முதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சேதுபதி மன்னர் வரலாறு » இராணி முத்து வீராயி நாச்சியார் மற்றும் ராணி சேது பர்வதவர்த்தனி நாச்சியார்
சேதுபதி மன்னர் வரலாறு - இராணி முத்து வீராயி நாச்சியார் மற்றும் ராணி சேது பர்வதவர்த்தனி நாச்சியார்
IV. இராணி முத்து வீராயி நாச்சியார் மற்றும் V. ராணி சேது பர்வதவர்த்தனி நாச்சியார்
இராணி முத்து வீராயி நாச்சியாரது ன்ேடுதலுக்கிணங்க மதுரைச் சீமை கலெக்டர் விவேஷிங் ஜமீன்தாரியை அவரிடம் ஒப்படைக்கப் பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கம்பெனித் தலைமை இராமநாதபுரம், ஜமீன்தாரியை இராணி முத்து வீராயி நாச்சியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இயல்பாகவே இராணியார் திறமையானவராகவும், அறிவுக்கூர்மையுடன் இருந்ததால் செய்யது இஸ்மாயில் சாகிபுடன் இணைந்து சமஸ்தான அலுவல்களைத் திறம்பட ஆற்றி வந்தார். பல ஆண்டுகளாகப் பற்றாக்குறையினால் அவதிப்பட்டு வந்த சமஸ்தானம் பலத்த நிதி வசதியுடன் திகழ்ந்தது. அடுத்து இறந்து போன இராமசாமி சேதுபதியின் பெண்மக்கள் மங்களேஸ்வரி நாச்சியாரும், அவரது தங்கை துரைராஜ நாச்சியாரும் அடுத்தடுத்து காலமானதால் மீண்டும் சமஸ்தான நிர்வாகத்திற்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டது. இராமசாமித் தேவரது விதவையான பர்வதவர்த்தனி நாச்சியாரும் வேறு சிலரும் இராணி முத்து வீராயி நாச்சியாருக்கு எதிராகப் பல வழக்குகளைத் தொடர்ந்தனர். மேலும் எட்டையபுரம் பாளையக்காரர் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் தெற்கு எல்லையில் பல ஆக்கிரமிப்புகளைச் செய்து வந்தார். இவையனைத்தையும் இராணி முத்து வீராயி நாச்சியார் பொறுமையுடனும் மனத்திண்மையுடனும் சமஸ்தான மேனேஜர் செய்யது இஸ்மாயில் சாகிபின் தக்க ஆலோசனைகளைக் கொண்டு சமாளித்தார்.
இதற்கிடையில் இராமசாமி சேதுபதியின் பெண் மக்களுக்கு கார்டியனும், இராணி முத்து வீராயி நாச்சியாரின் சகோதரருமான முத்துச் செல்லத் தேவர் தானே இராமநாதபுரம் சமஸ்தானாதிபதியாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தர்மகர்த்தாவாகவும் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டும் மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலக அலுவ லர்களுக்குக் கையூட்டு வழங்கியும் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் நிதியினைப் பல வழிகளில் தவறாக அளித்து வந்தார். இப்பொழுது இராணி முத்து வீராயி நாச்சியாருக்கும் விதவை இராணியான பர்வத வர்த்தனிக்கும் உறவுகள் சீர் கெட்டன. இறுதியில் இராணியின் மாமியாரான முத்து வீராயி நாச்சியாரும் பர்வதவர்த்தனி நாச்சியாரும் சமரச உடன்பாட்டினைச் செய்துகொண்டனர். அதன்படி இராஜசிங்க மங்கலம் வட்டகையில் உள்ள பிடாரனேந்தல் பகுதிக்கு இராணி முத்து வீராயி நாச்சியாரைச் சப் டிவிசன் ஜமீன்தாரினியாகச் செய்யப்பட்டதுடன் இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் சர்வ சுதந்திரத்துடன் வசிப்பதற்கான உரிமையும் வழங்கப் பெற்று மாதந்தோறும் ரூ. 1000 மட்டும் இராமநாதபுரம் சமஸ்தானக் கருவூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் ஒப்புதல் அளித்தார். மேலும் ஏற்கனவே முத்து வீராயி நாச்சியார் சுவீகாரப் புத்திரனாக ஏற்றுக் கொண்டிருந்த சிவசாமி சேதுபதியை இராமநாதபுரம் பட்டத்திற்கு உரிமை கோருவது இல்லை என ராணி முத்து வீராயி நாச்சியார் இணக்கம் தெரிவித்தார். இது நடந்தது 29.3.1850-ல். இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு முன்னர் இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் சிவஞானத்தேவரின் மகனும் புதுமடம் கிராமத்தில் உள்ள தனது தங்கை வீராயியின் மகனுமான முத்து இராமலிங்கத்தை 24.5.1847-ல் தனது வாரிசாக ஏற்றிருந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராணி முத்து வீராயி நாச்சியார் மற்றும் ராணி சேது பர்வதவர்த்தனி நாச்சியார் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - முத்து, வீராயி, இராணி, இராமநாதபுரம், நாச்சியார், நாச்சியாரும், பர்வதவர்த்தனி, உள்ள, சமஸ்தான, வந்தார்