கம்பராமாயணம் (உரைநடை) - சுந்தரகாண்டம்

அனுமன் கடலைக் கடத்தல்
கடலைக் கடப்பதற்கு அனுமன் தன் உடம்பைப் பெருக்க வேண்டுவதாயிற்று. மண்ணும் விண்ணும் நிறைந்த பேருருவம் எடுத்தான். அவன் தலை விண்ணை முட்டியது; அங்கே மண்ணவர் வியக்கும் துறக்க நாடு இருந்தது; சீதை அங்கு வாழ விரும்புபவள் அல்லள்; அதனால், அங்கு இருக்க அவளுக்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான்.
அவன் ஏறி நின்றது மகேந்திர மலை; விண்ணை முட்டும் அம் மலையில் இருந்த அவனுக்குப் பொன்னை நிகர்த்த இலங்கை கண்ணில் பட்டது. “செல்லும் இடம் அதுதான் என்ற தெளிவு ஏற்பட்டது. அதனால், எல்லை யில்லா மகிழ்ச்சி அவனைத் தழுவியது.
அங்கிருந்து அ வன் இலங்கை நோக்கிப் பாய்ந்தான்; கால்களை அழுத்தமாக அம் மலையில் ஊன்றினான்; வானரனாக இருந்தவன் வானவர்போல் அந்தரத்தில் பறந்தான், பறவை போலத் தன்னை மாற்றிக் கொண்டான்; வாலை உயர்த்தினான்; கால்களை மடக்கினான்; கழுத்தை உள் அடக்கினான்; காற்றிலும் வேகமாகத் தன் ஆற்றல் தோன்ற விண்ணில் பறந்தான். அவன் செல்லும் வேகத்தால் கல்லும் முள்ளும் மரமும் செடியும், கொடியும் அவனுடன் தோழமை கொண்டன; உடன் பயணம் செய்தன.
கடல் நீரைப் பார்த்தான்; அதன் அடியைக் கண்டான்; நாகர் உலகம் ஒளிவிட்டது; கடல் மீன்கள் அவனால் எழுந்த காற்றால் துடித்து இறந்தன; திக்கு யானைகள் எட்டும் திசை தடுமாறி நிலை குலைந்தன; அண்டங்கள் நடுங்கின; அண்டர் வியந்தனர்.
மலை குறுக்கிட்டது
விண்ணில் பறந்தபோது எதுவும் கண்ணில் படவில்லை; கொண்ட கொள்கை அண்ட முகட்டைத் தாவ உதவியது. கடலிலிருந்து மலை ஒன்று முளைத்தது; அது கண்டு அவன் மலைத்துப் போனான்; அவனோடு போட்டி போட்டிக் கொண்டு அஃது உயர உயர நிமிர்ந்தது; இவன் கால்பட்டு அதன் தலை சிதறியது; அது தலை கீழாய் உருண்டது; அசுரன் தலையில் கால் வைக்கும் காளிபோல் அதன்மீது நின்று, காளி நர்த்தனம் ஆடினான்; அது தன் உச்சியை அடக்கிக் கொண்டது; மானுடவடிவம் கொண்டு அவனிடம் வந்து மண்டியிட்டது. அதனை அண்ட ஒட்டாமல் அவன் அகலச் சொன்றான்.
“நீ யார்? ஏன் தொடர்கின்றாய்?” என்று வினவினான்
“நன்றி உடையேன்; அதனால், உன்னை நயக்கின்றேன்” என்றது.
“வெற்றியுடைய செய்தி இருந்தால் சொல்; வேகமாகப் போக வேண்டும்” என்றான்.
“மைந்நாகம் என்பது என் பெயர்; சிறகுகள் பெற்றிருந்தேன்; என் சிறகுகளை அறுக்க இந்திரன் என்னைத் தொடர்ந்தான்; நான் வேகமாய்ப் பறந்து செல்ல உன் தந்தை உதவினான்” என்றது.
காற்றில் மிதக்கும் கவிதையாய் இருந்தது அந்த சொற்கள் அவனுக்கு.
“நான் காற்றுக்குச் செய்யும் வந்தனை இது; நீ அதன் மைந்தன், இங்கு இருந்து உண்டு களைப்பாறிச் செல்க” என்றது.
“தான் காற்றின் மைந்தன் என்பதால் தன்னை உபசரிக்கக் கடலுள் மறைந்திருந்த மைந்நாக மலை மேல் எழுந்தது” என்பதை அறிந்தான் அனுமன்.
“நன்றி; நான் உல்லாசப் பயணம் மேற்கொண்டு உலகம் சுற்றச் செல்லவில்லை; கடமை எனக்குக் காத்திருக்கிறது; கடலைக் கடந்து காகுத்தன் துணைவி யைக் காண வேண்டும்; வேகமாகச் செல்கிறேன்; வழிவிடு” என்றான்.
அதன் வேண்டுகோளை ஏற்றுத் திரும்பி வரும்பொழுது தங்குவதாய்த் தெரிவித்தான். நந்தனுக்கு வழிவிட்ட நந்தியாய் அது வழிவிட்டுக் கடலுள் ஆழ்ந்தது.
சுரசை தடுத்தல்
அனுமன் ஆரணங்கினைக் கண்டு அறியக் கடலைக் கடக்கும் ஆற்றலும், அரக்கரை எதிர்க்கும் வீரமும் உள்ளனவா? என்று அறிய விண்ணிடை வாழும் தேவர் விரும்பினர். அதற்காகச் சுரசை என்ற அரமகள் ஒருத்தியை அரக்கி வடிவில் அவன்முன் அனுப்பி வைத்தனர்.
அவள் கடற்புயலை முன்நின்று தடுக்கும் பெருமலை போலக் குறுக்கே நின்றான்.
“அஞ்சனை மகனே! அரக்கி மகள் நான்; கோரப் பசியால் சோர்வுற்று இருக்கிறேன்; உன்னைத் தின்று சுவை காண விழைகிறேன்” என்றாள்.
பேருருவம் கொண்டு இடைமறித்த அவள், அங்காந்து நிற்க அவள் வாயில் புகுந்து வெளியேறினான்; உருவத்தைச் சுருக்கி, வாயுள்ளே புகுந்து வெளியே வந்து பிறகு உடம்பைப் பெருக்கிக் கொண் டான்; பேருருவம் படைத்த அவன், சிற்றுருவம் படைக்கவும் வல்லன் என்பதைக் காட்டினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுந்தரகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், கடலைக், அனுமன், நான், அவள், என்றது, அதனால், பேருருவம், கொண்டு