சேதுபதி மன்னர் வரலாறு - தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி
III . தளவாய் சேதுபதி (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி (கி.பி. 1635 - 1645)
காலம் சென்ற கூத்தன் சேதுபதி மன்னருக்குத் தம்பித் தேவர் என்ற மகன் இருந்து வந்தார். ஆனால் இராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த முதியவர்கள் தம்பித் தேவரது உரிமையைப் புறக்கணித்து விட்டுக் கூத்தன் சேதுபதியின் இளைய சகோதரரான சடைக்கத் தேவரை இரண்டாவது சடைக்கன் சேதுபதியாக அங்கீகரித்துச் சேதுபதி பட்டத்தினை அவருக்குச் சூட்டினர். இராமநாதபுர அரண்மனை வழக்கப்படி சேதுபதி மன்னருக்கு அவரது செம்பி நாட்டு மறவர் குலப் பெண்மணியின் மூலமாகப் பிறந்த மகனுக்கே சேதுபதி பட்டம் உரியதாக இருந்தது. கூத்தன் சேதுபதியின் இரண்டாவது மனைவியும் செம்பிநாட்டு மறப்பெண்மணியும் அல்லாத மனைவிக்கு பிறந்தவர் தம்பித்தேவர் என்பதால் அவர் சேதுபதி பட்டத்திற்கான தகுதியை இழந்தவராகக் கருதப்பட்டார். இரண்டாவது சடைக்கன் சேதுபதி கி.பி. 1635 முதல் கி.பி. 1645 வரை 10 ஆண்டுகள் சேதுபதி மன்னராக இருந்து வந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய இழப்பும், அழிமானமும் சேதுநாட்டிற்கு ஏற்பட்டன.
தமது பேரரசிற்கு அண்மையிலுள்ள மறவர் சீமையின் வலிமை நாளுக்குநாள் பெருகி வருவதை விரும்பாத மதுரை மன்னரான திருமலை நாயக்கர், சேதுநாட்டின் மீது மிகப்பெரிய படையெடுப்பினை, அதுவரை சேதுநாடு கண்டறியாத மிகப்பெரிய போர் அணிகளைச் சேதுநாட்டிற்குள் கி.பி. 1639ல் அனுப்பி வைத்தார். வடக்கே கொங்கு நாட்டிலிருந்து தெற்கே நாஞ்சில் நாடு வரையிலான நீண்ட பகுதியில் அமைந்திருந்த நாயக்க மன்னரது எழுபத்தி இரண்டு பாளையங்களின் வீரர்கள் இந்தப் படையெடுப்பில் கலந்து கொள்ளுமாறு செய்யப்பட்டனர். இந்தப் படையெடுப்பினைத் தலைமை தாங்கி நடத்தியவர் திருமலை நாயக்க மன்னரது தளவாய் இராமப் பையன். நாயக்கர் படைகள் தொடக்கத்தில் சேது நாட்டிற்குள் புகுந்து எளிதாகப் போகலூர், அரியாண்டிபுரம். அத்தியூத்து ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றியவாறு கிழக்கே முன்னேறிச் சென்றன[1]. சேதுநாட்டு மறவர்களது கடுமையான தாக்குதலை மேலும் தாங்கமுடியாத மதுரைப் படைகளின் முன்னேற்றத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. அத்துடன் மதுரைப் பேரரசிற்கு வடக்கே பிஜப்பூர் சுல்த்தானது படையெடுப்பு அபாயமும் அப்பொழுது இருந்தது. இதனால் சேதுநாட்டுப் போரினைச் சிறிது காலம் நிறுத்தி வைத்த மதுரைத் தளவாய் வடக்கே போர்ச்சுகீசியரின் தலைமை இடமான கோவாவிற்குச் சென்று போர்ச்சுகல் நாட்டு கவர்னருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு தகுந்தபடை உதவியுடன் தளவாய் சேதுநாட்டிற்குத் திரும்பினார்[2].
வலிமைவாய்ந்த மதுரைப் படையினைச் சமாளிப்பதற்கு ஏற்ற இடமாகக் கருதி சேதுபதி மன்னர் இராமேஸ்வரம் தீவிற்குச் சென்றார். என்றாலும் மதுரைத் தளவாய் பாம்பனிற்கும் மண்டபத்திற்கும் இடையே கடலின்மீது ஒரு பாலம் அமைத்து அதன் வழியாக மதுரைப் படைகள் சேதுபதி மன்னரைப் பின்தொடருமாறு செய்தார்.
- ↑ 1. இராமப்பையன் அம்மானை - தஞ்சைசரசுவதிகமால் பதிப்பு
- ↑ 2. Sathya Natha Ayar. A – History of Madura Nayaks (1928).
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி, தளவாய், மதுரைப், வடக்கே, மிகப்பெரிய, கூத்தன், சடைக்கன், இரண்டாவது