புறநானூறு - சங்க காலம்
புறப்பொருள் பற்றிய 400 அகவற்பாக்களைக் கொண்டது
புறநானூறு. இதனைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும்
யாவர்
எனத் தெரியவில்லை. 267, 268 ஆகிய இரு செய்யுட்களும்
அழிந்தன. 266 ஆம் செய்யுட்குப்
பின்னர் வரும் செய்யுள்களில்
சிதைவுகள் உள்ளன. இதற்கு வணக்கச் செய்யுள் பாடியவர் பாரதம்
பாடிய பெருந்தேவனார். அது சிவ வணக்கமாகும். இதற்கு 266
செய்யுட்கள் வரையில் பழைய உரை
உண்டு. இதனை இயற்றியோர்
157 பேர் என்பர். பல பாடல்களை இயற்றியோர் பெயர்
தெரியவில்லை.
(16 செய்யுட்கள்) இதனை நமக்குத் தேடித் தந்தவர்
தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத
ஐயராவார்.
தமிழரின் பொற்கால நாகரிகத்தை நாம் அறிந்து போற்றத் துணை நிற்கும் அரும்பெரும் பெட்டகம் புறநானூறு. தமிழகத்தின் அரசியல், சமூகநிலை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலைச்சிறப்பு, வானியல் முதலிய அறிவுத் துறைகளில் பெற்றிருந்த வளர்ச்சி ஆகியவற்றை இந்நூல் நிழற்படம் போல் தெரிவிக்க வல்லதாகும்.
சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடைய மூவேந்தர்கள், பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி என்னும் கடையெழு வள்ளல்கள் முதலிய பலருடைய போர் வெற்றிகள், கொடைவண்மை ஆகியவற்றை இந்நூல் விளக்கமாகத் தருகின்றது. மன்னர் சிலர்க்கும், புலவர் பெருமக்கட்கும் இடையே நிலவிய வியத்தகு நட்புறவும், புலவர்களின் தன்மான வாழ்வும் உலகம் வியக்கும் தன்மை உடையனவாகும்.
கணவனை இழந்த பெண்டிர் தம் கூந்தலையும், வளையலையும், பிற அணிகளையும் களைதல், உடன்கட்டை ஏறி உயிர்விடல், இறந்தாரைத் தாழியில் இட்டுப் புதைத்தல், தீ மூட்டி எரித்தல், வீரர்கட்கு நடுகல் நட்டு வழிபடல், நோய் கொண்டு இறந்த அரச குடும்பத்தார் உடலை வாளால் கீறிப் புதைத்தல், கணவனை இழந்த பெண்டிர் கைம்மை நோன்பு மேற்கொள்ளுதல் முதலான தமிழர் பண்பாட்டு நிலைகளை இந்நூல் காட்டி நிற்கின்றது.
தமிழர் கையாண்ட இசைக்கருவிகளைப்பற்றியும், இருபத்தொரு இசைத் துறைகளை பற்றியும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழர் வானியல் அறிவில் மேம்பட்டிருந்தனர் என்பது பற்றியும் இந்நூலிலிருந்து அறியலாம்.
மானம் அழிய வந்த பொழுது, வடக்கு நோக்கியிருந்து இறத்தலையும் (219) பகைவர்க்கு முன்னறிவுப்புச் செய்து படையெடுத்தலும் (9) அக்கால மரபுகளாம்.
உலகம் உள்ள அளவும் நிலைத்திருக்கத்தக்க உயர்ந்த அறநெறிகளின் அரங்கமாக இந்நூல் விளங்குகின்றது.
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (18) |
செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே (189) |
எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே (187) |
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (186) |
யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா (192) |
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் (195) |
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (55) |
என்பவை அவற்றுள் சிலவாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - Purananuru - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புறநானூறு, இந்நூல், காலம், சங்க, தகவல்கள், உலகம், தமிழ்நாட்டுத், தமிழர், தமிழ், நூல்கள், இலக்கிய, ஆகியவற்றை, கணவனை, என்னும், புதைத்தல், செய்தல், | , பற்றியும், முதலிய, பெண்டிர், இழந்த, இதற்கு, tamil, literatures, period, sangam, purananuru, list, tamilnadu, இதனை, இயற்றியோர், செய்யுட்கள், தெரியவில்லை, information, வானியல்