கம்பராமாயணம் (உரைநடை) - பாலகாண்டம்
“'தாடகை என்னும் தையலாள்தான் காரணம்” என்றார்.
“அரக்கி அவள்; இரக்கமில்லாதவள்; இந்தத் தண்டகாருணிய வனமே அவள் கொடுமைக்கு ஆளாகி விட்டது. சிங்கமும் புலியும்கூட அவளைக் கண்டால் அஞ்சி நடுங்கி விடும்; உயிர்களைக் கண்டால் அவள் செயிர் கொண்டு அழிப்பாள்; அவற்றின் குருதியைக் குடிப்பாள்; எலும்புகளை முறிப்பாள், ஆலகால விஷம் போலச் சுற்றுப் புறத்தைச் சுட்டு எரிப்பாள். அவள் இங்கு உலவித் திரிகிறாள்” என்று அவளைப் பற்றிய செய்திகள் அறிவித்துக் கொண்டு இருந்தார்.
தாடகை வருகை
அதற்குள் எதிர்பாரத விதமாகக் கோர வடிவம் உடைய அவ்வரக்கி அவர்கள்முன் வந்து நின்றாள். மனித வாடை, அவளை அங்குக் கொண்டுவந்து சேர்த்தது.
இடியின் ஒலியை இதுவரை வானின் மடியில் தான் கேட்டிருந்தார்கள். இப்பொழுது முதன்முறையாகப் பெண்ணின் குரலில் இடி பேசுவதைக் கேட்டார்கள்; மின்னல் என்பதை மழை மேகத்தில்தான் கண்டிருக்கிறார்கள்; அதைப் பின்னிய சடையுடைய அவ்வரக்கியின் கோரச் சிரிப்பில் காண முடிந்தது. அவள் மலை ஒன்று அசைந்து வருவதைப் போல அவர்கள்முன் நடந்து வருவதைக் கண்டனர்; பருவதம் அசையும்” என்பதை அவள் வருகையில் கண்டனர். வானில் கண்ட மதிப்பிறையை அவர்கள், அவள் கூனல் பற்களின் வளைவில் கண்டனர். வேள்வித் தீயில் காணும் தீப்பொறிகளை அவள் வேள்விக் குறிகளில் காண முடிந்தது. கண்கள் சிவந்து கிடந்தன. பசி என்பதற்கு எரிமலையின் வடிவம் உண்டு என்பதை நெறி தவறிய அவள் இரைச்சலில் கண்டனர்.
தாக்கும் போக்கில் அவர்களை நோக்கி நடந்தாள். “உங்கள் சடைமுடி என்னை ஏமாற்றாது; நீங்கள் மணிமுடி தரிக்கும் மன்னவனின் சிறுவர்கள் என்பது எனக்குத் தெரியும்; வற்றி உலர்ந்த தவசிகளைப் பற்றித் தின்று என் பற்கள் கூர் மழுங்கிவிட்டன. செங்காயாகச் சிவந்து கிடக்கும் கனிகள் நீங்கள்; சுவை மிக்கவர்கள், நவை அற்றவர்கள்; நெய்யும் சோறும் நித்தம் தின்று கொழு கொழுத்து உள்ள மழலைகள் நீங்கள்; காத்திருந்த எனக்கு வாய்த்த நல் உணவாக அமைகிறீர்கள்” என்று சொல்லிக் கொண்டு சூலப்படை எடுத்து அந்த மூலப்பொருளை நோக்கி எறிந்தாள். வில் ஏந்திய வீரன் இராமன் தன் விறலைக் காட்ட அம்பு ஒன்று ஏவினான். அது அவள் ஏவிய சூலத்தை இருகூறு ஆக்கியது; சூலம் தாங்கிய அவள், அதை இழந்து ஒலம் இட்டாள். மறுபடியும் அவள் போர்க் கோலம் கொண்டாள்.
பெண் என்பதால் அவளைக் கொல்லத் தயங்கினான். அவள் பேயாக மாறிவிட்டதால் அவளை அடக்க வேண்டியது அவன் கடமையாகியது. மெல்லியல் என்ற சொல்லியலுக்கு அவளிடம் எந்த நல்லியலும் காணப்படவில்லை. அவள் அடங்கி இருந்தால் இவன் முடங்கி இருப்பான்; அவள் போர் தொடங்குவதால் இவன் செயல்பட வேண்டியது ஆயிற்று.
“சேலை கட்டியவள்; அவள்மீது வேலை எறிவது தகாது” என்று எண்ணினான். அடித்துத் துரத்துவது என்று ஆரம்பத்தில் எண்ணினான். அதற்கு முனிவனின் அனுமதி கிடைக்கவில்லை. தம்மோடு தங்கை பிறவாத வெறுமை அவளிடம் அன்பு காட்டச் செய்தது. பெண் கொலை புரிதல் பெரும்பழி உண்டாக்கும் என்று தயங்கினான். ஆவும், ஆனியல் பார்ப்பனரும், பெண்டிரும், மகவு பெறாதவரும் களத்தில் அனுமதிக்கப்படுவது இல்லை; களத்தில் எந்தப் பெண்ணும் நின்று போராடியது இல்லை; இவன் கற்ற கல்வி, அவளைக் கொல்லத் தடையாக நின்றது.
“கொலையிற் கொடியரைக் களைதல் களை பிடுங்குதற்குச் சமமாகும். அது நாட்டு அரசனின் கடமையாகும். தீயவரை ஒழித்தால்தான் உலகில் நன்மை நிலைத்திருக்கும். அறம் நோக்கி அழிவு செய்வது ஆளுநரின் கடமையாகும்.
“நீ தனிப்பட்ட மனிதன் என்றால் தயங்கலாம்; நீ அரச மகன்; உனக்குத் தீயோரை ஒறுத்தல் கடமை யாகும்; இது உன் தந்தை செய்ய வேண்டிய கடமை; அதை அவர் இதுவரை செய்யாமல் தாமதித்தது பெருந் தவறு; நீ அவளை இரக்கம் காட்டி, விட்டுவிட்டால், “'நீ அஞ்சி அகன்றாய்” என்று உலகம் பேசும்; “கோழை” என்று ஏழையர் பலர் கூறுவர்; தருமத்தின் முன்னால் ஆண் பெண் பேதம் பார்ப்பது ஏதம் தரும்; வேதமும், பெண் ஆயினும் அவள் தவறு செய்தால் ஒறுப்பதை அனுமதிக்கிறது. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று பேசிப் பேதம் காட்டுவது அரச நெறியாகாது”.
“மேலும் அவள் தாக்க வந்தவள்; அவள் உயிர் போக்குவது ஆக்கமான செயலே. “கொடியவள் ஒருத்தியை வீழ்த்தினாய்” என்று உன் புகழை உலகம் பேசும்” என்றார்; முன்னோர் பலர் தவறு செய்த பெண்களைத் தீர்த்துக்கட்டிய சான்றுகளை அவன் முன் வைத்தார்.
இராமன் அவர் கூறியவற்றைப் பொறுமையாய்க் கேட்டான்; இனித் தாமதித்துப் பயனில்லை.
“விசுவாமித்திரர் வாக்குதான் வேதவாக்கு; அதற்குமேல் சான்றுகள் தேவை இல்லை” என்பதை உணர்ந்தான்; அதற்குமேல் வாதங்கள் தொடரவில்லை.
அம்பு துளைத்தல்
இராமன் ஏவிய முதல் அம்பு, அவள் சூலத்தை முறித்தது; அடுத்து விட்ட அம்பு அவள் மார்பகத்தைத் துளைத்து முதுகு புறம் வெளியேறியது. கல்லாத மடையர்களுக்குச் சொல்லும் நல்லுரைகள் அவர்கள் வாங்கிக் கொள்வது இல்லை; உடனே அவர்கள் அதைவிட்டு விடுவார்கள். அதுபோல அவ் அம்பு அவள் மார்பில் நிற்காமல் வெளியேறிவிட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவள், அம்பு, என்பதை, கண்டனர், பெண், இவன், தவறு, இல்லை, நோக்கி, அவளைக், கொண்டு, அவளை, நீங்கள், இராமன்