கம்பராமாயணம் (உரைநடை) - யுத்தகாண்டம்
“அறம் நோக்கி அவளை விட்டுவிடுக என்றான்; நான் மீண்டும் போர்களம் செல்லவில்லையேல், மறம் நோக்கி உலகம் என்னைப் பழிக்கும்.” என்று கூறி, அவன்தன் முடிவை வீரத்தில் எழுதி வைத்து, வேறுவழி இல்லாமல் போர்க்களம் புகுந்தான்.
இந்திரசித்து, மற்றொரு கும்பகருணன் ஆகிப் போர்க்களத்தில் இலக்குவன் அம்புக்கு இரையானான்; அவன் தலையை அறுத்துத் தன்தமையன் இராமன் திருவடிகளில் காணிக்கையாய் வைத்தான் இலக்குவன். இந்திரசித்தன் தறுகண்மை படச் செயல்பட்ட ‘மாவீரன்’ என்ற புகழை நிலைநாட்டினான்; மறவர் வரிசையில் இந்திரசித்து ஒருவனாய் வைக்கப்பட்டான்.
வாய்விட்டு அழுவதற்கு மண்டோதரிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது; சேர்த்து வைத்த துயரமெல்லாம் ஒப்பாரி வடிவம் பெற்றன. “ஒப்பு யாரும் இல்லாத அந்தச் சீதையால்தான் இந்தக் கதி வந்தது” என்று அந்த ஒப்பாரி சொல்லாமல் சொல்லியது; அவள் சொற்கள் ஈட்டிபோல் இராவணன் நெஞ்சில் பாய்ந்தன; அங்கே மறைந்திருந்த வஞ்சிக்கொடி நினைவில் அவை தைத்தன.
எஞ்சி அவளைக் கொல்ல வாளோடு புறப்பட்ட இராவணனை மகோதரன் தடுத்தான்; “கொட்டிய பாலை எடுக்க முடியாது; வெட்டிய சீதையைத் திரும்பப் பெறமுடியாது, ஒருவேளை போரில் நீ வெற்றி கண்டால் வெறுமை யைத்தான் காண்பாய்; கண்கெட்டபின் கதிரவனை வணங்க முடியாது; சித்திரத்தைச் சிதைத்து விட்டால் வெற்றுச் சுவர்தான் எஞ்சி நிற்கும்” என்று கூறிச் சாம்பல் படிந்த நெருப்பை ஊதிக் கனலச் செய்தான்; ஆசை அவனைத் தடுத்து நிறுத்தியது.
சீதையை அடையவில்லை; அதனால் வந்தது வெறுப்பு: மகனை இழந்தான்; அதனால் நேர்ந்தது பரிதவிப்பு; பகைவன் என்பதால் இராமன்பால் எழுந்தது காழ்ப்பு; அனைத்தும் ஒன்று சேர்ந்து இராவணனை மறுபடியும் போர்க்களத்தில் கொண்டுவந்து நிறுத்தின.
மூலப்படை முழுவதும் நிலைகெட்டு நிருமூலமாகி விட்டன; வானரரைக் களப்பலி இடுதற்கு மண்டோதரி மற்றொரு மகனைப் பெற்றுத்தரவில்லை; கடமை வீரன் கும்பகருணன் மறுபடியும் பிறக்கப் போவதில்லை; இனி யாரை நம்பி இராவணன் வாழ முடியும்?
வீணை வித்தகன்; மத யானைகளை எதிர்த்தவன்; வேதம் கற்றவன்; சிவனை வணங்கிச் சீர்மைகள் பெற்றவன்; மூவர்களை நடுங்க வைத்தவன்; தேவர்களை ஏவல் கொண்டவன்; களம் பல கண்டவன்; கார் வண்ணனைக் கடும்போரில் நேருக்குநேர் சந்தித்தான்.
இராமன் கூரிய அம்புகள் கம்பன் சொற்களைப் போல, இராவணன் மார்பில் ஆழப்பதிந்தன; தேரும் கொடியும் உடன்கட்டை ஏறின; தோல்வி, முகவரி தேடி முன்வந்து நின்றது; அவதாரப் பணி நிறைவேறிற்று; அரக்கரை அழித்து, அறத்தை நிலை நாட்டினான் இராமன்.
அறம் வென்றது; பாவம் தோற்றது.
இறுதி அவலம்
இராவணன் பரு உடல், பார்மீது கிடந்தது; அவன் ஆருயிர் அனைய மனைவி மண்டோதரி, அவன் உடல்மீது விழுந்து படிந்து, புரண்டு அழுதாள்.
“எள் இருக்கும் இடமும் இன்றிச் சீதையைக் கரந்த காதல் உள்ளிருக்குமோ என்று தடவியதோ இராமன் வாளி” என்று கதறி அழுதாள்.
“வெள்எருக்கஞ்சடைமுடியான்வெற்புஎடுத்த
திருமேனிமேலும்கீழும்
எள்இருக்கும்இடன்இன்றிஉயிர்இருக்கும்
இடன்நாடிஇழைத்தவாறோ?
கள்இருக்கும்மலர்க்கூந்தல்சானகியை
மனச்சிறையில்கரந்தகாதல்
உள்இருக்கும்எனக்கருதிஉடல்புகுந்து
தடவியதோ? ஒருவன்வாளி”
என்று ஏங்கினாள்; அவன் உயிரைத் தேடித் தன் உயிரை அனுப்பினாள்; அது திரும்பவே இல்லை.
முடிவுரை
நிகழ்ச்சிகள் வேகமாய்த் தொடர்ந்தன; வீடணன் இலங்கைக்கு ஆட்சிக்கு உரியன் ஆனான்; இலக்குவனைக் கொண்டு இராமன் அவனுக்குப் பட்டம் சூட்டினான்; அனுமன் அசோகாவனத்துக்குச் சென்று, சீதைக்குச் செய்தி சொல்லி, அவள் சோகத்தை மாற்றினான்.
அழைத்துவரப்பட்ட சீதை வரவேற்பில் ஒருதடை ஏற்பட்டது; இராமன் சராசரி மனிதனாய் நடந்து கொண்டான்; சீதையை ஏற்க மறுத்தான்; “பகைவன் பிடியில் இருந்த அவளை மாசுபடிந்தவள் என்று உலகம் நினைக்க வாய்ப்புண்டு” எனக் கருதி அவளை ஏற்கத் தயங்கினான்; “இவளா என் மனைவி?” என்ற நாடகத்தை நடித்துக் காட்டினான்.
இலக்குவன் பதறிப்போனான்; வானவர் அழுது விட்டனர்; பேய்களும் சீதைக்காகக் கண்ணிர் விட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யுத்தகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - இராமன், இராவணன், அவன், இலக்குவன், அவளை