சேதுபதி மன்னர் வரலாறு - அணிந்துரை
முனைவர்
கோ. விசயவேணு கோபால்
முதுநிலை ஆய்வாளர், கல்வெட்டியல் துறை
பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வகம்
பாண்டிச்சேரி
அணிந்துரை
எளிய மக்கள் தங்களது அயராத உழைப்பினாலும் தந்நலமற்ற தொண்டினாலும் பணிவினாலும் படிப்படியாகப் படைவீரர், படைத்தலைவர் என உயர்ந்து இறுதியில் குறுநிலப் பகுதிகளின் மன்னர்களாகவும் ஆக முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் மறவர் சீமையினர். தமிழகச் சிற்றரசர் மரபினர்களில் இவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். வேளிர், மலையமான்கள், அதியமான்கள், தொண்டைமான்கள், முத்தரையர், இருக்குவேளிர், வானாதிராயர்கள் எனத் தமிழகம் பல சிற்றரசு மரபினர்களைக் கண்டுள்ளது. இந்திய வரலாற்றில் போர்வழியிலன்றி ஆன்மிக நெறியில் நின்று இந்தியா முழுவதிலும் புகழ்படைத்த மரபினர் சேதுபதி மரபினர். பிற்காலத் தமிழகத்தில் குறிப்பாக ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு முந்திய காலகட்டத் தமிழக வரலாற்றில் இவர்களின் பங்கு கொடை ஆகியனபற்றிய விரிவான வரலாறு இன்றும் எழுதப்படவில்லை. குறிப்பாகத் 'தமிழ்ப் புத்தாக்கம்" (Modernization of Tamil) என்ற உயர்ந்த, புதுமையான - இன்றும் மிகத் தேவையான - குறிக்கோள் கோட்பாட்டினை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த முழுமனத்துடன் செயல்பட்ட மரபினர் இவர்கள். இந்தப் பணிபற்றியும் இவர்கள் காலத்தே தமிழ்ப் பண்பாட்டில் நிகழ்ந்த வடநெறியாக்கம் (Sanskritization) மேலைமரபாக்கம் (Westernization) பெருந்தாக்கங்கள் பற்றியும் விரிவாக எழுத இடமுண்டு. இத்தகைய சூழலில் இம்மரபினரின் தொடர்ச்சியான வரலாற்றினையேனும் எழுதவேண்டும் என்ற முனைப்பில் எனது அருமை நண்பர் டாக்டர் எஸ்.எம். கமால் அவர்கள் இச்சிறுநூலைப் படைத்துள்ளார்கள். ஏற்கனவே பாஸ்கர சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாண்டித்துரைத் தேவர் ஆகியோரைச் சிறுசிறு நூல்களாகச் சேதுபதி மன்னர் சிலரைப் பற்றி எழுதிய இவர் இந்நூலை எழுதுவதற்கு முழுத் தகுதியுடையவர். இந்நூலில் இவர் குறிப்பிட்டுள்ள படி இம்மன்னர்களது வரலாற்றினைத் தெளிவாகவும், கோவையாகவும், விளக்கமாகவும் எழுதத் துணைபுரியக் கூடிய முதன்மை ஆதாரங்கள் (Primary Sources) பல கவனக் குறைவாலும், புறக்கணிப்பினாலும், வரலாற்றுணர்வின்மையாலும் மறைந்து போய் விட்டன. எனினும் தாம் அரிதின் முயன்று தொகுத்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், செவிவழிச் செய்திகள், தாமே நேரில் கண்டவை ஆகியவற்றைக் கொண்டு இச்சிறுநூலைச் சிறப்பாக எழுதியுள்ளார்.
இந்நூலைச் சுற்றுலாப் பயணிகட்கான கையேடு என எளிமையாகவும் இல்லாமல் உயர் ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய ஆய்வேடு போலக் கடினமாகவுமில்லாமல் நடுவணதாகப் படைத்துள்ளார். சான்றுகளைக் காட்டி எழுதும் உத்தியினை ஆங்காங்கே ஒல்லுமிட மெல்லாம் பின்பற்றியுள்ளார். சேதுபதி மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத் திற்காற்றியுள்ள பணி, அவர்தம் ஆன்மீகப் பணி, தமிழ்மொழிப் பணி என்ற மூன்று இலக்குகளைக் கருத்திற்கொண்டு ஆசிரியர் நூலைப் படைத்துள்ளார். தமக்குக் கிடைத்த சான்றுகள், ஆவணங்கள், முதலானவற்றைப் பட்டியலிட்டு நூலின் பின்னிணைப்புகளாகத் தமது நூலை முழுமைப்படுத்தியுள்ளார்.
கண்பார்வை மங்கிய நிலை, உடல் நலக்குறைவு முதலான தடைகள் இருந்தபோதும் தளராது அரிதின் முயன்று இந்நூலைப் படைத்துள்ளார். இவரது வாழ்வும் பணியும் இன்றைய இளைஞர்கட்கு வழிகாட்டிகளாக விளங்குவனவாகும். நூல் அளவிற் சிறிதாயினும் கிடைத்தவற்றைக் கொண்டு சரளமான நடையில் சொல்லப்பட்டிருக்கும் விதத்தால் நம் பாராட்டுதலுக்குரியதாகிறது. சேதுநாட்டு வரலாற்றை அறியத் துணைபுரியும் நல்ல தொடக்க நூல் இது. தமிழ் மக்கள் இந்நூலை வாங்கிப் படித்துப் பயன் கொள்வார்களாக.
ஆசிரியர் நீடு வாழ்ந்து மேலும் பல நல்ல நூல்களைப் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கோ. விசயவேணு கோபால்
புதுச்சேரி
20.11.03
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணிந்துரை - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி, படைத்துள்ளார், மரபினர், இவர்கள்