குவதற்கு ஏற்ப பல அறைகள் கொண்ட மண்டபங்களையும் சேது மன்னர் கொலு வீற்றிருப்பதற்கான அத்தாணி மண்டபத்தையும், ஆயுதச் சாலையையும் அமைத்ததுடன் இராமநாதபுரம் அரண்மனையின் அன்றாட அலுவல்கள் எவ்விதம் நடக்க வேண்டும் என்பதற்கான வரையறைகளையும் சீதக்காதி மரைக்காயர். மன்னருக்கு வகுத்துக் கொடுத்தார். மேலும் மன்னர் நீராடுவதற்கு என்று அத்தாணி மண்டபத்தின் வடபகுதியில் நீராடுவதற்கான நீச்சல் குளம் ஒன்றையும் அமைத்து இருந்தார். இராமநாதபுரம் நகருக்கான குடிநீர் தேக்கமான முகவையூரணியிலிருந்து இந்த நீச்சல் குளத்திற்கு நீர் வசதி பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஜமீன்தார்களின் ஆட்சியின் பொழுது இந்த நீச்சல் குளம் பயனற்றதாகச் செய்யப்பட்டது. அண்மைக்காலம் வரை அந்தப் பகுதி பூப்பந்து விளையாடும் இடமாக இருந்து வந்தது. கி.பி. 1772-ல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கில தளபதி ஜோசப் ஸ்மித் இந்த அரண்மனையின் அழகினைத் தமது அறிக்கையில் பதிவு செய்திருந்தார். அவரைப் போன்றே கி.பி. 1796-ல் இங்கு வருகை தந்த சென்னை தளபதி ஜெனரல் பேட்டர்சன் இராமநாதபுரம் அரண்மனையின் அமைப்பு பற்றிய முழு விவரங்களையும் தமது பயணக் குறிப்பில் வரைந்து வைத்துள்ளார்[3].
ஜமீன்தார்களது ஆட்சியில் இந்த அரண்மனையின் நுழைவாயிலை ஒட்டிய இரு பகுதிகளிலும் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டன.
மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் காலத்தில் இராமலிங்க விலாசம் அரண்மனையை அடுத்து வட பகுதியில் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலையையும் அமைத்துப் பொதுமக்கள் அதனைக் கண்டு களிக்கச் செய்யப்பட்டது. அந்த மிருகக் காட்சி சாலையில் மான்கள், புலி, மலையாடுகள் இருந்த விபரம் அவரது 1893-ஆம் ஆண்டு நாட் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. இவரது மைந்தரான இராஜ ராஜேஸ்வர முத்து ராமலிங்க சேதுபதி இராமலிங்க விலாசத்தின் கிழக்கே உள்ள அரண்மனை மதிலை அகற்றி விட்டு ஒரு அழகிய புதிய நுழைவாயில் ஒன்றை அமைத்தார். இன்றும் அந்த வாயில் 'போலீஸ் கேட்" என்ற பெயருடன் பயன்பட்டு வருகிறது. இந்த மன்னர் இராஜ ராஜேஸ்வரி ஆலயத்திற்கு மேற்கிலும் அந்தப்புரத்திற்கு கிழக்கிலும் இடைப்பட்ட இடத்தில் கல்யாண மஹால் என்ற புதிய கட்டிடத்தையும் அதற்கு எதிரே சரஸ்வதி மகால் என்ற நூலகக் கட்டிடத்தையும் அமைத்தார். இவைகளைத் தவிர இந்த அரண்மனைப் பகுதியில் ஜமீன்தாரர் ஆட்சியில் எந்த அமைப்புகளும் நிர்மாணிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ↑ 1. Paranavittna. Dr. S. Nicholson - Concise history of ceylon (1952)
- ↑ 1. Tamil Nadu Archives Military Consultation Vol 42-B 8-6. 1772, b-410.
- ↑ 2. London Prince of Wales Library - Diary of General Patterson (In Manuscript).
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரண்மனையும் ஆவணங்களும் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - இராமநாதபுரம், சேதுபதி, சேது, அரண்மனையின், மன்னர், நீச்சல், கோட்டை