சேதுபதி மன்னர் வரலாறு - தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி
இராமேஸ்வரம் தீவில் இராமேஸ்வரம் நகருக்கு முன்னதாக உள்ள இன்றைய தங்கச்சிமடம் அருகே இருபடைகளும் பொருதித் தாக்கின. இரண்டாவது நாள் போரில் சேது மன்னரது படைகளுக்குத் தலைமை தாங்கிய போகலூர் கோட்டை வன்னியத்தேவன் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். மிகப்பெரிய வீரனாக விளங்கிய வன்னியத் தேவனது திடீர் மறைவு சேதுபதி மன்னருக்கு எதிர்பாராத பின்னடைவை ஏற்படுத்தியது. மதுரைத் தளவாய், சேதுபதியை எளிதில் வெற்றிகொண்டு அவரைச் சிறைபிடித்து மதுரையில் உள்ள திருமலை நாயக்கர்மன்னர் முன் நிறுத்தினார். சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை திருமலை நாயக்கரது இந்த சேதுநாட்டுப் படையெடுப்பைப் பற்றிய நாட்டுப்புற இலக்கியமான இராமப்பையன் அம்மானை விவரமாக வரைந்துள்ளது. மேலும் இந்தப் போரில் வன்னியத் தேவன் ஆற்றிய போர்ப் பணியையும் சிறப்பாக இந்த அம்மானையில் சொல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே சேதுபதி பட்டத்திற்கு உரிமை கொண்டாடிய தம்பித் தேவரைத் திருமலைநாயக்க மன்னர் மறவர் சீமையின் மன்னராக நியமனம் செய்தார். அந்நியரது கைப்பாவையான தம்பித் தேவரை மன்னராக ஏற்றுக்கொள்ள மறுத்த மறக்குடி மக்கள் மறவர் சீமையெங்கும் போர்க்கொடி உயர்த்தினர். குழப்பம், கலகம், சீரழிவு இந்தச் சூழ்நிலையை மேலும் தொடர விரும்பாத திருமலைநாயக்க மன்னர் இரண்டாவது சடைக்கன் சேதுபதியைச் சிறையினின்றும் விடுவித்துப் போகலூருக்குத் திருப்பி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வுகள் கி.பி. 1640ல் நிகழ்ந்தன.
அறக்கொடைகள்
அடுத்த 5 ஆண்டு காலங்களில் சடைக்கன் சேதுபதி பல தெய்வீகப் பணிகளை மேற்கொண்டிருந்தார் என்பதை சில வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. திருவாடானை வட்டத்திலுள்ள திருத்தேர் வளையில் எழுந்தருளியுள்ள ஆண்டு கொண்ட ஈசுவரர் கோயிலுக்குக் கொங்கமுட்டி, தச்சனேந்தல், தண்டாலக்குடி ஆகிய ஊர்களையும் புளியங்குடியில் உள்ள பூவணப்புநாத திருக்கோயிலுக்கு விரகடியேந்தல் என்ற ஊரினையும் சர்வமானியமாக வழங்கியதனை அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமது தந்தை சடைக்கன் சேதுபதியையும், சகோதரர் கூத்தன் சேதுபதியையும் பின்பற்றியவராக இராமேஸ்வரத் திருக்கோயிலின் நுழைவுவாயிலில் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பெற்ற இராஜ கோபுரத்தினை நிர்மாணிப்பதற்கு இந்த மன்னர் முயற்சி செய்தார். இந்தத் திருப்பணிக்காகச் சேதுநாட்டில் தெற்கு வட்டகையான சாயல்குடி பகுதியிலிருந்து கிடைக்கும் அனைத்து வருவாய்களையும் இந்த கட்டுமானத்தில் ஈடுபடுத்தி வந்தார்[3]. என்றாலும் இந்த மன்னரது வாழ்நாளில் இந்தத் திருப்பணி நிறைவு பெறாத நிலையில் கி.பி. 1645ல் இந்த மன்னர் காலமானார். ஆனால் இவரது ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் கோட்டைக்குள் தொடங்கப்பெற்ற சொக்கநாத ஆலயம் இவரது ஆட்சிகாலத்திலேயே நிறைவுபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- ↑ 3. Seshadri. Dr. Scthupathis of Ramnad. (unpublished Ph.D. thesis 1974)
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், சடைக்கன், மேலும், சேதுபதி, உள்ள