கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்
“மலைபோன்ற அவன் உடலைக்கண்டு பகைவர் நிலைகுலைந்து ஒடிவிடுவர்” என்றான்; அலைபோல் வந்த புதிய கருத்தை இராவணன் மலைபோல் இறுகப் பற்றிக் கொண்டான்.
கிங்கரர் நால்வரைக் கூவிக் கும்பகருணனை அழைத்து வருமாறு ஏவினான்; அவர்களும் மல்லர்களும் இரும்புத் தடிகளை ஏந்தி.
“உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்கு கின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்கு போல வில்பி டித்த கால தூதர் கையிலே
உறங்கு வாய்உறங்கு வாய்இனிக் கிடந்து உறங்குவாய்”
என்று சொல்லி அவனை இடித்து எழுப்பினர்.
உறக்கம் நீங்கிய நிலையில் செறுக்குமொழி பேசும் இராவணன்முன் கும்பகருணன் வந்து நின்றான்; நின்றகுன்று, நடந்து வரும் மலையைத் தழுவுவது போல இருவரும் தழுவிக் கொண்டனர்; அன்பின் பிணைப்பு அவர்களை அணைத்தது.
சொற்கள் வேறு இடை புகாமல் கட்டளை மட்டும் கால் கொண்டது.
“வானரச் சேனையும் மானிடர் இருவரும் நகரைச் சுற்றினார்” என்றான் இராவணன்.
“ஏன்?” என்று அவன் கேள்வி எழுப்பவில்லை.
“கொற்றமும் உற்றனர்” என்று முடித்தான்.
“நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற வினாவை அவன் எழுப்பவில்லை; இராவணனும் காத்திருக்க வில்லை.
“அவர் இன்னுயிரை அழித்து அவர்களைப் போனகம் செய்” என்றான்.
தூக்கத்தின் இனிமையை அப்பொழுதுதான் பதின்மடங்காக உணர்ந்தான்; பார்க்கத் தகாதவற்றைப் பார்க்கத் தேவை இல்லை; கேட்கத் தகாவதற்றைக் கேட்கத் தேவை இல்லை.
“சீதை சிறைப்பட்டாள்; அவள் இன்னும் விடுதலை பெறவில்லையோ?” என்றான்.
“மூண்டதோ பெரும்போர்?” என்று அதிர்ச்சியோடு கூறினான்.
“சீதையை இன்னும் விடுதலை செய்யவில்லை” என்பது அவனுக்கு வருத்தத்தைக் தந்தது.
‘விளைவு புகழுக்கு இகழ்வு; நாட்டுக்கு அழிவு’ என்ற முடிவுக்கு வந்தான்; இரத்தினச் சுருக்கமாய்த் தன் உணர்வையும் சிந்தனையும் வெளிப்படுத்தினான்.
“சீதையை திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை இன்னுமா விடவில்லை? இது விதியின் செயல்; ஐயா, இந்த உலகத்தை அடியோடு பெயர்க்கலாம்; அதற்கு ஒரு எல்லையையும் அமைக்கலாம்; சீதையைப் புல்லலாம் என்பதும் இராமனை வெல்லலாம் என்பதும் நடவாத செயல்கள்” என்று கூறினான்.
“உன் மையலுக்குக் காரணமான தையலை விட்டுவிடு; இராமன் சரணம் தாழ்ந்து மன்னிப்புப் பெறுக; நின் தம்பியொடு அளவளாவுதல் பிழைக்கும் வழி; அவள் உன் உயிரோடு ஒன்றிவிட்டிருக்கலாம்; கற்பு, அறம் இவை அற்பம் என்று கருதுகிறாயா? அது உன் விருப்பம்; எதிலும் ஒரு செயல்திறன் வேண்டும்; அணி அணியாய்ப் படைகளை அனுப்பி, அவை அழிவைக் கண்டு அழுவது ஏன்? அது போர்த்திறனும் அன்று; நம் வலிமையை எல்லாம் ஒருங்குதிரட்டிப் போர் செய்வதே தழைக்கும் வழி”.
“இரண்டில் ஒன்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்” என்றான்.
“அறம் ஆற்றல் உடையது; தனி ஒருவனால் உலக நெறியை மாற்றமுடியாது; உனக்காக நீதிகளைத் திருத்தம் செய்ய முடியாது; நீதான் திருந்தி வாழ வேண்டும்” என்றான்.
“நீ அறிவுடைய அமைச்சன் என்பதால் உன்னை அழைக்கவில்லை; நன்றியுடைய வீரன் என்பதால் அழைத்தேன்; ஆனால் நீ போருக்குப் போகப் புலம்புகிறாய்; நீ மட்டும் உறங்கவில்லை; உன் வீரமும் உறங்கி விட்டது போலும்!” என்று கூறினான் இராவணன்.
“இனி நீ போருக்குப் போகவேண்டா, பொறுமை யைக் கடைப்பிடி, குடி, ஊன், உறக்கம்; இவற்றுக்குத் தான் நீ தகுதி, போர் உனக்கு மிகுதி.”
“மானிடர் இருவரை வணங்கு, கூனுடைக் குரங்கைக் கும்பிட்டு வாழ்க; வீடணன் வழி காட்டுவான்; சோற்றுப் பிண்டங்கள் நீங்கள்” என்றான்.
“தருக என் தேர்; எழுக என்படைகள்; நிகழ்க போர்; கூற்றமும் வானும் மண்ணும் அந்தச் சிறுவர்க்குத் துணையாக நிற்கட்டும்” என்று தொடர்ந்தான்.
“அச்சம் தவிர்; ஆண்மை இகழேல்; இவை அமுத வாக்குகள்; சென்று வருகிறேன்” என்றான் இராவணன்.
“அண்ணா!” என்று அலறினாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - என்றான், இராவணன், போர், கூறினான், அவன்