கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்
“மண்ணாகப் போகும் இந்த வாழ்க்கை எனக்குப் பெரிது இல்லை, என்று கூறிச் சூலத்தைக் கையில் ஏந்தினான்.
“என்னைப்பொறுப்பாய்” என்று வேண்டினான்.
“வென்று இங்கே வருவேன் என்று சொல்வதற்கு இல்லை; விதி என் பிடர் பிடித்து உந்துகிறது; நான் இறப்பது உறுதி; அதுதான் என் இறுதி; அப்படி இறந்தால் நீ சிறந்து கடமை ஒன்று ஆற்ற வேண்டும்; சீதையை விட்டுவிடு; என் இறப்பு உனக்கு ஒர் அபாய அறிவிப்பு; என்னை அழிப்பவர் உன்னை ஒழிப்பது உறுதி”.
“நான் இறக்கும் இழப்புக்கு அழவில்லை; அதற்காகக் கவலைப்படவில்லை; உயிரையும் இழக்கத் துணிந்தேன்; ஆனால், ஒன்றே ஒன்று; உன் முகத்தை நான் மறுபடியும் கானும் பேறு எனக்கு வாய்க்காது”.
“அற்றதால் முகத்தினில் விழித்தல்” என்று கூறிக் கும்பகருணன் விடை பெற்றுச் சென்றான்.
போர்க்களம் நோக்கிச் சென்ற அவனோடு பெரும்படை ஒன்றும் துணையாய்ச் சென்றது.
உருவத்தால் பெரிய கும்பகருணன் வடிவம் இராமனுக்குப் பெரு வியப்பைத் தந்தது.
“உடல் வளர்ப்புப் போட்டியில் யாரும் இவனை வெல்லமுடியாது” என்று முடிவு செய்தான்.
“மலையா? மாமிசப் பிண்டமா?” என்று கேட்டான்.
“எனக்கு முன்னவன், இராவணனுக்குப் பின்னவன்; அறச்சிந்தையன்; அறிவுச் செல்வன்; கடமை வீரன்”
“களம்நோக்கி இங்கு இவன் வந்தது உள் உவந்து மேற்கொண்ட செயல் அன்று; கடமை; அதன் உடைமையாகிவிட்டான்; பலிபீடம் தேடி வந்த வலியோன்” என்றான் வீடணன்.
அமைச்சனாய் இருந்து அறிவுரை கூறும் சுக்கிரீவன், “அவனை நல்லவன் என்கிறாய்; வல்லமை அவனைப் போருக்கு இழுத்து வந்து இருக்கிறது; தடுத்து நிறுத்து; முடிந்தால் நம்மோடு அவனைச் சேர்த்துக் கொள்ளலாம்” என்றான்.
“வீடணன் இவனை நேசிக்கிறான்; பாசம் காட்டுகிறான்; இவனை வாழவிட்டால் வீடணனும் மகிழ்வான்” என்று தொடர்ந்தான்.
“சென்று இவனை அழைத்துவரத் தானே செல்கை நன்று” என்று வீடணன் விளம்பினான்.
கடற்பெரும் வானர சேனையைக் கடந்து தன் அரக்கர் பெரும்படையை வீடணன் சார்ந்தான்; உடல் பெரும் தோற்றம் உடைய கும்பகருணன் கால்களில் விழுந்து வணங்சினான்.
அவனை எழுப்பி, உச்சிமோந்து, உயிர் மூழ்க அனைத்துக் கொண்டு, ‘நீ ஒருவனாவது உயிர், தப்பிப் பிழைத்தாய்’ என்று மகிழ்வு கொண்டிருந்தேன்”.
“நீ அபயம் பெற்றாய்; அபாயம் நீங்கினாய்; உபயலோகத்தில் உள்ள சிறப்புகளை எல்லாம் பெற்றாய்; நீ கவிஞன், கற்பனை மிக்கவன்; நிலைத்த வாழ்வினன்; யான் அற்ப ஆயுள் உடையவன்; அமுதம் உண்ணச் சென்ற நீ மீண்டும் கைப்பினை நாடியது ஏன்? நஞ்சினை நயந்து வந்தது ஏன்? வாழப் பிறந்த நீ, ஏன் சாக இங்கு வந்தாய்”?
“அரக்கர் குலம் அழிந்தாலும் நம் பெயர் சொல்ல நீ ஒருவன் இருக்கின்றாய், என்று மகிழ்ந்திருதேன்; உயிர் உனக்கு நறுந்தேன்; இராமனைத் தவிர இப் பிறப்பில் வேறு மருந்தேன்? இதனை அறிந்தும் நீ இங்கு வந்தது ஏன்?” என்று கேட்டான்.
“நீ உயிர் தப்பிப் பிழைக்க வில்லை என்றால், இப்போரில் இறக்கும் அரக்கர்க்கு எள்ளும் நீரும் தந்து ஈமக்கடன் செய்யும் வாரிசினர் யார் இருக்கின்றனர்? நீ இங்கு வருவது இன்று அன்று; இழிபிறப்பினராய அரக்கர் எல்லாரும் மேல் உலகம் அடைந்த பிறகே ஆட்சிக்கு ஆள் தேவைப்படும்; உன் மீட்சியை வைத்துக்கொள்” என்றான் கும்பகருணன்.
“சொல்ல எந்தச் செய்தி உள்ளது?” என்றான் கும்பகருணன்.
“வெல்ல வந்த போரில், சொல்ல வேண்டுவது யாது?””
“இகபரசுகங்கள் இரண்டும் உனக்குக் காத்து இருக்கின்றன; எனக்கு இராமன் தந்த ஆட்சியை உன்மலரடி களில் வைத்து, நான், நீ ஏவிய பணி செய்யக் காத்துக் கிடக்கின்றேன்; எனக்குத் தந்த ஆட்சிச் செல்வத்தை உனக்குத் தந்துவிட்டேன்; இது இகத்தில் கிடைக்கும் சுகம்.”
“பரத்தில் அடையும் பதமும் உள்ளது; உருளுறு சகட வாழ்க்கை இதனை ஒழித்து, இராமன் வீடுபேறு அருளுவான்; இதைவிட வேறு பேறுகள் என்ன கூற முடியும்? வா வந்து இராமனுடன் சேர்ந்துவிடு” என்றான்; அதற்கு
“நீர்க்கோல வாழ்வை நச்சிநெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்;
தார்க்கோல மேனிமைந்த என் துயர் தவிர்த்தி யாயின்
கார்க்கோல மேனியாயனைக் கூடுதி கடிதிள்”
என்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - என்றான், கும்பகருணன், உயிர், இங்கு, இவனை, கடமை, வீடணன், நான், வந்தது