கம்பராமாயணம் (உரைநடை) - பாலகாண்டம்
அக்கால வழக்கப்படி இம்மகவு வேள்வி இயற்றுதற்குமுன் மற்றோர் வேள்வி இயற்ற வேண்டும் என்ற மரபு இருந்தது. இதற்கு அசுவமேதயாகம் என்று பெயரிட்டனர். மாபெரும் மன்னர், தம் வெற்றிச் சிறப்பைத் திக்கு எட்டும் அறியச் செய்ய விரும்பினர். அடக்க முடியாத குதிரை ஒன்றினை முன் அனுப்பி அதனை மடக்குபவரை எதிர்க்கப் படைகள் பின் தொடர்ந்தன. அதனைக் கட்டி வைப்பவர் மாவீரன் என்ற புகழ் பெறுவர்; அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றுத் திறை பெற்றுத் தம் இறையிடம் சேர்த்தனர். சிற்றரசர்கள் அடி பணிந்து பேரரசனின் ஆணையை ஏற்றனர். அரசன் மாமன்னன் என்று புகழப்பட்டான். தசரதனும் இப்பரிவேள்வியைச் செய்து முடித்துவிட்டுப் பின் இம்மகவு நல்கும் நல்வேள்வி நடத்தினான்.
தெய்வங்கள் புகழ்ச்சிக்கும் வழிபாட்டுக்கும் மகிழ்ந்து கேட்ட வரங்களைக் கொடுத்து வந்தன. தவம் செய்வோர்க்கு ஆற்றலையும், ஆயுளையும் தந்தன. அசுரர்களும் அமரர்களும் மாறிமாறித் தவங்கள் செய்து சிவனிடமும் பிரமணிடமும் வேண்டிய வரங்களைப் பெற்றனர். வரங்களைப் பெற்றதும் தம் தரங்களை மறந்து, உரம் கொண்டு முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் இடையூறு விளைவித்தனர்.
அரக்கர்களை எதிர்க்கும் ஆற்றல் இல்லாத தேவர்களும், மாமுனிவர்களும் தெய்வங்களை அடைந்து தம்மைக் காக்கும்படி வேண்டினர். வரம் கொடுத்த தெய்வங்களே வழி தெரியாமல் திகைத்தன. பிரமனும் சிவனும் பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரமனிடம் சென்று முறையிட்டனர்; அவர்களோடு இந்திரனும் சென்றான்.
திருவுறை மார்பன் ஆகிய திருமால் அருள் செய்ய வந்து, அவர்களுக்கு ஆறுதல் உரை கூறினார். தெய்வங்கள் தந்த வரத்தை மானுடனே மாற்ற முடியும் என்று கருதித் தான் மானுட வடிவம் எடுத்துத் தசரதன் மகனாய்ப் பிறந்து, அந்தக் கொடியவரை வேர் அறுப்பதாய் வாக்களித்தார். அங்கு முறையிட வந்த வானவர்கள், தாமும் மண்ணில் வானரராகப் பிறந்து உதவுவதாய் உறுதி அளித்தனர். அவனுக்கு “வண்ணப் படுக்கையாய் இருந்த ஆதி சேடன், இலக்குவனாகப் பிறக்க” என்று ஆணையிடப் பட்டது; “தம் கைகளில் தங்கி இருந்த சங்கு சக்கரங்கள் பரத சத்தருக்கனர்களாகப் பிறக்க” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தெய்வங்கள் நேரிடையாகக் களத்தில் இறங்கத் தயங்கினர். அவர்கள் குரங்களுக்குத் தலைமை தாங்கினர். இந்திரனின் கூறு, வாலியாகவும், அங்கதனாகவும் செயல்பட்டது; காற்றின் மைந்தனாக ஆற்றல் மிக்க அனுமன் பிறந்தான். பிரமனின் கூறாகச் சாம்பவான் ஏற்கனவே பிறந்திருந்தான் என்பது அறிவிக்கப்பட்டது. “அனுமன் காற்றின் மைந்தன்; எனினும், சிவனின் சீற்றமும், ஆற்றலும் விரச் செயலும் அனுமன்பால் அமையும்” என்று அறிவிக்கப்பட்டது.
தெய்வ நகர்களில் தேவர்களும், தெய்வங்கள் மூவரும் முன் பேசிய பேச்சுரைகள் இப்பொழுது செயற்படும் காலம் வந்துவிட்டது என்பதை வசிட்டர் உணர்ந்தார். திருமால் தசரதன் மகனாய்ப் பிறப்பார் என்பதை அறிந்து செயல்பட்டார்; மகனை நல்கும் வேள்வி செய்விக்க வழி வகைகளைக் கூறினார்.
“வேள்விக்குரிய ஆசான் யார்? அவர் எங்கு இருக்கிறார்? எப்படி அவரை அழைத்து வருவது” என்ற முறைகளைக் கேட்டுத் தசரதன் செயல்பட்டான். “வேள்வி ஆசான் அதற்குத் தகுதி, கலைக்கோட்டு மாமுனிவர்க்குத் தான் உளது” என்று வசிட்டர் அறிவித்தார். அவரை ருசிய சிருங்கர் என்றும் கூறுவர். அவர் அங்க நாட்டில் தங்கி இருக்கிறார் எனவும், உரோம பாதர் அந்நாட்டு அரசன் எனவும், அவர் தம்மகளை இம் முனிவருக்கு மணம் முடித்துத் தம் அரண்மனையில் மருகனாய் இருக்க வைத்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டன.
“அங்க நாட்டிற்கு அக் கலைகோட்டு மாமுனிவர் செல்லக் காரணம் யாது?” என்று தசரதன் வினவினான்.
கலைக்கோட்டு மாமுனிவர் வரலாறும் அழைப்பும்
அங்க நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாமல் பொய்த்துவிட்டது. பஞ்சமும் பசியும் மக்களை அஞ்ச வைத்தன. ‘நல்லார் ஒருவர் இருந்தால் அவர் பொருட்டு மழை எல்லார்க்கும் பெய்யும்’ என்று கூறுவார்கள். எனவே நன்மை மிக்க அம்முனிவர் இருக்கும் இடம்நாடி அவரைத் தம் மண்ணை மிதிக்க வைத்தனர்.
கலைக்கோட்டு மாமுனிவர் விபாண்டன் என்னும் தவ முனிவரின் ஒரே மகன்; அவர் வெளியுலகப் பாதிப்புகள் இல்லாமல் வளர்க்கப்பட்டார்,‘காமம்’ என்பதன் நாமமே அறிய முடியாதபடி அவர் வளர்ந்தார்; காட்டில் திரியும் மான்! அதற்குக் கொம்பு உண்டு. மகளிர்க்கு வம்பு செய்யும் வனப்பு உண்டு; அவரைப் பொறுத்தவரை மானுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடே இல்லை; கச்சணிந்த மாது ஆயினும், இச்சையைத் துண்ட இயலாதபடி அவர்களிடமிருந்து ஒதுக்கி அவர் வளர்க்கப்பட்டார். காட்டுச் சூழலில் தவசிகள் மத்தியில் வாழ்ந்ததால் நகர மாந்தர்தம் ஆசைகள் அவருக்கு அமையவில்லை. “சுத்தம் பிரமம்” என்று சொல்லத்தக்க நிலையில் ஞானியாய் வாழ்ந்து வந்தார். அவரை மயக்கி நகருக்கு அழைத்து வர அந்த நாட்டு நங்கையர் சிலர் முன்வந்தனர்.
அவர்கள் அரசன் உரோமபாதரிடம் “கலைக் கோட்டு முனிவனைத் தம்மால் அழைத்து வரமுடியும்” என்று உறுதி தந்திருந்தனர்; அவர்கள் ஆடல் பாடலில் வல்ல அழகியர். அரசனும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான்; கட்டற்ற செல்வத்தை அவர்களுக்கு வாரி வழங்கினான்; ஆடை அணிகள் தந்து, அவர்களைச் சிறப்பித்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவர், தெய்வங்கள், தசரதன், எனவும், மாமுனிவர், கலைக்கோட்டு, அவரை, வேள்வி, அரசன், அழைத்து