சேதுபதி மன்னர் வரலாறு - திருமலை ரெகுநாத சேதுபதி
இந்தக் கோயிலின் இரண்டாவது பிரகார அமைப்புத் திருப்பணியுடன் அமைந்து விடாமல் இந்த மன்னர் இந்தக் கோயிலின் அன்றாட பூஜை. ஆண்டுவிழா ஆகியவைகளும் சிறப்பாக நடைபெறுவதற்காகப் பல ஊர்களையும் சர்வ மானியமாக வழங்கியுள்ளார். கீழ்க்கண்ட தானங்களுக்கான இந்த மன்னரது செப்பேடுகள் மட்டும் கிடைத்துள்ளன.
1. இராமநாதசுவாமி, அம்பாள் நித்ய பூசைக்கும் ஆவணி மூலத் திருவிழாவிற்கும் கி.பி. 1647ல் திருவாடானை வட்டத்து முகிழ்த்தகம் கிராமம் தானம்.
2. இராமேஸ்வரம் கோவில் நித்ய பூஜை கட்டளைக்கு கி.பி. 1658ல் திருச்சுழி வட்டத்து கருனிலக்குடி கிராமம் தானம்.
3. இராமேஸ்வரம் திருக்கோவிலில் ஆவணி மூலத்திருவிழா மேலும் சிறப்பாக நடைபெறுவதற்கு முதுகளத்துர் வட்டத்திலுள்ள புளியங்குடி, கருமல், குமாரக்குறிச்சி ஆகிய ஊர்கள் கி.பி. 1673ல் தானம்,
இவைதவிர இராமேஸ்வரம் திருக்கோயிலில் பூஜை, பரிசாரகம், ஸ்தானிகம் ஆகிய பணிகளில் ஈடுபட்டு இருந்த மகாராஷ்டிர மாநிலத்து அந்தணர்களை அந்தப் பணிகளின் மூலம் பெரும் ஊதியங்களை அவர்களே அனுபவித்துக் கொள்வதற்கும் இந்த மன்னர் கி.பி. 1658ல் உரிமை வழங்கிப் பட்டயம் அளித்துள்ளார்[4].
இந்தத் திருக்கோயிலின் திருப்பணிகளுடன் இந்த மன்னர் சேதுநாட்டின் பல பகுதிகளிலும் உள்ள திருக்கோயில்களுக்குச் சமய வேற்றுமை பாராமல் பலவிதமான தானங்களை வழங்கி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கீழக்கரையில் உள்ள சொக்கநாதர் கோவிலுக்குப் புல்லந்தை, மாயாகுளம் கிராமங்களைச் சர்வமானியமாக வழங்கியதை ஒரு செப்பேடு தெரிவிக்கிறது. இராமநாதபுரம் சீமையில் உள்ள திருப்புல்லாணி என்ற திருத்தலம் இராமாயணத் தொடர்பு உடையது ஆகும். இங்குள்ள இறைவன் தர்ப்பாசன அழகியார் மீது திருமங்கையாழ்வார் பல பாசுரங்களைப் பாடியுள்ளார். தமிழகத்தின் வைணவ பெருமக்கள் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து பக்திப் பரவசத்துடன் ஏற்றிப் போற்றுகின்ற தலம் இதுவே ஆகும். சிதிலமடைந்துள்ள நிலையில் உள்ள பாண்டியர் கால இந்தக் கோயிலை முழுமையாக திருப்பணி செய்த நிலையில், காங்கேய மண்டபம் நுழைவாயில் கோபுரம், கண்ணாடி மண்டபம், தாயார் சன்னதி, பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, திருச்சுற்றுமதில்கள், இராஜ கோபுரம், சக்கரத்தீர்த்தம் மடைப் பள்ளி ஆகிய கட்டுமானங்களுக்குக் காரணமாக இருந்தவர் இந்த மன்னரே ஆவார். இதே போல சேதுநாட்டின் வடபகுதியில் உள்ள இன்னொரு வைணவத் தலமான திருக்கோட்டியூர் கோயிலிலும் பல கட்டளைகளை இந்த மன்னர் நிறுவினார். மேலும் கள்ளர் சீமையில் உள்ள திருமெய்யம் தளத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் திருமெய்யம் அழகியாருக்கும் (பெருமாள்) ரெகுநாத அவசரம் போன்ற கட்டளைகளையும் வேறுபல நிலக்கொடைகளையும் வழங்கியுள்ளார்.
இந்த அறக்கொடைகள் அனைத்தும் சேதுபதி மன்னர் சார்ந்துள்ள இருவேறு சமயங்களான சைவம். வைணவம் என்ற இருபிரிவுகளின் கோயில்களாகும் இந்தக் காரணத்தினால் தான் மேலேகண்ட அறக்கொடைகளை இந்த மன்னர் அந்தத் திருக்கோயில்களுக்கு வழங்கினார் என்று கருதினால் அது தவறு என்பதை அவரது வேறு சில அறக்கொடைகள் புலப்படுத்துகின்றன. அப்பொழுது சேதுநாட்டில் மிகச் சிறுபான்மையினராக சமணர்களும், முஸ்லீம்களும் இருந்து வந்தனர். சேது நாட்டின் வடபகுதியாகத் தாழையூர் நாட்டில் அனுமந்தக் குடியில் அமைந்திருந்த சமணர்களது திருக்கோயிலான மழவராயநாதர் கோவிலும், இஸ்லாமியப் புனிதரான செய்யது முகம்மது புகாரி என்பவரது அடக்கவிடமும் திருமலை சேதுபதி மன்னரது அறக்கொடைகளைப் பெற்றுள்ளன என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
அன்ன சத்திரங்கள் அமைத்தல்:
இந்த அறக்கொடைகளைத் தவிர இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்குத் தலயாத்திரையாக வருகின்ற பயணிகளது பயன் பட்டி ற்காகச் சேதுமார்க்கத்தில் ஆங்காங்கு பல அன்னசத்திரங்களை முதன்முறையாக நிறுவினார். சாலை வசதிகளும், போக்குவரத்து சாதனங்களும் இல்லாத அந்தக் காலத்தில் வடக்கே வெகு தொலைவி லிருந்து இராமேஸ்வரம் யாத்திரையாக ஆண்டுதோறும் பல பயணிகள் கால்நடையாகவே இராமேஸ்வரத்திற்கு நடந்து வந்தனர். வடக்கே சோழ நாட்டிலிருந்தும், தெற்கே நாஞ்சில் நாட்டிலிருந்தும், மேற்கே மதுரைச் சீமையில் இருந்துமாக மூன்று பாதைகள் இராமேஸ்வரத்திற்கு வரும் வழியாக அமைந்திருந்தன. இப்பாதைகள் 'சேது மார்க்கம்' என அழைக்கப்பட்டன. இந்தப் பாதைகளில் எட்டு அல்லது 10 கல் தொலைவு இடைவெளியில் ஒரு சத்திரம் வீதம்பல சத்திரங்களை அமைத்து அங்கே ஒவ்வொரு பயணியும் மூன்று நாட்கள் தங்கி, இளைப்பாறி இலவசமாக உணவு பெறுவதற்கும் சிறந்த ஏற்பாடுகளை இந்த மன்னர் செய்தார். இந்த அன்ன சத்திரப் பணிகள் தொய்வு இல்லாமல் தொடருவதற்குச் சேதுநாட்டில் பல ஊர்களை இந்தச் சத்திரங்களுக்குச் சர்வமானியமாக வழங்கி உதவினார். இந்த மன்னரை அடுத்துச் சேதுபதிகளாக முடிசூட்டிக் கொண்டவர்களும் இந்தப் பணியினைத் தொடர்வதற்குத் திருமலை சேதுபதி மன்னரது இந்த ஆக்கப் பணிகள் முன்னோடி முயற்சியாக அமைந்தன என்றால் அது மிகை ஆகாது.
- ↑ 4. கமால் S.M. Dr - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமலை ரெகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், உள்ள, இராமேஸ்வரம், இந்தக், நிலையில், சன்னதி, சீமையில், சேதுபதி, பூஜை, தானம், ஆகிய, மன்னரது