முதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சேதுபதி மன்னர் வரலாறு » இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி
சேதுபதி மன்னர் வரலாறு - இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி
VIII. இராஜ இராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி (1910-1929)
பாஸ்கர சேதுபதியின் மறைவின்போது அவரது மூத்த மகனான இராஜ இராஜேஸ்வரன் சிறுவயதினராய் இருந்ததால் தொடர்ந்து இராமநாதபுரம் ஜமீன்தாரி நிர்வாகம் கோர்ட் ஆப் வார்ட்சிடம் இருந்து வந்தது. இராஜ இராஜேஸ்வர சேதுபதி கல்வியிலும் நிர்வாகத்திலும் பயிற்சி பெற்றபின் 1910-ல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1929-ல் இறக்கும்வரை ஜமீன்தாராக இருந்தார்.
இவர் நல்ல தமிழ்ப் புலமையும் ஆங்கில மொழிப் பேச்சாற்றலையும் உடையவராக இருந்தார். 1911-இல் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு சிறந்த முறையில் சங்கத்தைச் செயல்படுத்தி வந்தார். சென்னை மாநில கவர்னரது பொறுப்பிலிருந்த சென்னை மாநில சட்ட மேலவையில் (தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உட்பட்ட பெரிய தமிழ் மாநிலம்) ஜமீன்தார்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே இடத்தின் பிரதிநிதியாக இருந்தார். இவர் காலத்தோடு, ஆண்டுதோறும் நடக்கும் நவராத்திரி விழாவில் தமிழ்ப் புலவர்களை ஊக்குவித்து சன்மானமும் பொன்னாடை வழங்கும் பழக்கமும் நிறைவுக்கு வந்தது. இவர் ஆட்சியின் போது இரண்டாம் உலகப் போர் நடந்ததால், நேச நாடுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவாக இராமநாதபுரம் சீமை மறவர்களை இராணுவ அணியில் சேருமாறு பிரச்சாரம் செய்ததுடன் பல இலட்சங்களை நன்கொடை அளித்து அதிலிருந்து இராம்நாட் என்று பெயர் சூட்டப்பெற்ற விமானம் ஒன்றை வாங்கி அரசுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இராமநாதபுரம் மாவட்ட நகராண்மைக் கழகத்தின் தலைவராக இவர் பல ஆண்டுகள் பணியாற்றினார். இவரது பணிக் காலத்தில் இன்றைய மானா மதுரை நகரை மானாமதுரை ரயில் சந்திப்புடன் இணைப்பதற்காக வைகை ஆற்றின் குறுக்கே மிகப் பெரிய பாலம் ஒன்றை கட்டுவித்தார். இராமேஸ்வரம் வரும் பயணிகள் தனுஷ்கோடி தீர்த்தக் கரையில் நீராடுவதற்காக இராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தர்மப் படகு சேவையைக் கடலில் தொடங்கி வைத்தார். மற்றும் திருப்புல்லாணி பெருமாளது திருத்தேர் (திருமலை ரெகுநாத சேதுபதியினால் வழங்கப் பெற்றது.) மிகவும் பழுதடைந்து விட்டதால் புதிய தேர் ஒன்றையும் செய்வித்து அந்த கோவிலுக்கு வழங்கினார். 1921-ல் திருச்சி நகரில் நடைபெற்ற பிராமணர் அல்லாதார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார் என்ற செய்தியும் உள்ளது. மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் வடக்கு ராஜகோபுர திருப்பணிக்காக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் சமஸ்தான அவைப் புலவராகத் தொடர்ந்து பணியாற்றிய மகாவித்துவான் இரா. இராகவ ஐயங்கார் சுவாமிகளைத் தமது தந்தையைப் போல வாழ்க்கைக்காக இராமநாதபுரம் நொச்சிவயல் ஊரணி வீதியில் ஒரு வீடு ஒன்றை அமைத்துக் கொடுத்ததுடன் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள போகலூர் கிராமத்தில் ஆற்றுப் பாய்ச்சலில் சில விளைநிலங்களையும் வாங்கித் தானமாக வழங்கினார். இவரது தந்தையைப் போலவே இவரும் சிறந்த தமிழ்ப் புலவராகத் திகழ்ந்தார். நூற்றுக்கணக்கான தனிப்பாடல்களை எழுதியிருப்பதுடன் திருக்குறள் வெண்பா என்ற நூலினையும் இயற்றியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - இராமநாதபுரம், இவர், வழங்கினார், ஒன்றை, தமிழ்ப், சேதுபதி, இருந்தார்