கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்
“வாலி ஆட்சிக்குச் சுக்கிரீவன் வேலிபோட்டுக் கொண்டான்; அதனை நீ கோலினால் உனக்கு வாங்கித் தருகிறேன்” என்றான். “சிங்கம், நாய் தரக் கொள்ளுமோ நல்லரசு? நீ தரும் ஆட்சியை நேர் என்று நான் கொள்ளேன்; நான் ஆட்சிக்கு வரவில்லை; இராமன் இல்லறமாட்சிக்கு வழிகோலவே வந்தேன்” என்றான்.
“சீதையைச் சிறைவிடு செய்; அக்கோதையை இராமனிடம் சேர்த்துவிடு; தையலை விட்டு அவன் சரணம் தாழ்க”. “இராமன் தாரத்தை விடு; அன்றிப் போர்க் களத்தில் உன் வீரத்தைக் காட்டு; ஒரம் கட்டி ஒதுங்கி நில்லாதே” என்றான்.
ஒர்ந்து பார்த்து முடிவைத் தேர்ந்து சொல்வதற்கு மாறாய் “அவனைப் பற்றிக் கொணர்க” என்று ஆணை இட்டான்; அவன் வீரர் ஏவல் கேட்டுப் பாய்தற்கு முன், அவன் காவல் நீங்கிக் காற்றின் வந்து காகுத்தனை வணங்கி நின்றான்.
முதற்போர்
அணிவகுத்துறப் படைகள் தம் பணியைச் செய்யத் தொடங்கின; பார்வேத்தர் இருவரும் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர்; வெட்டி மடியும் போரிலும் ஓர் வியப்பினைக் காண முடிந்தது; இராமன் அம்பு இராவணன் மணிமுடியைத் தட்டிப் பறித்ததுத் துார எறிந்தது; அது கடலுள் சென்று விழுந்தது; தொடை நடுங்கிய பகைப் படை வீரர் இடம் தெரியாமல் மறைந்தனர்; சிதறி ஓடினர்; பக்கத் துணையின்றி, இராமகாளைமுன் தனித்துப் போராடிக் களைத்து இராவணன் தான் வாளும் இழந்தான்; வாழ்நாள் இழக்கும் நிலையையும் அடைந்தான். படைக் கருவிகள் பட்டொழிந்தன. குறைக் காற்றுமுன் அகப்பட்ட மெல்லிய பூளைமலர் போல் இராவணன் படைகள் கெட்டொழிந்தன.
நிராயுத பாணியைத் தொட இராமன் அம்புகள் கூசின. ஒய்வு எடுத்துக் கொண்டு விரும்பும்போது ஆயுதம் தாங்கி வர “இன்று போய்ப் போர்க்கு நாளைவா” என்று கூறினான் மறத்திலும் அறம் காட்டிய இராமன். அவனுக்கு வாய்ப்பு அளித்து இராமன் வாய்ச் சொல் பேசவில்லை; அவன் வீரம் பேசியது.
இராமன் அரக்கன் அல்லன், ஒரு மானுடன் எப்படி இருப்பான் என்பதை அறிய இராவணனுக்கு ஒர் வாய்ப்புக் கிடைத்தது.
“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வரமும் களத்தே போட்டு வெறுங்கையோடுஇலங்கை புக்கான்”
இராமனை எள்ளி நகையாடியவன் இன்று அவன் வீரத்தையும் பெருமையையும் உணரத் தொடங்கினான்; தோல்வியையே காணாத அவன், மண்ணைக் கவ்வியது அவனுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்; உலகம் சிரிக்கும்; உண்மைதான். அதையும் அவன் பொருட் படுத்தவில்லை. தான் அடைய விரும்பிய சானகி நகுவாளே என்ற எண்ணம் தான் அவனைத் தலைகுனியச் செய்தது.
“வான் நகும் மண்ணும் எல்லாம் தாம் நகும்; நெடுவயிரத் தோளான்
தான்நகும் பகைவர் எல்லாம் நகுவர்என்று அதற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்இயல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பு கின்றான்’
சோர்ந்தவன் சோர்ந்தவன்தான், அவன் பாட்டன் மாலியவான் அருகில் வந்தான்; அவனுக்கு ஆறுதல் கூறினான்.
அவனிடம் இராவணன் தன் குலத்துக்கும் தனக்கும் வந்த பழியும் இழிவும் பற்றி மனம் அழிந்து கூறினான்; களத்தில் சந்தித்த இராமன் வீரத்தை ஒரு புராணமாய்ப் பாடினான்; “சீதை இராமனது பேராற்றலை. நேரில் காணும் வாய்ப்பைச் சரியாகப் பெறவில்லை; அவள் மட்டும் இதைப் பார்த்திருந்தால், காமனையும் என்னையும் நாயினும் இழிந்தவராகத் தான் கருதுவாள்; இராமன் இராமன்தான்; அவனுக்கு, நிகர் யாரையும் கூறமுடியாது; நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்றான்; குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட்டது அவனுக்கு ஒரு பெருமை.
பாட்டன், எரிகிற கொள்ளியை ஏறவிடும் வகையில் அறிவுரை கூறினான்; பகைக்குத் ‘துபம் போட்டான்’ என்று கூறமுடியும்.
“சீதையை விட்டுவிடலாம்; அப்பொழுதும் இழந்த புகழ் திரும்பப் போவது இல்லை; வெற்றி தோல்வி மாறி வரும். தப்பித் தவறி இராமன் வெற்றி பெற்றால் சீதை உன் கையைவிட்டுப் போய்விடுவாள்; சீதையையும் விடாதே! போரையும் நிறுத்தாதே”.
“மேலும் சீதையை அனுப்பிவிட்டால் அவளை விட்டு விட்டு, உன்னால் உயிர்வாழ முடியாது; அதனால், சமாதானம் உனக்கு எந்த நன்மையும் தரப்போவது இல்லை; போரில் உயிர்விட்டாலும் உயர் புகழ் வந்து சேரும்; உன் வலிமை உனக்கே தெரியாமல் இருக்கிறாய்” என்றான்.
அடுத்து மகோதரன் என்ற படைத்தலைவன் அவனுக்குச் செயல்படும் வகை குறித்துக் கூறினான்.
“ஊனைத் தின்று உடம்பைப் பருக்க வைத்திருக்கிறான் நம் கும்பகருணன்; அவன் ஒருவன்போதுமே அத்தனை பேரையும் வானுக்கு அனுப்ப”.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், இராமன், என்றான், கூறினான், அவனுக்கு, தான், இராவணன், களத்தில், விட்டு