கம்பராமாயணம் (உரைநடை) - பாலகாண்டம்
ஆசிரமங்கள் அவர்களுக்குப் பசும்புல் விரிப்புகளைப் பரப்பி, வரவேற்புச் செய்தன; காட்டு மரங்கள் காற்றில் அசைந்து அவர்களோடு கவிதைகள் பேசின; மனிதர்களைப் போலவே தாவரங்கள், மரம், செடி, கொடிகள் அவர்களிடத்தில் பாசமும், பரிவும் காட்டின; விலங்குகளும் தத்தமக்கு உரிய நெறிகளின் படி உலவிச் செயல்பட்டுத் திரிவதைக் கண்டனர். தேவைக்கு மேல் அவை உயிர்களைக் கொன்று தின்பதில்லை; தேடித் திரிவதுமில்லை; மனிதன் தேவைக்கு மேல் பொருள் திரட்டுவதைக் கண்டு பழகிய அவர்களுக்கு அம்மிருகங்கள் மதிக்கத்தக்கவையாக விளங்கின. மாந்தர்விடும் மூச்சில் கலந்துள்ள அசுத்தங்களைத் தாம் வாங்கிக் கொண்டு காற்றைத் துய்மைப்படுத்தி உதவும் தாவரங்களின் உயர்வை அறிய முடிந்தது. தீமை செய்பவர்க்கும் தாம் உள்ள அளவும் நன்மை செய்யும் நல்லியல்பு அவற்றிடம் காண முடிந்தது. தம்மை வெட்டிக் கீழே சாய்க்கும் முரடனுக்கும் காயும், கனியும் நறுநிழலும் தந்து உதவும் அவற்றின் உயர்வைக் காணமுடிந்தது. பூத்துக் குலுங்கும் பூவையரின் எழிலையும் பொலிவையும் செடி கொடிகளிடம் முழுமையாகக் காண முடிந்தது.
காமாசிரமம்
சரயூநதிக் கரையில் சஞ்சரித்த அவர்கள், பசுமையான சோலை ஒன்றனைக் கண்டனர். அதில் தவசியர் வசிக்கும் குடில்கள் மிக்கு இருந்தன. அம் முனிவர் இவர்களைக் கண்டதும் பேருவகை அடைந்தனர்; வரவேற்பும், உண்டியும், இடமும் தந்து உபசரித்தனர்; எழில்மிக்க பொழில்கள் சூழ்ந்த ஆசிரமத்தில் இரவுப் பொழுதைக் கழித்தனர்.
பொழுது புலர்ந்தது; அந்த ஆசிரமம் அவர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அதன் ஆதி அந்தத்தைக் கேட்டு அறிய அவாவினர். அதன் பெயரே புதுமையாய் இருந்தது. “காமாசிரமம்” என அது வழங்கப்பட்டது. காமத்தை ஒழித்து, ஏமநெறி காணும் முனிவர்கள், தாம் வாழும் இடத்துக்கு இப் பெயர் சூட்டியுள்ளமை வியப்பைத் தந்தது. “இதற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்க வேண்டும்” எனக் கருதினர். ஆரண வேதியனை அணுகி, “இப்பெயர் இதற்கு அமையக் காரணம் யாது?” என்று வினவினர்.
“மலரம்புகளை விட்டு மற்றவரை எரிக்கும் காமன் இங்கே எரிபட்டான்; அதனால், இந்த இடம் “காமாசிரமம்” என வழங்கலாயிற்று” என்றார்.
“'காமன் கூடவா தவம் செய்ய இங்கு வந்தான்?'?
“செய்கிற தவத்தைக் கெடுக்க அவன் அம்புகளைத் தொடுக்க, அது சிவன் மேல்பட, அவர் சினந்து எரிக்க, அவன் சாம்பல் ஆனான்” என்று கூறினார்.
“மதன் மதம் அழிந்து, அவன் அதம் தீர்ந்து, அழிந்து ஒழிந்தான்” என்பதைக் கேட்ட இவர்கள், “ஆழம் தெரியாமல் காலைவிட்டால் இந்தக் கதிதான் நேரும்” என்று பேசிக் கொண்டார்கள்.
“மன்மதன் எரிந்து விட்டானா?” என்று இளையவன் கேட்டான்.
“எரிந்தாலும் அவன் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறான்” என்று முனிவர் விடை தந்தனர்.
இந்தக் கதை கேட்பதற்குச் சுவையாக இருந்தது. காணும் இடம் எல்லாம் அது கதைகளைப் பெற்றிருந்தது. முனிவர்களின் அற்புதங்கள் சொற்பதங்களாகப் பேசப்பட்டன. இதைப் போலவே காணும் காட்சிகள், செல்லும் இடங்கள், கடக்கும் ஆறுகள், தங்கும் சோலைகள் இவற்றின் பெயர்களையும் வரலாறுகளையும் கேட்டு அறிந்தனர்; நடை வருத்தம் மறந்தனர்.
அவர்கள் கடக்கும் வழியில் வெப்பம்மிக்க பாலை நிலம் ஒன்று குறுக்கிட்டது. அறம் சாராதவர் மூப்புப் போல் அது அழிவைப் பெற்று இருந்தது. குடிக்க நீரும், உண்ண உணவும், தங்க நிழலும் கிடைக்காத கொடிய காடாக இருந்தது. காட்டு விலங்குகளும் அந்த மேட்டு நிலத்தில் நடப்பதைத் தவிர்த்தன. அதன் வெப்பம் தாங்க வொண்ணததாய் இருந்தது. அதை நீக்கும் செப்பம் தேவைப்பட்டது. மாமுனிவன் உபதேசித்த மந்திரங்களைச் சொல்லி, இவர்கள் பசியும் நீர் வேட்கையும் நீங்கினர். சுற்றுப்புறம் வெம்மை நீங்கித் தண்மை அளித்தது. “அம் மந்திரம் பிரம்ம தேவனால் விசுவாமித்திரருக்கு அளிக்கப்பட்டது” என்பதைக் கேட்டு அறிந்தனர்.
பாலை நிலம்
இதுவரை நடந்து வந்த வழிகளில் எல்லாம் பசுஞ்சோலைகளைக் கண்டவர், இங்கு மட்டும் ஒரு பாலை நிலம் இருப்பது வியப்பைத் தந்தது. செடிகள், கொடிகள், மரங்கள் பிடுங்கி எறியப் பெற்றுச் சருகுகளாக உலர்ந்து கிடந்தன. யாளிகளும், யானைகளும், மானும், மாடுகளும் உலவித் திரிந்த இடம் அது; அவற்றின் வற்றி உலர்ந்த எலும்புக் கூடுகள் அவற்றின் சரிதத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தன; சிங்கமும் புலியும் ஒன்று இரண்டு ஒதுங்கித் திரிந்து கொண்டிருந்தன. அவையும் சினம் அடங்கிச் சிறுமை உற்று இருந்தன. அங்கே வாழ்ந்த உயிரினங்கள் என்ன ஆயின? களப்பலி கொள்ளும் காளி கோயில் முற்றம்போல் இரத்தம் புலர்ந்த தரைகளும், எலும்பின் சிதைவுகளும் புலால் நாற்றம் வீசிக் கொண்டிருந்தன. அழிவுச் சின்னங்கள் அலங்கோலப் பின்னங்கள் அவற்றின் வரலாற்றைக் கேட்க ஆர்வத்தைத் துண்டின.
“இவை அரக்கர்களின் அழிவுச் செயலாகத்தான் இருக்க வேண்டும்; இதற்குக் காரணம் யார்?” என்று இளைஞர் வினவினர். மாமுனிவருக்குப் பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது. எதைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரோ அதைச் சொல்லத் தக்கதொரு வாய்ப்புக் கிடைத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், அவற்றின், இடம், நிலம், பாலை, காரணம், காணும், முடிந்தது, இருந்தன, கேட்டு, தாம்