பட்டினப்பாலை - சங்க காலம்
பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது இப்பெயரின் பொருள். இங்குப் பட்டினம் என்பது புகார் நகர். 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர். இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான். இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும் இவரே.
பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில் பாடப்பட்டது இது. அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல் என்று கூறும்.
இதில் வரும் கிளவித் தலைவன் (தலைவியின் கணவன்), பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் பெருமைகளை யெல்லாம் விவரித்து, அவனால் ஆளப்படும் புகார் நகரின் பல்வேறு சிறப்புகளையும் பலபடப் பாராட்டி, அத்தகைய பட்டினத்தினையே பெறுவதாக இருப்பினும் தன் மனைவியைப் பிரிந்து செல்ல மனமில்லாது செலவைக் கைவிடுவான்.
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழியே நெஞ்சே |
என்று தன் நெஞ்சிற்குக் கூறுவான்; தன் செயலுக்குக் காரணம் கூறுவான்.
திருமாவளவன் தன் பகைவரை நோக்கி ஓச்சிய வேலைவிடத் தான் செல்ல வேண்டிய பாலை வழி கொடுமையானது என்றும், தன் காதலியின் மெல்லிய பெரிய தோள்கள், சோழனுடைய செங்கோலினும் இனிமையானது என்றும் கூறுவான்.
301 அடிகள் கொண்ட இப்பாட்டில் 217 அடிகள் பட்டினச் சிறப்பையே பேசுகின்றன. பண்டைத் தமிழரின் வணிகச் சிறப்பையும், கலைச்சிறப்பையும், சமய வழிபாட்டுச் சிறப்பையும் பிறவற்றையும் இப்பாட்டு உலகறியச் செய்கிறது. துறைமுகத்தில் நடக்கும் ஏற்றுமதியும் இறக்குமதியும், அங்குச் சுங்க அதிகாரிகள் புலிச் சின்னம் பொறித்தலும், சுங்கம் பெறுதலும், அறச்சாலைகளில் உணவளிக்கும் சிறப்பும், வணிகர்களின் நடுவுநிலைப் பண்பும், அவர்களுடைய அறப் பண்பும் பாராட்டப்படுகின்றன.
திருமாவளவனின் நாட்டில் பல மொழியாளரும் வந்து குழுமியிருந்தனர் என்றும் அவர்கள் பலரும் ஒற்றுமையாக இனிது வாழ்ந்தனர் என்றும் புலவர் கூறுவார். திருமாவளவன் பகைவர் நாட்டில் செய்த அழிவுச் செயல்களையும், உறையூரை விரிவு செய்த தன்மையையும் புலவர் பாராட்டுவார். காடு கொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கியதாகப் பாராட்டுவார். சுருங்கச் சொன்னால், இந்நூல் தமிழக வரலாற்றின் பெட்டகம் ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டினப்பாலை - Pattinappalai - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - என்றும், பட்டினப்பாலை, காலம், சங்க, கூறுவான், தமிழ்நாட்டுத், தகவல்கள், தலைவன், இலக்கிய, செல்ல, திருமாவளவன், அடிகள், தமிழ், நூல்கள், மனைவியைப், நாட்டில், பாராட்டுவார், | , செய்த, புலவர், பண்பும், சிறப்பையும், பட்டினம், tamil, literatures, period, sangam, pattinappalai, list, tamilnadu, கொண்ட, இதில், புகார், என்பது, information, இதனை