சேதுபதி மன்னர் வரலாறு - பாஸ்கர சேதுபதி
VII. மன்னர் பாஸ்கர சேதுபதி (1888-1903)
துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி இறக்கும்போது அவரது மூத்த மகன் பாஸ்கர சேதுபதி ஐந்து வயது பாலகனாக இருந்தார். பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இராமநாதபுரம் ஜமீன்தாரி நிர்வாகத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டனர். அத்துடன் இராஜ குடும்பத்தைப் பராமரித்து வந்ததுடன் பாஸ்கர சேதுபதிக்கும் அவரது தம்பி தினகர சேதுபதிக்கும் கல்வி புகட்டும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். அதற்காக அந்தச் சிறுவர்கள் இருவரையும் சென்னைக்கு அனுப்பி ஆங்கில ஆசான்கள். தாதிமார்கள், பணியாட்கள் ஆகியோரை அவர்களுக்கென நியமித்து முறையாகக் கல்வி பெறுவதற்கு ஏற்பாடு செய்தனர். கி.பி. 1888-ல் பாஸ்கர சேதுபதி சென்னை கிறுத்தவக் கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளி வந்தவுடன் இராமநாதபுரம் ஜமீன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவரது 12 வருட நிர்வாகத்தில் பல கண்மாய்களும், நீர்ப்பாசன ஆதாரங்களையும் பழுது பார்க்க ஏற்பாடு செய்தார். பெரும்பாலும் சமஸ்தானத்தின் பல பகுதிகளுக்கும் சாலை வசதி இல்லாத அந்தக் காலத்தில் பல்லக்கிலே பயணம் செய்து மக்களது வாழ்க்கை நிலையையும், தேவைகளையும் அறிந்து வந்தார்.
இவர் சிறந்த சைவ சித்தாந்தியாக இருந்து வந்ததால் இராமநாதபுரம் சீமை சமஸ்தான கோவில்களில் ஆகம முறைப்படி வழிபாடுகளும் விழாக்களும் நடந்து வர ஏற்பாடு செய்தார்.
இந்த மன்னர் பொருள் வசதி குறைந்த ஜமீன்தார் அமைப்பு முறையிலே இயங்கி வந்தாலும் இவரது இதயம் அவரது முன்னோர் களைப் போன்று விசாலமானதாகவும் ஆன்மீகப் பணியில் பற்றுக் கொண்டதாகவும் அமைந்து இருந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது ஆகும். இராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில், இராமநாதபுரம் இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியன திருப்பணி செய்யப்பட்டன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும், திருச்செந்தூர், பழனி, முருகன் ஆலயங்களிலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலும் உச்சி காலக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவைகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சென்னை கபாலீஸ்வரர் கோயில் இறைவர் பவனி வருவதற்காகவும், காளையார் கோவில் காளைநாதர் கோவிலுக்கும் புதிய பல்லக்குகளைச் செய்து கொடுத்ததுடன் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி உலா வர வெள்ளித் தேர் ஒன்றினையும் செய்து வழங்கினார். இராமநாதபுரம் ராஜேஸ்வரி அம்மன் பயன்பாட்டிற்காகச் சிம்ம வாகனம் ஒன்றினை அமைத்து அதனை முழுதுமாக தங்கத் தகட்டினால் நிறைவு செய்து அகமகிழ்ந்தார். மேலும் ராஜேஸ்வரி அம்மன் கோயில் கோபுரத்தையும் பொன் தகடுகளால் வேய்ந்து உதவினார். இவரது காலத்தில் தான் இராமேஸ்வரம் திருக்கோயிலின் முதலாவது குட முழுக்கு 1.11.1902-ல் நடைபெற்றது.
இவைகளையெல்லாம் விஞ்சிய சாதனை ஒன்றையும் படைத்தார். அதாவது 14.9.1893-ஆம் நாள் அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் நடைபெற்ற அனைத்து உலக சமயப் பேரவைக்குச் சுவாமி விவேகானந்த ரைத் தனது சொந்தச் செலவில் அனுப்பி வைத்து நமது நாட்டின் பழம் பெருமையினை உலகு அறியச் செய்ததாகும்.
இவரது பாடல்கள் ஆலவாய்ப் பதிகம், இராமேஸ்வரர் பதிகம். காமாட்சி அம்மன் பதிகம். இராஜேஸ்வரி பதிகம் ஆகியன மட்டும் கிடைத்துள்ளன. மேலும் 14.9.1901-ல் மதுரை மாநகரில் வள்ளல் பாண்டித்துரை தேவர் நான்காம் தமிழ்ச்சங்க நிறுவ அவருக்குத் தக்க துணையாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் ஒரு சிறந்த சைவ சித்தாந்தியாக இருந்து வந்ததால் இராமநாதபுரம் அரண்மனையில் இவரது முன்னோர்களால் பிரதிட்டை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த ஸ்ரீ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்று வந்த உயிர்ப் பலியினை இவரது மனம் பொறுத்துக்கொள்ள வில்லை. ஆதலால் அப்பொழுது கர்நாடக மாநிலத்தில் சிறப்புற்று விளங்கிய சிருங்கேரி மடாதிபதியான பூநீ நரசிம்ம பாரதி அவர்களை வரவழைத்து இராஜேஸ்வரி ஆலயத்தின் உயிர்ப்பலி வழிபாட்டினை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாஸ்கர சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - இராமநாதபுரம், இவரது, அம்மன், செய்து, பாஸ்கர, சேதுபதி, பதிகம், சுவாமி, ஏற்பாடு, ஆலயத்திலும், ராஜேஸ்வரி, மேலும், இராஜேஸ்வரி, திருக்கோயில், செய்தார், அவரது, காலத்தில், ஏற்றுக், மதுரை, இராமேஸ்வரம்