சேதுபதி மன்னர் வரலாறு - திருமலை ரெகுநாத சேதுபதி
அடுத்து கி.பி. 1658ல் திருமலைநாயக்கர் திடீரென நோய்வாய்ப் பட்ட நிலையில் மைசூரிலிருந்து மாபெரும் கன்னடப் படையொன்று மதுரை நோக்கி வருவதாகச் செய்திகள் கிடைத்தன. மதுரையைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில் மூன்றாவது முறையாகக் கன்னடப்படைகள் மதுரை நோக்கி வந்தன. இந்த மோசமான நிலையில் மதுரைப் படைகளுக்குத் தலைமை வகித்துக் கன்னடியர்களை வெற்றி கொள்வது யார்? தமது பாளையக்காரர்களில் வலிமை மிக்க ஒருவரை வடுகரை இந்தப் போரினை நடத்துமாறு பணித்தால். போரில் அவர் வெற்றி பெற்றுத் திரும்பினால் தமக்கு எதிராக மதுரையை ஆள நினைத்தால்...? இந்த வினாக்களுக்கு விடை காண முடியாமல் தத்தளித்த மதுரை மன்னர் சேதுபதி மன்னரை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார். மதுரை மன்னரது பரிதாப நிலைக்கு இரக்கப்பட்ட திருமலை ரெகுநாத சேதுபதி 15,000 மறவர்களுடன் மதுரைக்கு விரைந்தார். மதுரைப் படைகளுக்குத் தலைமையேற்றுச் சென்று கன்னடப் படைகளை அம்மைய நாயக்கனுரை அடுத்த பரந்த வெளியில் கன்னடியரின் பிரம்மாண்டமான படை அணிகளைத்தாக்கி அழித்து வெற்றி கொண்டார்[1]. வெற்றிச் செய்தியினை அறிந்த மதுரை மன்னர் மதுரைக் கோட்டையில் திருமலை ரெகுநாத சேதுபதிக்கு மிகச் சிறந்த வரவேற்பினை வழங்கிப் பரிசுப் பொருள்களையும் அளித்துப் பாராட்டினார். மேலும் சேது நாட்டின் தென்மேற்கே உள்ள திருச்சுழியல், பள்ளி மடம், திருப்புவனம் ஆகிய மதுரை அரசின் பகுதிகளையும் அன்பளிப்பாக வழங்கிச் சிறப்பித்தார். மேலும் ஆண்டுதோறும் புரட்டாசித் திங்களில் மதுரை மாநகரில் திருமலைநாயக்க மன்னர் நடத்தி வந்த நவராத்திரி விழாவினைச் சேது நாட்டிலும் நடத்தி வருமாறு சொன்னதுடன் அந்த விழாவிற்கு மூலமாக அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மனின் பொன்னாலான சிலை ஒன்றினையும் சேதுபதி மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
சேதுநாட்டில் நவராத்திரி விழா
வெற்றி வீரராகத் திரும்பிய திருமலை சேதுபதி மன்னர் அந்த அம்மன் சிலையினை இராமநாதபுரம் கோட்டையில் அரண்மனை வளாகத்தில் பிரதிஷ்டை செய்து அந்த ஆண்டு முதல் நவராத்திரி விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்[2]. இத்தகைய வெற்றிகளினால் புதிய சிந்தனையும், புது வலிமையும் பெற்ற ரெகுநாத சேதுபதிமன்னர் பல அரிய செயல்களைச் செய்வதற்கு முனைந்தார்.
சேதுநாட்டின் எல்லைப் பெருக்கம்
முதலாவதாகச் சேதுபதி மன்னர் உள்ளிட்ட செம்பிநாட்டு மறவர்களது பூர்வீகப் பகுதியான சோழ மண்டலத்தின் வடக்கு. வடகிழக்குப் பகுதியினையும் சேதுநாட்டின் பகுதியாக்கத் திட்டமிட்டார். அதனையடுத்துச் சேதுநாட்டின் வடபகுதி கிழக்குக் கடற்கரை வழியாக அறந்தாங்கி, பட்டுக்கோட்டைச் சீமைகளைக் கடந்து திருவாரூர்ச் சீமை, கள்ளர் சீமை ஆகியவைகளையும் சேதுநாட்டில் இணைத்துச் சேதுநாட்டின் பரப்பை விரிவுபடுத்தினார்.
இவ்விதம் சேதுநாட்டின் எல்லைகளை விரிவு அடையுமாறு செய்த சேது மன்னர் எஞ்சிய தமது காலத்தை ஆன்மீகத்தை வளர்ப்பதிலும் தமது நாட்டு குடிமக்களிடையே நல்லிணக்கமும் சமரச மனப்பான்மையும் வளர்வதை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தினார்.
கோயில் திருப்பணிகள்
இவரது முன்னோரான சடைக்கன் உடையான் சேதுபதி, கூத்தன் சேதுபதி, இரண்டாவது சடைக்கன் சேதுபதி ஆகியோர் சிறப்புக் கவனம் செலுத்தியதைப் போன்று இந்த மன்னரும் இராமேஸ்வரம் கோயில் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டினார். குறிப்பாக அந்தக் கோயிலின் ஏற்றத்திற்கும், தோற்றத்திற்கும் ஏதுவாக அமைந்துள்ள நீண்ட விசாலமான இரண்டாவது பிரகாரத்தினை அமைக்க முடிவு செய்தார். இந்தக் கோயில் மணற்பாங்கான பகுதியில் அமைந்து நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள தீவாக இருப்பதால் பிரகாரத்தின் கட்டுமானத்திற்கான கற்களைத் திருச்சி, மதுரை, நெல்லை சீமைகளின் குன்றுப் பகுதிகளில் இருந்து எவ்விதம் கொண்டு சேர்ப்பது? நீண்ட தொலைவில் இருந்து எவ்விதம் கொண்டு சேர்ப்பது? நீண்ட் தொலைவில் இருந்து பார வண்டிகளில் ஏற்றி எதிர்க்ரையான மண்டபம் தோணித்துறைக்கு கொண்டு வந்து சேர்த்தாலும் அவைகளைக் கடலைக் கடந்து இராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பது எப்படி? இந்த வினாக்களுக்கான விடைகளைப் பல நாட்கள் சிந்தித்த பிறகு சேது மன்னர் கண்டுபிடித்தார். கோயில் திருப்பணிக்குத் தேவையான கற்களைத் தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் இருந்து வெட்டிக்கொண்டு வந்து சேர்ப்பதற்குப் பதிலாக, கல் தச்சர்களையும், ஸ்தபதிகளையும் எதிர்க்கரையில் உள்ள இலங்கை நாட்டின் மலையிலிருந்து வெட்டிச் செதுக்கிக் கொண்டு வருவது என முடிவு செய்து அதற்குத் தேவையான அரசு அனுமதியைக் கண்டியில் உள்ள இலங்கை மன்னரிடமிருந்து பெற்றார். பொதுவாகத் திருப்பணி நடக்கும் கோயில் பகுதிக்குக் கற்பாலங்களைக் கொண்டு வந்து செதுக்கித் தக்க வேலைப்பாடுகளை அதில் செய்து பின்னர் கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவது என்பது அன்றையப் பழக்கமாக இருந்தது. இந்த முறைக்கு மாற்றமாக சேதுபதி மன்னர் திட்டமிட்ட வரைவுபடங்களுடன் ஸ்தபதிகளையும், கல் தச்சர்களையும் திரிகோண மலைக்கு அனுப்பி அங்கேயே தேவையான அளவிலும், அமைப்பிலும், கல்துண்களையும், பொதிகைக் கட்டைகளையும், மூடு பலகைகற்களையும் தயாரித்துப் பெரிய தோணிகளில் இராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து இறக்கு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பணி வேலைகளும். இராமேஸ்வரம் திருக்கோயிலில் தொடர்ந்தது. இவைகளை நேரில் கண்காணித்துத் தக்க உத்தரவுகளை வழங்குவதற்கு ஏற்றவாறு சேது மன்னர் இராமேஸ்வரத்திலேயே தங்குவதற்கும் திட்டமிட்டார். இராமேஸ்வரம் வடக்கு ரத வீதியும், மேற்கு ரத வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு அரண்மனை ஒன்றையும் மன்னரது இருப்பிடமாக அமைத்தார். ஆண்டில் பெரும்பாலான பகுதியை மன்னர் இந்த மாளிகையிலேயே கழித்தார்[3].
- ↑ 1. Sathya Natha Ayyar - History of Madura Nayaks (1928).
- ↑ 2. கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994).
- ↑ 3. இந்த அரண்மனை இன்னும் அங்கு இருந்து வருகிறது. (அங்கே மேல்நிலைப் பள்ளி, கூட்டுறவு வங்கி, அன்னசத்திரம் மற்றும் ஹெலிக்காப்டர் இறங்கும் தளமுமாக இந்தக் கட்டிடம் பயன்பட்டு வருகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமலை ரெகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், சேதுபதி, மதுரை, கொண்டு, சேது, கோயில், வந்து, சேதுநாட்டின், இருந்து, வெற்றி, இராமேஸ்வரம், சேர்ப்பது, தேவையான, நவராத்திரி, திருமலை, தமது, ரெகுநாத, உள்ள, அந்த, செய்து