நெடுநல்வாடை - சங்க காலம்
இது 188 அடிகள் கொண்ட அகவல். இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவரும் திருமுருகாற்றுப்படை ஆசிரியரும் வெவ்வேறு புலவர்கள் என்பர். இருவரும் ஒருவரே என்பாரும் உளர்.
காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில் இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள். காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர், தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.
பிரிவுத் துயரால் வருந்தும் காதலிக்கு வாடைக் காற்று நெடியதாகத் தோன்றுகிறது. அதாவது, ஒரு பொழுது ஓர் ஊழி போல் காண்கின்றது. ஆனால் பாசறையில் இருக்கும் தலைவன் புண்பட்ட வீரர்க்கும், யானைகளுக்கும் குதிரைகளுக்கும் அன்பு காட்டி ஆறுதல் செய்கிறான். காமச் சிந்தனையற்றுக் கடமையில் கருத்தூன்றுகிறான். இதனால் வாடை அவனுக்கு நல்லதாயிற்று. பாட்டின் பெயர்ப் பொருத்தம் இதனால் விளங்கும்.
இப்பாட்டில் இடம்பெறும் கூதிர்கால வருணனையொன்றே புலவரின் பெருமையை நிலைநாட்ட வல்லது. இவ்வருணனை 70 அடிகளால் அமைகிறது. பண்டைத் தமிழர் மனையைச் சதுரமாகப் பிரித்து வீடு கட்டும் கலையில் தேர்ந்திருந்தமை இப்பாட்டால் விளங்கும். கட்டிடச் சிற்பியை நூலறிபுலவர் என்கின்றார் புலவர்.
அரசியின் கட்டில் வனப்பும், அரண்மனை அமைப்பும், பாசறையின் இயல்பும்; அரசன் வீரன் ஒருவன் துணையுடன் இரவுப் பொழுதிலும் வீரரையும் விலங்குகளையும் பார்வையிடும் காட்சியும் நிழற்படம் போல் இனிமை செய்கின்றன.
பாவை விளக்குகளின் அகலில் நெய்யூற்றிப் பெரிய திரிகளில் தீக்கொளுவுதல், நிலா முற்றத்தில் இருந்து மழைநீர் குழாய்களின் மூலம் வழிதல், குன்றத்தினைக் குடைந்தமைத்தது போல் அமைந்த அரண்மனை வாயில், வென்றெடுத்த கொடியோடு யானை புகுந்து செல்லும் அளவில் இருந்த அதன் உயர்ச்சி ஆகியவற்றைப் புலவர் திறம்படக் காட்டியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெடுநல்வாடை - Nedunalvaadai - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நெடுநல்வாடை, சங்க, காலம், நூல்கள், போல், தகவல்கள், இலக்கிய, தமிழ்நாட்டுத், தமிழ், nedunalvaadai, தலைவன், இதனால், விளங்கும், | , அரண்மனை, புலவர், துயரால், பாசறையில், list, literatures, tamil, period, sangam, information, tamilnadu, பிரிவுத்